Advertisement

பசுமை வீடு திட்டத்தில் சொந்த வீடு நனவாகுமா?தேயிலை தொழிலாளர்கள் பரிதவிப்பு

வால்பாறை :தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் தமிழக அரசு வீடு கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், போதிய வசதிகளில்லாத குடியிருப்புகளில் அவர்கள் தவித்து வருகின்றனர்.கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதியில் தேயிலை, காபி,ஏலம், மிளகு போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்து தோட்டப்பயிர்கள் இந்தப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ளன. வால்பாறை மலைப்பகுதியில் தோட்ட பயிர்கள் பயிர் செய்திட, ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசு எஸ்டேட் நிர்வாகத்திற்கு தேயிலை விவசாயம் செய்ய இடம் வழங்கியது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள், வால்பாறையில் கடந்த நுாறு ஆண்டுகளுக்கு முன்பு குடியேறி, மூன்று தலைமுறையாக தேயிலை தொழிலில் ஈடுபட்டுள்ளனர். வால்பாறையில் உள்ள, 40 க்கும் மேற்பட்ட தேயிலை எஸ்டேட்டுகளில், தற்போது, 35 ஆயிரம் தொழிலாளர்கள் மட்டுமே தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு அந்தந்த எஸ்டேட் நிர்வாகத்தின் சார்பில் குடியிருக்க வீடு மற்றும் இதர சலுகைகள் வழங்கியுள்ளது.
ஆனால், மிகவும் நெருக்கடியான சூழலில் எஸ்டேட் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இதனிடையே வால்பாறையில் சமீப காலமாக வனவிலங்குகளின் அச்சுறுத்துதலாலும், விலைவாசிக்கு ஏற்ற சம்பளம் கிடைக்காததாலும், தொழிலாளர்களுக்கு நிரந்தரமாக குடியிருக்க வீடு இல்லாததாலும், அவர்கள் எஸ்டேட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அவர்கள் வசிக்கும் வீடு அவர்களுக்கே சொந்தமாக்கப்படவேண்டும் அல்லது தமிழக அரசின் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தர வேண்டும் என்பது தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட் பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்களை எஸ்டேட் நிர்வாகங்கள் ஆக்கிரமிப்பு செய்து, அங்கு தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. எனவே அரசு வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியை மீண்டும் சர்வே செய்து, ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, அந்த இடத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு பசுமைவீடு கட்டித்தர வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டு வருகிறது.
தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் கேட்ட போது, மலைப்பகுதியில் உறையவைக்கும் குளிர், மழை, கொளுத்தும் வெயிலிலும், அட்டைப்பூச்சிக்கு ரத்தம் சிந்தி நாள் முழுவதும் தேயிலை பறித்தாலும், உழைப்புக்கேற்ற சம்பளம் வழங்கப்படுவதில்லை.வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் உயிரை பணயம் வைத்து தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடுகிறோம். எங்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ற வகையில் சம்பளம் வழங்கப்படுவதில்லை.வேளைப்பளுவும் அதிகரித்துள்ளது. எனவே வயதான காலத்தில் உடல் வலுவிழந்த நிலையில் நாங்கள் வசிக்கும் வீடுகள் எங்களுக்கே சொந்தமாக்கப்படவேண்டும். அல்லது அரசின் பசுமை வீட்டு திட்டத்தின் கீழ் வால்பாறை நகரில் வீடுகட்டித்தர வேண்டும். இவ்வாறு தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
நடவடிக்கை எடுக்கப்படும்
வால்பாறை எம்.எல்.ஏ.,கஸ்துாரிவாசு கூறுகையில், ''எஸ்டேட் பகுதியில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு அந்த இடத்தில் தொழிலாளர்களுக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடுகட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு பெற்றுத்தரவும், தேயிலை அல்லாத மாற்றுத்தொழில் ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை அரசை வலியுறுத்தி வருகிறேன்,'' என்றார்.
மாற்றுத்தொழில் அவசியம்
வால்பாறையில் படித்த பட்டதாரி இளைஞர்கள் வேலை தேடி வெளியூர் செல்வதை தடுக்கும் வகையில், வால்பாறை நகரில் தேயிலை அல்லாத மாற்றுத்தொழில் ஏற்படுத்த வேண்டும். வால்பாறை மலைப்பகுதி மக்களுக்கு ஆயிரம் பிரச்னை இருந்தாலும், தேர்தல் நேரத்தில் மக்களிடம் தெரிவித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றித்தரவேண்டும் என்பது வால்பாறை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement