Advertisement

கல்குவாரிகளில் நீர் திருட்டு அதிகரிப்பு - சென்னை குடிநீருக்கு புதிய சிக்கல்

கல்குவாரி குட்டைகளில் நீர் திருட்டு அதிகரித்துள்ளதால், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு, நாள்தோறும், 83 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி ஆகிய நான்கு ஏரிகள், வறண்டுவிடும் கட்டத்தில் உள்ளன. இதனால், தென்சென்னையை ஒட்டி உள்ள, காஞ்சிபுரம் மாவட்டத்தின் கல்குவாரி குட்டைகளில் உள்ள நீரை, குடிநீருக்கு பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.இதற்காக, மாங்காடு, திருநீர்மலை, பம்மல், நன்மங்கலம், குன்றத்துார் உள்ளிட்ட இடங்களில், 31 கல்குவாரி குட்டைகளை, சென்னை குடிநீர் வாரியம் தேர்வு செய்துள்ளது. இந்த கல்குவாரி குட்டைகளில் இருந்து நீர் எடுப்பதற்கான ஏற்பாடுதீவிரமாக நடந்து வருகிறது.இந்த நீரை வைத்து, சென்னையின், இரண்டு மாத குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். இந்நிலையில், குடிநீர் வாரியம் தேர்வு செய்த கல்குவாரிகள் மட்டுமின்றி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, 70க்கும் அதிகமான கல்குவாரிகளில் இருந்தும், தனியார் தேவைக்காக, நீர் திருடுவது அதிகரித்துள்ளது. பொதுப்பணித்துறை, குடிநீர் வாரியம், காவல் துறை, உள்ளூர் அரசியல்வாதிகள் ஆசியுடன், இந்த நீர் திருட்டு அரங்கேறி வருகிறது.சென்னையில் உள்ள ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவற்றின் தேவைக்காக, இந்த தண்ணீர் எடுத்து செல்லப்பட்டு வருகிறது. இதேநிலை தொடர்ந்தால், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, கல்குவாரிகளில் அதிகாரிகள் ஆசியுடன் நடக்கும் நீர் திருட்டை தடுப்பதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.
-நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement