Advertisement

விதியை வென்ற வீரர்கள் - இன்று ஜாலியன் வாலாபாக் தினம்

இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் இன்றைய தினம், காலத்தால் அழிக்க முடியாத, மக்களால் மறக்க முடியாத ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தேறிய தினம். இந்திய மக்கள் அனைவரின் ரத்தத்தையும் உறைய வைத்த ஜாலியன் வாலாபாக், உலக சரித்திரத்தில் ஒரு அழியாத இந்த கரும்புள்ளி. இது அமிர்தசரஸ் படுகொலை என்றும் அழைக்கப்படுகிறது.

ஒத்துழையாமை இயக்கம் : அமிர்தசரசில் ஜாலியன் வாலாபாக் என்ற பொது பூங்காவில் வெள்ளை காலனி ஆதிக்கத்தால் ஏவிவிடப்பட்ட துப்பாக்கிக் குண்டுகள், அப்பாவி மக்களை கொன்று குவித்தது. ஜெனரல் டயர் என்பவரால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிய மைதானம் சுடுகாடாகியது. இந்த கோரச் சம்பவத்தில் பிரிட்டிஷ் அரசின் தகவல்படி 379 பேர் இறந்ததாகவும், 1100-க்கு மேல் காயம்பட்டதாகவும் சொல்லப்பட்டிருந்தது.ஜாலியன் வாலாபாக்கில் ஏன்
அத்தனை மக்கள் கூடியிருந்தார்கள்? யாருக்காக கூடிய கூட்டம்?ரவுலட் என்பவர் தலைமையில் ஒரு குழு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அமைக்கபட்டது. இச்சட்டத்தின் படி விடுதலை போராட்ட வீரர் என சந்தேகப்படும் யாரையும் விசாரணையின்றி, கைது செய்து எவ்வளவு காலம் வேண்டுமானாலும் சிறையில் வைத்திருக்கலாம். அவர்கள் வழக்கறிஞர் வைத்து வாதாடவும் அனுமதி இல்லை.இந்த சட்டங்கள் தேவை இல்லை என்று அறிவித்து, காந்தி ஒத்துழையாமை இயக்கம் நடத்த திட்டமிடுகிறார். காந்தியின் இந்த அணுகுமுறை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 1919 ஏப்ரல் 6-ல் பந்த் நடத்த அழைப்பு விடுக்கிறார். இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக ஊர்வலத்தில் பங்குபெற்றனர். அப்போது அங்கு அடக்கு முறைகளுக்கு எதிரான கோஷம் எழுப்பப்படுகிறது.
மைதானத்தில் சிவப்பாறுபொங்கி எழுந்த ஆங்கிலேயர்கள் இந்த மாபெரும் ஒற்றுமைக்கு யார் காரணம் என்று, விசாரித்ததில் டாக்டர் சைபுதீன் கிச்சுலு, டாக்டர் சத்யபால் என்ற இருதலைவர்கள் தான் காரணம் என தெரிந்து, ஆங்கிலேயர்கள் இருவரையும் கைது செய்கிறார்கள். இவர்கள் இருவரையும் நாடு கடத்தவும் திட்டமிட்டிருந்தனர் ஆங்கிலேயர்கள்.மக்கள் இதை கண்டித்து ஏப்ரல் 13-ல் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் கண்டனக் கூட்டம் நடத்த முடிவு செய்தனர்.
13 ஏப்ரல் 1919 அன்று சீக்கியர்களின் புத்தாண்டு தினம்,அறுவடைத் திருநாளாக இருந்ததால் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஒன்றுகூடினர். கூட்டம் துவங்கிய ஒரு மணி நேரத்திற்கு பின் ஜெனரல் டயர் தன், வாகனங்களில் 'மெஷின் கன்களை' எடுத்துக் கொண்டு வர, வெளியேற இருந்த ஒரே ஒரு குறுகலான பாதையையும் அடைத்துக் கொண்டார்கள். அப்போது ஜெனரல் டயர், கூடியிருந்த மக்கள் மீது கொடூரமாக துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட, தப்பும் வழியின்றி மக்கள் இங்குமங்கும் முண்டியடித்து ஓடினர். துப்பாக்கி சூட்டிலிருந்து தப்பிக்க, திடலின் நடுவிலிருந்த கிணற்றில் வீழ்ந்தனர். நெரிசலிலும் பல பேர் இறந்து போனார்கள். ஜாலியன் வாலாபாக் மைதானம்முழுவதும் ஒரே மரண ஓலம். ரத்தத்தால் மைதானம் முழுவதும் சிவப்பாறு ஓடிக் கொண்டிருந்தது.

தீர்ந்துபோன துப்பாக்கி குண்டுகள் : 'சுட்டேன், சுட்டேன், எனது குண்டுகள் தீரும் வரை சுட்டேன்' என்று, கொக்கரித்த ஜெனரல் டயரால், அமிர்தசரஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் தெருக்களில் ஊர்ந்து செல்ல வேண்டுமென உத்தரவிட்டான். சந்தேகப்பட்டவர்கள் அனைவருக்கும் கசையடி கொடுக்கப்பட்டது. மாகாண ஆளுநர் மைக்கேல் டயர், ரெஜினாலட் டயர் செய்ததை சரி என்று ஆதரித்தான். நீங்கள் செய்த செயல் சரியானது. ஆதை நான் அங்கீகரிக்கிறேன் என்று சொன்னான்.

வருத்தம் இல்லை : ஹண்டர் கமிஷன் இந்நிகழ்வை விசாரிக்க அமைக்கப்பட்டது. நான் மக்களை சுடவேண்டும் என்று முடிவு செய்து கொண்டு தான் வந்தேன். மெஷின் கன்கள்வைத்திருந்த வாகனங்கள் உள்ளே வரும் அளவுக்கு இடமில்லை. இல்லையென்றால் இன்னமும் பல பேரை கொன்றிருப்பேன். இதில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. அவர்களை நான் எச்சரித்திருக்கலாம். ஆனால், அப்படி எச்சரித்து துரத்தி இருந்தால் மீண்டும் வந்து என்னைப் பார்த்து சிரித்து இருப்பார்கள். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு போக நான் எண்ணவில்லை. அது என் வேலையும் இல்லை. குண்டுகள் தீர்ந்து போய் விட்டதாலேயே இவ்வளவு குறைவாக மக்களை கொல்ல முடிந்ததாக வருத்தமும் தெரிவித்தான் டயர்.

தண்ணீர் கொடுத்த சிறுவன் : ஹண்டர் கமிஷன் இந்த படுபாதகனுக்கு கொடுத்த தண்டனை என்ன தெரியுமா? பிரிட்டனுக்கு திரும்ப அழைத்துக் கொண்டது தான். அதுவும் நெருக்கடி காரணமாக வெறுமனே பதவியை விட்டு மட்டும் அனுப்பினார்கள். இங்கிலாந்தில் உள்ள 'மார்னிங் போஸ்ட்' என்ற, பத்திரிகை ஜெனரல் டயருக்கு நிதி திரட்டி அந்த கொலை பாதகத்தை
கொண்டாடியதோடல்லாமல் டயரை 'வெற்றி நாயகன்' என்று, பாராட்டி எழுதியது.
இந்த சம்பவம் இந்தியாவை அதிர்ச்சியில் உறைய வைத்தது. அதுவரை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நடந்து வந்த போராட்டங்கள் மேலும் அதிகரித்தன. பிரிட்டிஷ் அரசு தனக்கு வழங்கிய பட்டத்தை திருப்பிக் கொடுத்தார் ரவீந்திரநாத்தாகூர். பிரிட்டிஷ் அரசு வழங்கிய 'கைசர் இ ஹிந்து' பதக்கத்தை திருப்பிக் கொடுத்தார் காந்தி.

ஜாலியன் வாலாபாக்கில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த மக்களுக்கு ஓடி, ஓடி தண்ணீர் கொடுத்த சிறுவன் உத்தம்சிங்கை இக்கொடூர செயல் பெரிதும் உலுக்கியது. இக்கொடூர செயலுக்கு காரணமாக விளங்கிய பஞ்சாப் கவர்னர் மைக்கேல் ஓ டயர் மற்றும் ஜெனரல் டயரை பழிவாங்குவேன் என்று பொற்கோவிலில் சபதம் செய்தார்.சுதந்திர போராட்ட வீரர் இந்த படுக்கொலைக்கு நேரடிக் காரணமானவர்கள் இருவர். ஒருவன் கொலை படைக்குத் தலைமையேற்ற தளபதி டயர், மற்றவர் உத்தரவிட்ட மைக்கேல் ஓ டயர். ஜெனரல் டயர் ஏற்கனவே நோயால் இறந்தான். ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்து 21 ஆண்டுகளுக்கு பின், 1940 மார்ச் 13ல், லண்டன் காக்ஸ்டன் ஹாலில் ஒருகூட்டத்தில் மைக்கேல் ஓ டயர் மேடையை நோக்கி பேச செல்லும் போது உத்தம்சிங் இருமுறை சுட்டார், டையர் உயிர் போனது.உத்தம் சிங்கின் செயலை நேதாஜி பாராட்டினார்.

இந்தியாவின் மாவீரன் : ஜெர்மனி வானொலி நிலையம் ஒடுக்கப்பட்ட மக்கள் துப்பாக்கி குண்டுகளால் பேசிவிட்டனர் என்றது. பெர்லின் பத்திரிகை உத்தம்சிங் இந்திய சுதந்திரத்தின் வழிகாட்டி என்று கூறியது. உத்தம்சிங்கிடம் உன்னுடைய கடைசி ஆசை என்னவென்று கேட்கப்பட்டது. அதற்கு சொன்ன பதில் அனைவரின் நெஞ்சங்களிலும் நிறைந்து விட்டது. என் உடலை லண்டனிலேயே புதைத்து விடுங்கள் ஏனென்றால் எத்தனையோ ஆண்டுகளாக இந்தியாவை நீங்கள் ஆட்சி செய்தீர்கள். ஒரு ஆறடி நிலத்தையாவது ஒரு இந்தியன் அபகரித்தான் என்று எதிர்கால வரலாறு சொல்லட்டும் என்று சொல்லி துாக்கு கயிற்றை முத்தமிட்டார் அந்த மாவீரன்.

'பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவானிலும் நனி சிறந்தன'

என, கவிஞர் பாரதி பாடினார். தாயைப் போல மதிக்கத்தக்க பிறந்த நாட்டின் விடுதலைக்காக தங்கள் விதியை தாங்களே தீர்மானித்து, கொள்கையில் வெற்றி பெற வேண்டும் என்று, உயிர்நீத்த தியாகச் செம்மல்கள் வாழ்ந்த புனித பூமி இது.

நமது விடுதலைப் பயிர் : தண்ணீர் விட்டு வளர்க்கவில்லை. பல விலை மதிப்பற்ற உயிர்களையும், கண்ணீரையும் விட்டுத் தான் வளர்ந்தது என்பதை உணர்வோம். இந்திய மக்கள் சிந்தனையில் ஜாலியன் வாலாபாக் படுகொலை ஆழமாக பதியப்பட்டுள்ளன. அவை கால வெள்ளத்தையும் விஞ்சி நிற்கும். ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிர்நீத்த தியாகிகளின் தியாகத்தையும், வீரத்தையும் நினைவு கூர்ந்து அவர்களுக்கு நன்றி சொல்வோம்.

- பா.தனலட்சுமி, ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வலையங்குளம்
dhanalakshmi21051980gmail.com

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement