Advertisement

கனவு மெய்ப்பட வேண்டும்...

தூங்கும் போது வருவது அல்ல கனவு; நம்மைத் துாங்க விடாமல் செய்வது தான் கனவு; கனவு காணுங்கள்' என கூறி நம் எதிர்கால இலக்கை அடைய வழி காட்டினார், மறைந்த
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்

என்றார் திருவள்ளுவர். நினைத்த பொருளை நினைத்தபடி அடைய முடியும். எண்ணியவர் செயல் வலிமை மிக்கவராக இருக்கும் போது என்பதாகும். இலக்கினை அடைய செயல் வலிமை மிகவும் அவசியம்.

ஓய்வுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் : பொதுவாக ஓட்டப்பந்தயத்தில் இறுதிச்சுற்று நடக்கும் போது ஒவ்வொரு போட்டியாளரும் தன் வேகத்தை அதிகரித்து கவனச்சிதறல்களை நீக்கி, மனதை ஒருமுகப்படுத்தி செயல்படும் போது வெற்றிக்கனியை தட்டிப்பறிப்பது எளிதான காரியம் தான். அதுபோல் தான் மாணவர்கள் ஓய்வுக்கெல்லாம் ஓய்வு கொடுத்து விட்டு உழைப்பதன் மூலம் உயர்வை அடைய முடியும்.எல்லாநேரமும் ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டே இருப்பதால் தான் கடிகாரம் எல்லா இடங்களிலும் உயரத்தில் இருக்கிறது. ஒரு கல்லில் உள்ள தேவையற்ற பகுதிகளை நீக்கும் போதுஅதற்குள்ளேயே உள்ள அழகிய சிலை வெளிப்படுவது போல நம்மிடமுள்ள தேவையற்ற விஷயங்களையும், கவனச்சிதறல்களையும் நீக்கினால் நம்
சிறப்பம்சம் வெளிப்படும்.கல்வி என்பது கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகும். அதைக் கொண்டாடும் போது அது நமக்கு பிடித்த விஷயமாகிறது.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

இக்குறளில் எந்த இடத்திலும் துணைக்காலே வராத என்ற பெருமை உடையது. இன்று தலைகுனிந்து படிக்கும் புத்தகம் தான், நாளை நம்மை தலைநிமிர்ந்து வாழ வைக்கும் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நம்பிக்கை கொண்டால் வெற்றி : இந்த உலகம் எப்போதுமே வெற்றி பெறுவோரை மட்டும் தான் உயர்வாக பார்க்கும். எனவே வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையுடன் படிப்பவர்கள் கண்டிப்பாக வெற்றி பெற்று விடுவர். தோற்று விடுவோமோ என்ற சந்தேகத்துடன் படிப்பவர்களை வெற்றி நெருங்குவதில்லை.படிக்கிறோம் என்பதை வேலையாக நினைத்து ஒரே பாடத்தை தொடர்ந்து படிப்பது மூளைச் சோர்வை ஏற்படுத்தும். ஏனெனில் நம் மூளையின் வலது பகுதி படைப்பாற்றல் குறித்து சிந்திக்கும் தன்மையுடையதாகும். மூளையின் இடது பகுதி தர்க்கரீதியான செயல்பாடுகளை சிந்திக்கும் தன்மையுடையதாகும். ஒரே பாடத்தைத் தொடர்ந்து
படிப்பதால் மூளையின் குறிப்பிட்ட ஒரு பகுதி மட்டுமே செயல்படுவதால் சோர்வடைகிறது. இதை தவிர்ப்பதற்கு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வேறு வேறு பாடங்களை படிக்கலாம்.
மாணவர்களே... மற்றவர்கள் கூறுவதற்காக படிக்காதீர்கள். மற்றவர்களுக்காக வாழாதீர்கள். உங்கள் எதிர்காலத்தை நீங்களே தீர்மானியுங்கள். பொதுவாக ஒரு முட்டை இரண்டு சூழ்
நிலைகளில் உடைபட வாய்ப்புகள் உள்ளன. ஒன்று வெளிப்புறத்திலிருந்தும், மற்றொன்று உள்புறத்திலிருந்தும் உடைபடலாம். வெளிப்புறத்திலிருந்து உடையும் போது, அங்கே ஒரு வாழ்க்கை முடிவடைகிறது. உட்புறத்திலிருந்து உடையும் போது அங்கே ஒரு வாழ்க்கை துவங்குகிறது. எனவே மாற்றம் என்பது உங்களுக்குள்ளே இருந்து துவங்க வேண்டும்.

சரியான திட்டமிடலும் நேர மேலாண்மையும் : சரியான திட்டமிடலும், நேர மேலாண்மையும் சாதிக்க நினைப்பவர்களுக்கு அவசியமானது. நேரத்தை வீணாக்கக் கூடாது. நேரம் விலைமதிப்பற்றது. இந்த உலகில் எந்த ஒரு மனிதனும் தன்னுடைய கடந்த காலத்தை விலைக்கு வாங்கும் அளவிற்கு பணக்காரன் கிடையாது. இன்றைய மாணவர்கள் சினிமா நடிகர்களையும், கிரிக்கெட் வீரர்களையும் கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு அவர்கள் தொழிலின் மீது மரியாதை உள்ளது. அதனால் அவர்கள் கடமையை சரிவர செய்கின்றனர். மாணவர்களுக்கு தேர்வு நடக்கிறது என்பதற்காக அவர்கள் தொழிலை நிறுத்தப் போவதில்லை. அவர்கள் எப்போதும் போல் தங்கள் பணியை செய்கின்றனர். அதுபோல மாணவர்களும் கவனச்சிதறல்களை தவிர்த்து
தங்கள் கடமையை சரிவரச் செய்ய வேண்டும். அப்போது தான் நாளைய உலகம் நம்மையும் கொண்டாடும். எப்போதுமே வலிகள் பிறக்காமல் வழிகள் பிறப்பதில்லை.
மனிதனைத் தவிர அத்தனை உயிரினங்களும் விடிவதற்காக காத்திராமல் விடியலுக்கு முன்பே விழித்து கொள்கிறது. அதனால் தான் அவைகள் ஆரோக்கியமாகவும், உற்சாகவும் இருக்கிறது.
கடமையை உணர்ந்து படித்தால் மதிப்பு உயரும்

பால் பசுவின் மடியில்சந்தோஷமாக இருந்தது. அதை பால் விற்கும் பெண் ஒருவர் கறந்து அடுப்பில் வைத்து கொதிக்க வைத்தாள். பால் கொதித்தது; சூடு தாங்காமல் துடித்தது; வாய்விட்டு புலம்பியது. இறைவா எனக்கேன் இவ்வளவு சோதனை என்று அந்த பெண் பாலை அடுப்பிலிருந்து இறக்கி அதனுடன் புளித்த மோரை கலந்தாள். அந்த வாடை பொறுக்க முடியாமல் இருந்தது. அதன் பின்பு பால் கட்டியாகி தயிராக மாறியது. திடமான அந்த தயிரை ஒரு மத்தை கொண்டு கடைந்தாள். வலி தாங்காமல் தயிர் அலறியது. அதிலிருந்து திடமான பொருளாக வெண்ணெய் எடுக்கப்பட்டது.

சற்று மூச்சு வாங்கியவெண்ணெயை ஒரு சட்டியில் வைத்து கொதிக்க வைத்தாள். வெண்ணெய் துடித்தது.துவண்டது. கொதித்த பின் ஏற்பட்ட திரவத்திற்கு நெய் என பெயரிட்டு ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்தாள். அப்போது ஒரு வாடிக்கையாளர் அந்த பெண்ணிடம், ஒரு லிட்டர் பால் என்ன விலை என்றார். அந்த பெண் நாற்பது ரூபாய் என்றாள். பின் அந்த நபர் ஒரு லிட்டர் நெய் என்ன விலை என்றார். அதன் விலை ஐநுாறு ரூபாய் என அந்த பெண் கூறினாள். அப்போது தான் நெய்க்கு புரிந்தது தான் இவ்வளவு கஷ்டப்பட்டதும், தன் மதிப்பை உயர்த்துவதற்காக தான் என்று. அது போலத் தான் மாணவர்களும் கடமையை உணர்ந்து படிக்கும் போது, அவர்கள் மதிப்பும் உயரும்.இது போட்டிகள் நிறைந்த உலகம் அல்ல. வாய்ப்புகள் நிறைந்த உலகம். மருத்துவத்
துறையில் விருப்பமுள்ளவர்கள் மருத்துவத்தையும் பொறியியலில் விருப்பமுள்ளவர்கள் பொறியில் பாடத்தையும், எந்த துறையில் ஆர்வம் உள்ளதோ அந்த துறையை தேர்வு செய்யலாம். எந்தப் படிப்பையும் சாதாரணமானது என்று மதிப்பிடாதீர்கள். நீங்கள் சாதாரணமாக நினைக்கும் படிப்பை படித்த எத்தனையோ பேர் உலகில் சாதனையாளர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

நாளைய வரலாறுநம்மை பற்றி பேசட்டும் : சாதாரண குடும்ப பின்னணியை கொண்டவர்கள் கூட சாதிக்கும் காலம் இது. ஒரு ஆட்டோ ஓட்டுநரின் மகள் பட்டயக்கணக்கர் தேர்வில் நாட்டில் முதன்மை பெற்றதையும், கல்விப் பின்னணியே இல்லாதவர்களுக்கு மகனாக பிறந்தவர், இந்திய ஆட்சிப் பணித்தேர்வில் மாநிலத்தில் முதன்மை பெற்றதையும் வரலாறுகள் வலியுறுத்துகின்றன.இன்று படிப்பதற்கு வசதி ஒரு தடையல்ல. எத்தனையோ நல்ல இதயம் படைத்தவர்களும், அறக்கட்டளைகளும் படிப்பிற்காக நிதியுதவி செய்கின்றனர். எத்தனையோ
வங்கிகளும், கடனுதவி செய்கின்றன. மாணவர்களை வழிநடத்துவதற்காக அரசாங்கமும், தனியார் அமைப்புகளும் போட்டி போட்டு உதவுகின்றன. மாணவர்கள் தெளிவான சிந்தனையுடன்
இஷ்டப்பட்டு படிக்க வேண்டும். நாளைய வரலாறு நம்மை பற்றி பேசட்டும்...

-எஸ்.ராஜசேகரன்
முதுகலை ஆசிரியர்
இந்து மேல்நிலைப்பள்ளி வத்திராயிருப்பு
94429 84083

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement