Advertisement

ரேஷன் அரிசியில் 'ஆய்' இருந்ததால் மறியல்: கடையை மூடி விட்டு விற்பனையாளர் ஓட்டம்

ஆம்பூர்: ரேஷன் கடையில் வழங்கிய அரிசியில் மனித கழிவு இருந்ததை கண்டித்து, பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் கடையை மூடி விட்டு, விற்பனையாளர் ஓட்டம் பிடித்தார்.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே வீராங்குப்பம் கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இங்கு விற்பனையாளராக குமார், 34, உள்ளார். நேற்று காலை, 10:00 மணிக்கு, பொது மக்களுக்கு இங்கு இலவச அரிசி வழங்கப்பட்டது. 20க்கும் மேற்பட்டவர்கள் வாங்கிச் சென்ற அரிசியில் கடும் துர்நாற்றம் வீசியது. அரிசியை கொட்டி பார்த்ததில், அதில் காய்ந்து போன நிலையில் மனித கழிவு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொதுமக்கள், அரிசியுடன் ரேஷன் கடைக்கு வந்து, விற்பனையாளரிடம் வாக்கு வாதம் செய்தனர். அப்போது விற்பனையாளர் குமார், அங்கிருந்த பல அரிசி மூட்டைகளை பிரித்து பார்த்ததில், அதிலும் மனித கழிவு இருந்தது. 'கடைக்கு வந்த அரிசி மூட்டையில் மனித கழிவு இருந்ததற்கு, நான் என்ன செய்வது' என, விற்பனையாளர் கூறினார். ஆனால், வேறு அரிசி வழங்கும்படி பொதுமக்கள் கேட்டனர். இதற்கு விற்பனையாளர் மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், காலை, 11:00 மணிக்கு, கடை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் விற்பனையாளர் குமார் கடையை மூடி விட்டு ஓட்டம் பிடித்தார். ஆம்பூர் தாலுகா போலீசார் வந்து, புகார் கொடுத்தால், விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, பகல், 12:00 மணிக்கு சாலை மறியலை கை விட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், ஒரு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement