Advertisement

அழகே அதிதி...

மலையாள கரையோரம் தந்த கனவு மங்கை இவர். பார்த்தாலே பற்ற வைக்கும் காந்தக் கண்கள். கொஞ்சும் கிளிப்பேச்சில் இளசுகளின் சிந்தனையை சிதறடிப்பவர். துடுக்கு பார்வையில் சடக்கென மனதை பதற வைக்கும் மஞ்சள் மைனா, நடிகை அதிதி மேனன்.
இவர், நம்மிடம்...
* அதிதி பற்றி...
பிறந்தது கேரளா. இடுக்கியில் பிளஸ் 2 வரை படித்தேன். கோவையில் கல்லுாரி படிப்பு. சாப்ட்வேர் இன்ஜினியராக சில மாதங்கள் பணியாற்றியபோது சினிமா வாய்ப்பு கிடைத்தது.
* சினிமா தேர்வு ஏன்...
கல்லுாரி காலத்தில் குறும்படங்கள் நடித்தேன். அதில் கிடைத்த அனுபவம் என்னை மாற்றியது. அண்ணன் போட்டோகிராபராக உள்ளார். அவரின் கேமராவில் உருவான 'ஸ்டில்' போட்டோக்கள் நான் சினிமாவில் நுழைய காரணமாக இருந்தது.
* முதல் படம்...
மதுரை சங்கர்பாண்டி இயக்கத்தில் வெளியான 'பட்டதாரி'. ஹீரோ அபிசரவணன். அவரும் மதுரைக்காரர் தான்.
* நடிப்பு அனுபவம்...
முதல் படமே மதுரையின் கதைக் களம். மிரட்டலாக இருந்தது. மதுரையில் 'சூட்டிங்' என்றாலே அந்த படம் 'சூப்பர் ஹிட்' ஆகும் என்ற நம்பிக்கை உண்டு. அதுபோல 'பட்டதாரி'யும் வெற்றி பெற்றது. முதல் நடிப்பும், மதுரையும் மறக்க முடியாதது.
* தற்போதைய படம்...
இயக்குனர் அமீரின் 'சந்தனதேவன்' படத்தில் கதாநாயகியாக நடிக்கிறேன். ஆர்யா, அவரது தம்பி சத்தியா என இரண்டு ஹீரோ சப்ஜெக்ட். நான் சத்தியாவின் ஜோடி. மதுரை பகுதியில் தான் தற்போது படப்பிடிப்பு நடக்கிறது. பிரம்மாண்டமாக தயாராகிறது.
* சந்தனதேவன் பற்றி...
அமீரின் 'பருத்திவீரன்' கதாநாயகி பிரியாமணி பேசப்பட்டது போல் இப்படம் வெளியானால் என் கேரக்டர் பேசப்படும். அந்த அளவிற்கு பிரம்மாண்டமாக தயாராகிறது. வித்தியாசமான கதை. சின்ன 'ஷாட்' கூட கஷ்டப்பட்டு எடுக்கப்படுகிறது.
* நடிக்க ஆசைப்படும் ஹீரோ...
அஜீத்துடன் ஒரு நொடியாவது நடித்துவிட வேண்டும் என ஆசை உண்டு. கல்லுாரியிலேயே நாங்கெல்லாம் 'தல' ரசிகைகள்.
* பொறாமை படவைத்த நடிகைகள்...
நயன்தாரா. அவர் சினிமாவிற்குள் வந்தது முதல் இப்போது வரை 'டாப்'ல் தான் உள்ளார். 'தெறி' சமந்தா நடிப்பை பார்த்து பொறாமைப்பட்டேன். அதுபோன்ற 'கேரக்டர்' கிடைத்தால் வெளுத்து கட்ட ரெடியாக உள்ளேன்.
* ஆச்சரியப்பட வைத்த இயக்குனர்...
இப்போது இளம் இயக்குனர்களின் பலரின் படங்கள், கதைகள் ஆச்சரியப்பட வைக்கின்றன. இயக்குனர் பாலா படங்கள் வித்தியாசமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும்.
* மலையாள வாய்ப்பு...
தற்போது 'நாங்க வேலைக்கு போனால் ஊரை யாரு பார்த்துக்கிறது' உட்பட தமிழில் தொடர்ந்து படவாய்ப்புகள் உள்ளன. மலையாளத்தில் விரைவில் நடிப்பேன்.
* பெண்ணாக சினிமா தரும் சவால்கள்...
அனைத்து துறைகளிலும் பிரச்னை உள்ளன. நடிகைகளின் நடவடிக்கையை பொறுத்து தான் பிரச்னை இருக்கும். அதிக படவாய்ப்பு தேடும்போது சில பிரச்னையை சந்திக்க வேண்டி வரும்.
என்னை பொறுத்தவரை ஒரு படம் நடிச்சாலும், 'நச்'னு இருக்க வேண்டும். மக்கள் பேச வேண்டும்.
* 'கிளாமர்' பற்றி...
இது, நடிகைகளை பொறுத்தது. எனக்கு உடன்பாடில்லை.
* மகளிர் தின வாழ்த்து...
ஆண் - பெண் ஏற்றத்தாழ்வு நீங்க வேண்டும். டில்லி, சென்னை, கோவை... என பெண்களுக்கு எதிராக பாலியல் கொடுமைகள் ஆங்காங்கே அதிகரிக்கின்றன. இதை பார்க்கும்போது பெண் கொடுமைக்கு எதிரான தண்டனைகள், நம் சட்டத்தில் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் எனத் தோன்றுகிறது. அடுத்த 2018ம் ஆண்டு மகளிர் தினத்திற்குள் இந்நிலையில் மாற்றம் வேண்டும்.
சாதனை பெண்களுக்கும், சவால்களை சந்திக்கும் மகளிருக்கும் என் வாழ்த்துக்கள்.

இவரை 97909 87181ல் வாழ்த்தலாம்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement