Advertisement

நித்யா மேனன் தான் ஹீரோயின் - காளி வெங்கட் அடம்

நடிகரை பார்த்து படம் பார்ப்பவர்களை விட நகைச்சுவை நடிகர் யார் என்று படம் பார்ப்பவர்கள் தான் இன்று அதிகம். திரையுலகமும் இதன் அவசியத்தை உணர்ந்து நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. நானும் நகைச்சுவை செய்கிறேன் என்று வந்துபோவோருக்கு மத்தியில், தனக்கு இட்ட பணியை நகைச்சுவை, குணசித்திரம் என கலக்கி வருகிறார் காளி வெங்கட்.

முண்டாசுபட்டியில், எங்க ஐயாவை சிங்கம் மாதிரி போட்டோ எடுக்க வேண்டும், என கேட்கும்போது, சிங்கம் மாதிரி போட்டோ எடுக்கனும்னா காட்டுக்குத்தாய்யா போகணும், என சிரிக்காமல் காமெடி செய்தவர்.
'இறுதிச்சுற்றில்' ரித்திகா சிங்கின் தந்தையாக சாமிக்கண்ணு வேடத்தில் நடித்து அனைவராலும் பேசப்பட்டார். சமீபத்தில் வெளியான 'ராஜா மந்திரியில்' கலையரசன் ஹீரோ என்றாலும், அவருக்கு இணையாக கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு காமெடி, குணச்சித்திரம் என தனி முத்திரை பதித்து வலம் வருகிறார். அவரிடம் ஒரு அவரிடம் ஒரு நேர்காணல்.
கோவில்பட்டி அருகே உள்ள குடையதேவன்பட்டி எனது சொந்த ஊர். அப்பா கொத்தனார். 100 வீடு உள்ள கிராமம் தான் எங்கள் ஊர். வீட்டில் நான்காவது பையன் நான்.
படிக்கும்போதே கிராமிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஆர்வம் இருந்தது. 1997--98ல் வேலை தேடி சென்னைக்கு வந்தேன். டீக்கடை, தண்ணீர் போடும் வேலை செய்தேன். 2008 முதல் என்னுடைய சினிமா பயணம் ஆரம்பித்தது. 10 ஆண்டு நடித்து விட்டேன். முண்டாசுபட்டி குறும்படமாக வெளிவந்தது. அதில் நான் நடித்ததால், திரைப்படமாக்கும்போதும் எனக்கு அதற்குரிய வாய்ப்பு கிடைத்தது. ஏராளமான குறும்படங்களில் நடித்துள்ளேன்.
நான் முதலில் நடித்தபடம் என் குருநாதர் இயக்கிய 'தசையினை தீச்சுடினும்'; வெளிவரவில்லை. அந்த படத்தில் என்னுடைய ரோல் காளி. அதன் பிறகு வெங்கட் என்ற பெயருடன் காளியும் சேர்ந்து கொண்டது. காமெடி வருபவர்களுக்கு குணசித்திரம் வருவது இல்லை. குணசித்திர நடிகர்களுக்கு காமெடி வருவதில்லை. எனக்கு இறைவன் அந்த இரண்டையும் அருளியுள்ளார்.
இறுதிச்சுற்றில் வயதுக்கு மீறிய கேரக்டர் கிடைத்தது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் நடித்தேன். அது நல்ல பெயர் வாங்கி தந்தது. இந்தியில் சாலாகடூஸ் என்ற பெயரில் அந்த படம் வெளியானது. அதிலும் நான் தான் நடித்தேன். டீக்கடை வைத்திருந்ததால், அங்கு வரும் வடநாட்டை சேர்ந்தவர்களிடம் ஹிந்தியில் பேச கற்று கொண்டது இந்த படத்தில் உதவியது.
நான் ஹீரோவாக நடித்தால் எனக்கு ஜோடியாக நடிக்க ஒருவரை தேர்வு செய்து வைத்துள்ளேன். அவர் நித்யாமேனன். அவர் ஹீரோயினியாக நடித்தால் மட்டுமே ஹீரோவாக நடிப்பேன். இதுதான் ஒரே ஒரு கன்டிஷன். எதையும் நகைச்சுவை என்று சொல்லாமல், கதை என்ன தீர்மானிக்கிறதோ, அதை நடித்து வாய்ப்பை வளப்படுத்தி கொள்ள வேண்டும், என்றார்.
இவரை பாராட்ட: kaalivenkatgmail.com

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement