Advertisement

பல்லாங்குழி புகட்டும் பாடம்

“தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவனுக்கோர் குணமுண்டு”

என்றார் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை.

தனி ஒரு தமிழனுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் தனித்தன்மையான பாரம்பரிய பண்பாட்டு அடையாளங்கள் உண்டு. அந்த தனித்துவ பண்பாட்டு அடையாளங்களை அழிவில்லாமல் பாதுகாக்கவே பண்டிகைகள், திருவிழாக்கள், சடங்கு சம்பிரதாயங்கள் சகுனங்கள் போன்ற எழுத்தில்லா கலைக் களஞ்சியங்களாக உருவாக்கப்பட்டன.
உழவுக்கு உயிரூட்டி அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு புகட்ட மனிதனோடு உழைப்பை பகிர்ந்து கொள்ளும் காளைகளை காக்கவும் சிறப்பிக்கவும் தமிழ்ச் சமூகம் தன் பண்பாட்டோடு இணைத்தது தான் ஜல்லிக்கட்டு. காளையின் மீது நமக்கு மிகுந்த அன்பு இருந்ததினால், மேற்கத்திய நாட்டினர் காளைச் சண்டை என அழைக்கும் நிகழ்வை நம்மவர்கள் ஏறுதழுவல் என்று பெயரிட்டு, பண்பாட்டின் உச்சத்தில் காளையை ஏற்றி அமர்த்தினர். நம் துரதிர்ஷ்டம் ஜல்லிக்கட்டு தொடங்கி பல பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம் தெரியாத உலகிற்கு இடப்பெயர்வு ஆகிவிட்டன. நம்மிடம் இன்னும் கொஞ்சம் உயிருடன் இருக்கும் விளையாட்டுக்கள் ஆடுபுலி ஆட்டம், தாயம், நொண்டி, பல்லாங்குழி எனச் சில மட்டுமே.

பாண்டி ஆட்டம் : சமூக வாழ்வை விளையாட்டின் வழியே எடுத்துரைக்க, பல விளையாட்டுக்கள் நம் தமிழ்ச் சமூகத்தில் உள்ளன. அவற்றில் சமூக வாழ்வோடு இல்லற வாழ்வையும் இணைத்து கற்றுத் தரும் விளையாட்டு பல்லாங்குழி. பல்லாங்குழி ஆட்டத்தை பாண்டி ஆட்டம் எனவும் அழைப்பர். முத்தாட்டம், பசுவாட்டம், கட்டாட்டம் என மூன்று வகை பல்லாங்குழி ஆட்டம் உண்டு. பொதுவாக பல்லாங்குழி, பெண்களால் ஆடப்படும் ஆட்டம் என்றாலும், பூப்படைந்த பெண்கள் பூப்பெய்திய நாள் முதல் 16 நாட்களும், கருவுற்ற பெண்களும் ஆட வேண்டும் என்ற மரபு விதி கடைப் பிடிக்கப்படுகிறது. சற்று வித்தியாசமாக, திருநெல்வேலி பகுதியில் ஒரு குறிப்பிட்ட மக்கள் திருமண நாளன்று மாலை மணமகன் முன்பாக பல்லாங்குழி விளையாட வேண்டும் என்ற மரபு கடைப்பிடிக்கப் படுகிறது.

தாய்மாமனும் பல்லாங்குழியும் : ஒரு பெண் பூப்படைதல் என்பது இயல்பான இயற்கையான நிகழ்வு தான் என்றாலும், பூப்படைதல் என்பது இல்லற வாழ்விற்குள் அடியெடுத்து வைப்பதற்கான முதல் தகுதியை, ஒரு பெண் அடைந்து விட்டதை குறிக்கும் விதமாகவே, அந்நிகழ்வு ஒரு மங்கல நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. பூப்படைந்த செய்தியை பெற்றோர்கள் முதலில் தெரியப்படுத்த வேண்டியது அப்பெண்ணின் தாய்மாமனிடம் தான். தாய்க்கு அடுத்தபடியாக அப்பெண்ணின் மீது, முழு உரிமையுடையவன் தாய்மாமன் என்கிறது தமிழ்ச் சமூக வழக்காறுகள். அப்பெண்ணின் மீது உரிமை உடையவன் என்ற வகையில், அப்பெண்ணை எதிர்கால இல்லற வாழ்க்கைக்கு தேவையான நற்குணங்கள் கொண்டவளாக்கும் பொறுப்பும் கடமையும் தாய்மாமனுக்கு சற்று அதிகம். அது நாள் வரையில் ஓடியாடி விளையாட்டுப் பருவப் பிள்ளையாக இருந்த பெண்ணானதால், வாழ்க்கை குறித்து விளையாட்டின் மூலமே,
முதன்முதலாக தாய்மாமன் உணர்த்த முயல்கிறார்; அதுவே பல்லாங்குழி.

ஏன் பல்லாங்குழி : வீட்டிற்கு வெளியே ஓடியாடி விளையாடாமல், வீட்டிற்குள்ளே விளையாடும் விளையாட்டுக்கள் பல இருந்தாலும், பல்லாங்குழி தேர்வு செய்யப்பட்டதன் காரணம், - பல்லாங்குழி உடல் ரீதியாக பெண்ணின் விரல் மற்றும் கைகளுக்கு வலுச் சேர்க்கிறது. இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் பெண்கள் குடும்பத்தின் வரவு செலவுகள், சிக்கனம், சொத்துப் பங்கீடு, சேமிப்பு, பொருளீட்டல் ஆகியவற்றை பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ளுதல் அவசியம். மேற்சொன்ன அனைத்தையும், விளையாட்டின் வழியே பெண்களின் மனதில் பதிய வைக்க, நம்முன்னோர்கள் கண்டறிந்த பல்லாங்குழி விளையாட்டில் உள்ளது. திருமண நாளன்று மாலையில் மனைவி பல்லாங்குழி விளையாடுவதைப் பார்த்து, அப்பெண்ணின் நிர்வாகத் திறமை, முடிவெடுக்கும் திறமை, வீட்டின் நிதிநிலையை சமாளிக்கும் திறன், சிக்கனம், மதி நுட்பம் ஆகியவற்றை கணவன் அறிந்து கொள்கிறார்.
திருமண நாளன்று விளையாடும் பல்லாங்குழியை, மணப்பெண் வீட்டார் பித்தளை அல்லது ஏதேனும் ஒரு உலோகத்தில் வாங்கித்தருகின்றனர். தங்கள் மகள் குடும்ப தலைவியாவதற்கு தகுதியானவள் என உணர்த்தவே இந்த ஏற்பாடு.

வீட்டு நிதியமைச்சர் : பூப்படைந்த பெண்களும், மணப்பெண்ணும் விளையாடும் பல்லாங்குழி வெறும் பொழுது போக்கு விளையாட்டல்ல. அப்பெண்களுக்கு வாழ்க்கை கலையை கற்றுத்தரும் விளையாட்டு. இருவர் ஆடும் பல்லாங்குழியில், 7 குழியில் குழிக்கு நான்கு முதல் பனிரெண்டு சோழிகள் கொண்டு ஆட்டத்தை தொடங்குவர். முதல் பெண் ஆடத் தொடங்கும் போது எந்தக் குழியிலிருந்து தொடங்கினால் செல்வம் (வெற்றி) சேர்க்கலாம் என்று கணக்கு போட்டு தொடங்குகிறார். “எதிர்காலத்தில் இல்லற வாழ்வில் நுழையப்போகும் பெண் இவ்வாறு கணக்கிட்டு தொடங்குதல் மூலம், தன் குடும்பத்தில் நிதி நிலையை திறம்பட சமாளிக்க இயலும்” என பல்லாங்குழியின் தொடக்கம் உணர்த்துகிறது. ஒரு குழியிலிருந்து சோழிகளை எடுத்து குழிக்கு ஒன்றாய் ஒவ்வொரு குழியிலும் இட்டு வருவாள்; அதுபோல புகுந்த வீட்டிற்கு அந்தப் பெண் சென்றவுடன், தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு வரும் கணவன் வீட்டு சொத்துக்களை, தான் மட்டும் அனுபவிக்க நினைக்காமல் தன் புகுந்த வீட்டில் உள்ள மற்ற பிள்ளைகளுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என பல்லாங்குழி உணர்த்துகிறது.

இழப்பு தற்காலிகமே : முதல் பெண் ஆடும் போது, எடுத்தவர் குழியில் இழப்பு ஏற்படுகிறது. தொடர்ந்து காய்களை இட்டு விளையாடும் போது, ஒரு வெற்றுக் குழியினை துடைத்து, அதற்கடுத்த குழியில் உள்ள நிறைய சோழிகள் (செல்வம்) அவர்க்கு கிடைக்கிறது.
“வாழ்வில் முதலில் வரும் இழப்புகளை நினைத்து வருந்த வேண்டியதில்லை; தொடர்ந்து முயற்சி செய்தால் வாழ்க்கையில் பெருஞ்செல்வம் சேர்க்கலாம்” என்பதை அப்பெண்ணிற்கு உணர்த்துகிறது. சில நேரங்களில் துடைத்த குழிக்கு அடுத்த குழி வெற்றிக் குழியாக இருக்கும் போது எதுவும் கிடைக்காது. “வாழ்க்கையில் அவ்வப்போது கஷ்டங்களும் துன்பங்களும் வரும். எனவே தோல்வி ஏற்பட்டால் வருந்தக் கூடாது என்ற படிப்பினையை உளவியல் வழி உணர்த்துகிறது பல்லாங்குழி”

புகட்டும் பாடம் : தொடர்ந்து விளையாடி, ஒரு வெற்றுக் குழியில் 4 சோழிகள் பெருகியவுடன், அது “பசு” (செல்வம்) என்று அந்த குழிக்குரிய பெண் எடுத்துக் கொள்கிறார். “கையில் எதுவுமில்லை என்று கலங்காமல், கிடைப்பதை கொஞ்சம் கொஞ்சமாக சேமிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று சேமிக்கும் பழக்கத்தை உணர்த்துவதோடு சேமிப்பின் மூலம் வரும் பொருளாதார வசதி மனதையும் வீட்டையும் வளமாக்கும்” என்று பெண்ணுக்கு பாடம் புகட்டுகிறது பல்லாங்குழி. ஆட்ட இறுதியில் ஒரு பெண் தோற்கும் போது (ஏழு குழிக்குரிய குறைந்த பட்ச சோழிகள் 5 அல்லது 6 கூட இல்லாமல் இருந்தால்) குழிக்கு ஒவ்வொரு சோழி இட்டு ஆட்டம் தொடங்குகிறது. இதற்கு கஞ்சி காய்ச்சுதல் என்று பெயர். “வீட்டில் எவ்வளவு வறுமை இருந்தாலும், பிள்ளைகளுக்கு உணவு புகட்ட வேண்டியது தாய் தான்'' என்று தாய்மையின் மகத்துவத்தை உரக்க உணர்த்துகிறது பல்லாங்குழி. ''தன் பிள்ளைகளுக்கு உணவு இட்டால் இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம் என்ற செய்தியை உணர்த்துவதோடு, தன் பிள்ளைகளை உயர்த்தினால் குடும்பமும் உயரும்'' என்று போதிக்கிறது பல்லாங்குழி.
இந்த உலகில் செல்வம் நிரந்தரமானதல்ல; எப்பொழுது வேண்டுமானாலும் மற்றொருவரிடம் (எதிர் விளையாடும் பெண்) சென்றுவிடும். அதனால் தான் அதற்கு (செல்வம் - செல்+வம்) என்று பெயர் என அப்பெண் உணர வேண்டும் என்று பாடம் புகட்டுகிறது பல்லாங்குழி.
பல்லாங்குழி போல. வாழ்வியல் முறைகளை நமக்கு கற்றுத்தந்த பாரம்பரிய விளையாட்டுகளை நாம் தொலைத்தது ஏராளம். பாரம்பரிய பதிவுகளை, விழியெனக் காப்போம்.

முனைவர். சி. செல்லப்பாண்டியன்
உதவிப் பேராசிரியர்
அருப்புக்கோட்டை. 78108 41550
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    We are just wasting our times on such wasteful and useless article and old games. Nowadays the old Tamil games are disappeared and no one knows about this game.Even in villages also no one know or playing this game.This era is electronic era and no one interested such old game.Let us not waste our time and energy on such types of topics and games and concentrate to develope our mind and time on some useful and modern styles per this present day taste.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement