Advertisement

ஊழல் என்பது குற்றமா?

இந்தியாவில் பிரிட்டிஷார் ஆட்சியில் புதிய குற்றவியல் சட்டம் ஒன்றை உருவாக்க முற்பட்டனர். மெகாலே பிரபு எழுதியது தான் 1860ல் கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம். இச்சட்டத்தின் கீழ் லஞ்சம் கேட்டுப் பெறுவது குற்றமாக்கப்பட்டது. அப்பிரிவுகளின் கீழ் லஞ்சம் கேட்டுப் பெறுவதை, குற்றவியல் நீதிமன்றங்களில் நிரூபிப்பது மிக கடினமாக இருந்ததனால், அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க முடியவில்லை.

ஆசிய நாடுகளின் தனிக்குணம் : அரசு ஊழியர்கள் தங்களது கடமையை ஆற்றுவதற்கே பணம் பெற்றுக் கொள்வது பல மொழிகளில் பலவாறாக அழைக்கப்பட்டது. தஸ்துாரி, தாலி, பக்கீஸ் இனாம் என்றெல்லாம் வாங்கப்பட்ட தொகைகள் லஞ்ச குற்றமாக்கப்படவில்லை.
இப்படிப்பட்ட பெருமளவு ஊழல் செயல்பாடுகள், காலனி ஆதிக்கத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், ஆங்கில அறிஞர்கள் இப்படிப்பட்ட செயல்பாடுகள் எல்லாம் ஆசிய நாடுகளின் தனிக் குணம் என்றே வர்ணித்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, போர்த் தளவாடங்கள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஒப்பந்ததாரர்களுடன் கூட்டு சேர்ந்து, மிகப்பெரும் ஊழல் செய்த குற்றவாளிகளை தண்டிப்பதோடு, 1944ம் ஆண்டு அவசர சட்டத்தின் மூலம் குற்றவாளிகளின் சொத்துக்களின் மீது பற்று வைப்பதுடன், குற்றம் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும் சட்ட வழி வகுக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த போது, அரசு மற்றும் பொது சேவைகளில் ஊழல்களைத் தடுப்பதற்காக தனி சட்டம் இயற்ற முற்பட்ட போது உருவானது தான், 1947ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டம். இச்சட்டப்படி ஊழல் என்பதற்கு
விரிவான விளக்கமும் அக்குற்றத்தை கண்டுபிடிப்பதற்கான புதிய நடைமுறைகளும் விளக்கப்பட்டது. குற்றத்தை நிரூபிப்பதில் அரசுக்கு மட்டும் பொறுப்பு என்றில்லாமல், ஊழல் குற்றம் சாட்டப்பட்டவரும் தன் பங்கிற்கு தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும்.
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியரை பொறி வைத்து பிடிக்கும் முறைகளும், அப்படி கைப்பற்றப்பட்ட பணம் எதற்காக பெறப்பட்டது என்பதை விளக்க வேண்டிய கட்டாயம் அரசு ஊழியர் மீது சுமத்தப்பட்டது.

புதிய சட்டம் : 1947ல் கொண்டுவரப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்தால் மிகப்பெரிய அளவில் அரசு மற்றும் பொதுஊழியர்கள் ஊழல் குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க முடியவில்லை. எனவே 1988ல் நாடாளுமன்றத்தில் புதிய ஊழல் தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்படிப்பட்ட சட்டத்தை நிறைவேற்றுவதற்காக, மத்திய அரசு அமைத்த நிர்வாக சீர்திருத்த ஆணையம் பரிந்துரைத்திருந்தது. இச்சட்டத்தின் கீழ் லஞ்சம் கேட்டுப் பெறுவது குற்றமாக்கப்பட்டது மட்டுமல் லாமல், அரசு அல்லது பொது ஊழியரிடம் அவரது வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் இருந்தால், அதையும் ஊழல் பணத்தால் பெறப்பட்டது என்று வகுக்கப்பட்டு, அவரை தண்டிக்க வழிவகுக்கப்பட்டது. குற்றவியல் தண்டனைக்கு உள்ளாகும் அரசியல்வாதிகள், நீதிபதிகளாலும், இதர சக்திகளாலும் தீட்டப்படும் சதிகளினால் தண்டனைகள் வழங்கப்படுகின்றன என்று கூறி, அரசின் நல்ல திட்டங்களால் பயன் பெற்ற சாதாரண மக்களை, தெருப் போராட்டங்களில் ஈடுபட வைப்பதன் மூலம், ஊழல் குற்றவாளிகளை தண்டிக்கவே கூடாது என்பது போன்ற கருத்தை உருவாக்கி வருகின்றனர்.

அவநம்பிக்கை : புதுக்கோட்டை நகராட்சி ஊழியர் கூத்தப்பெருமாள் தொடுத்த மேல் முறையீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த தகவலை ஆங்கிலத் தொலைக்காட்சி தொடர்ந்து ஒளிபரப்பியது. 1993ல் நகராட்சி கட்டடச் சான்றிதழ் கொடுப்பதற்கு 50 ரூபாய் லஞ்சம் வாங்கியதற்கு, மூன்று மாத கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்பட்டதை, 18 ஆண்டுகளுக்கு பின் உச்சநீதிமன்றம் உறுதி செய்த செயலை, குறைகூறுவது போல் அந்நிகழ்ச்சி அமைந்தது.
என்றாலும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் பற்றிய வழக்கை நீதிமன்றங்கள் விரைந்து முடிக்கவில்லை என்றால் மக்களுக்கு அச்சட்டத்தைப் பற்றிய அவநம்பிக்கை வந்துவிடும் என்பது தெளிவு. ஊழல், லஞ்சம் போன்ற நடவடிக்கைகளால் தாங்கள் பாதிக்கப்படுவதை சாதாரண மக்கள் தங்களது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே எடுத்துக் கொண்டனர்.
மக்களுக்கு உதவி செய்ய ஏற்படுத்தப்பட்ட அரசு அலுவலகங்களில், கையூட்டு கொடுக்காமல் காரியங்கள் ஏதும் நடைபெறாது என்பதை மக்கள் தெளிவாகவே புரிந்து கொண்டனர். கையூட்டு வாங்குவது தண்டிக்கப்படக்கூடிய குற்றம் என்று அரசு அலுவலகத்தில் எழுதப்பட்டிருந்தாலும், அவ்வாசகங்கள் பெரும்பான்மையான அரசு அலுவலர்களுக்கு மறந்து போனதா அல்லது மரத்துப் போனதா என்று தெரியவில்லை. ஐந்தாவது துாண் என்ற அரசு சாரா நிறுவனம் வெளியிட்ட அறிக்கைகளின்படி, ஆண்டு தோறும் மக்களிடமிருந்து அரசு அலுவலர்களுக்கு கையூட்டு பணமாக கோடிக்கணக்கான ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

யாருக்கு பொருந்தும் : 1988ல் கொண்டுவரப்பட்ட ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எதிர்த்து போடப்பட்ட பெரும்பான்மையான வழக்குகள் அரசியல்வாதிகளாலேயே போடப்பட்டன. அச்சட்டத்தின் கீழுள்ள அனைத்து பிரிவுகளும் அவர்கள் போட்ட வழக்குகளால் உச்ச நீதிமன்றத்தில் பலமுறை அலசப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ஊழல் தடுப்பு சட்டம் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பொது ஊழியர்கள் என்ற வரையறையின் கீழ் அமைச்சர்கள் வரமாட்டார்கள் என்ற வாதத்தை உச்சநீதிமன்றம் 1979ல் நிராகரித்தது.

நீதிபதி மீது வழக்கு : சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.வீராசாமி மீது, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட போது, அதை எதிர்த்து அவர்
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். பொது ஊழியர் என்ற வரையறையின் கீழ் நீதிபதிகளை கொண்டு வர முடியாது என்றும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நீதிபதிகளின் மீது வழக்கு தொடரும் அதிகாரம் காவல் துறையினருக்கு கொடுக்கப்பட்டால், அது நீதித்துறையின் சுதந்திரத்தை குலைக்கும் என்றும் வாதாடினார். அந்த வழக்கும் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு நீதிபதிகள் மீதும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படலாம் என்றும், அவர்கள் அச்சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்றும்1991ல் தீர்ப்பு
வழங்கப்பட்டது.

லோக்பால் : லோக்பால் போன்ற அதிகார அமைப்பை உருவாக்க வேண்டியதன் கட்டாயம் ஏன் உருவாக்கப்பட்டது என்பதை ஆராய்ந்தால், ஊழல் தடுப்புச் சட்டம், அதன் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றவில்லை என்பது புரியும். ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபடும் ஊழியர்கள் மீது வழக்கு தொடர முன் அனுமதி தேவை என்பதும், அவ்வழக்கை விசாரிக்கும் காவல்துறை அவர்களது கட்டுப்பாட்டின் கீழேயே இயங்குகிறது என்பதையும் அறிவோம்.
திறமை மிக்க வழக்கறிஞர்களை மிகுந்த பொருட்செலவில் அமர்த்தி, சட்டத்திலுள்ள ஓட்டைகளின் மூலம் தப்பிப்பது, இரண்டுக்கு மேல் முறையீட்டு முறை அனுகூலங்களினால், வழக்கை பல ஆண்டுகளுக்கு இழுத்தடிக்க முடியும் என்ற சிந்தனை ஓட்டம் தற்போது வலுப்பெற்றுள்ளது. ஊழல் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தக்க தண்டனை வாங்கித் தருவதோடு, அப்படிப்பட்ட குற்றங்களை இழைத்தவர் யாராக இருந்தாலும் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை மக்களிடம் உருவாக்க வேண்டும். இந்த தொழில்நுட்ப காலத்தில், ஊழல் செயல்பாடுகளும் நவீனத்துவம் பெற்று அறிவியல் ரீதியாக நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றை எதிர்கொள்ள அறிவியல் சிந்தனைகளையும், சாதனங்களையும் எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி இன்னும் அதிக அளவில் ஆராய முயற்சிக்க வேண்டும்.

- கே.சந்துரு
சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி
saraskrish1951gmail.com
Advertisement
 

வாசகர் கருத்து (10)

 • ganapati sb - coimbatore,இந்தியா

  ஊழல் குற்றமே. பணி செய்ய உரிய சம்பளம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அரசு ஊழியர்கள் அரசியல்வாதிகள் தன் பணிகளை விரைந்து செய்யாமல் பேராசையில் சொத்து சேர்க்க குற்றவாளிகள் தப்ப தரமற்ற பொருட்கள் சேவைகள் தொடர லஞ்சம் பெற்றுக்கொண்டு செயல்படுவது குற்றமே.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  ஐயா அதில் பெரிய குழப்பம் இருப்பதால் குழப்பத்தின் பயனை குற்றவாளிக்கு தரவேண்டும் என்று சட்டம் இருப்பதால் தான் நீதிமான்கள் கூட ஊழல் செய்கிறார்களோ என்று ஐயம் ஏற்படுகிறதே.குமாரக் கடவுள் கணக்கு அப்படித்தான் இருக்குமா??

 • mvsrinivasan srinivasan - chennai,இந்தியா

  ஓய்வு பெற்ற நீதிபதி அவர்களின் கருத்துகள் - திறமை மிக்க வழக்கறிஞர்களை மிகுந்த பொருட்செலவில் அமர்த்தி, சட்டத்திலுள்ள ஓட்டைகளின் மூலம் தப்பிப்பது, இரண்டுக்கு மேல் முறையீட்டு முறை அனுகூலங்களினால், வழக்கை பல ஆண்டுகளுக்கு இழுத்தடிக்க முடியும் என்ற சிந்தனை ஓட்டம் தற்போது வலுப்பெற்றுள்ளது. ஊழல் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தக்க தண்டனை வாங்கித் தருவதோடு, அப்படிப்பட்ட குற்றங்களை இழைத்தவர் யாராக இருந்தாலும் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை மக்களிடம் உருவாக்க வேண்டும் அமுல் படுத்த வேண்டும்

 • Chockalingam - Managiri - Karaikkudi,இந்தியா

  ஒரு தனி மனிதனுக்கு அரசாங்கத்தில் ஒரு காரியம் நடக்க வேண்டுமென்றால் அதற்கு கொடுக்கப்படுவதாக சொல்லப்படும் பணத்திற்கு லஞ்சம், கையூட்டு, மற்றும் பல பெயர்களில் சொல்லப்படுகிறது. ஆனால், அதே எல்லா மக்களும் அரசிற்கு செலுத்தவேண்டிய பலவிதமான தொகைகளுடன் ஒரு குறிப்பிட்ட தொகையையும் சேர்த்து கொடுக்க வேண்டி இருப்பதற்கு பெயர் சேவை வரி. இதில் என்ன வித்தியாசம்?

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  அடுத்து கொலை குற்றமா? என்றும் வாதாடுவார்கள். வரவர எதெதற்கு சப்பைக்கட்டுவதென்பது தெரியாமல் ஒரு சிலர் வாதாடுகிறார்கள்.

 • PENPOINT,INKLAND - ZEN EYE,இந்தியா

  அறிவியல் பூர்வமாக ஊழல் செய்து கமிஷன் பெற்று ஆரம்ப புள்ளி வைத்தவர் நம்ம ஊர் கட்டுமரம் என்று அன்றே சர்க்காரியா கமிஷன் கூறியது .சந்துரு,தான் ஒரு LEFTIST என்று காட்டிக்கொள்ள முயற்சிப்பவர் .அதனால் இந்த நிகழ்வை விடுதல் அதாவது LEFT செய்துவிட்டார் .அதென்னவோ தெரியவில்லை படித்தவர்கள் தங்களை படித்தவர்களாக நிரூபிக்க வேண்டுமானால் கருணாநிதியை நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரிக்கிறார்கள் .மேலும் எல்லா ஆண்களுக்கும் ஆணாதிக்க உணர்வு சிறிதேனும் இருக்கும் .அந்த சிறிது ,பெண் தலைவர்களை ஆதரிக்க விடாது .இதுவும் கருணாநிதிக்கு ஒரு PLUS POINT .கருணாநிதி செய்த முன்வினை பயனே இதற்கு காரணம் என்று நினைக்கிறேன்

 • Ramamoorthy P - Chennai,இந்தியா

  அரசு எந்திரத்தில் எல்லாவற்றிலும் வெளிப்படை தன்மை வர வேண்டும். இணைய வழி தொடர்பு மூலம் ஒருவர் அரசு சம்பந்தப்பட்ட எந்த ஒரு காரியத்தையும் நிறைவேற்றிக்கொள்ளலாம் என்கின்ற நிலையும் வர வேண்டும். அப்போது இந்த லஞ்ச லாவண்யங்கள் குறைய வாய்ப்பு உள்ளது. தவிர இது எல்லாவற்றையும் விட சமுகத்தில் தர்ம நியாயங்களை கடை பிடிக்கும் போக்கும் தனி மனித ஒழுக்கமும் குறைந்த வருவதால் சுயநலம் மேலோங்குகிறது. அதை திருப்திப்படுத்த எது செய்தாலும் சரியே என்கின்ற மனப்பாங்கும் நிலவி வருகிறது. இதுகலையப்படும்போது லஞ்சம் வாங்குவது குற்றம் என்கின்ற மனப்பான்மை ஓங்கி வளரும்.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  தொழில் நுட்பத்தின் மூலம் நிறைய ஊழல்களை அடியோடு குறைக்க முடியும்.. ஒரே ஒரு உதாரணம், ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்யும் வசதி.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement