Advertisement

பேரன்பு... பெருங்கோபம் - வேல. ராமமூர்த்தி

மண் வாசனை படங்களில் நடிகராகவும், எழுத்தாளராகவும், வெற்றி வாகை சூடி வரும் எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியைச் சேர்ந்தவர். எழுத்துக்கள் என்னுடையது அல்ல; அது சமூகத்தின் சொத்து என்று கூறியவர். இலக்கியவாதிகளின் 'பிதாமகன்' என்று சொல்லப்படும் எஸ்.ஏ.பெருமாளால் வளர்க்கப்பட்டவர்.எழுத்தில் படைக்கும் பாத்திரமாக ஊடுருவியதால் என்னமோ, எழுத்தாளருக்கு நடிப்பு வரும் என்பதை வெளி உலகுக்கு அழுத்தமாக எடுத்துரைத்தவர். ராமநாதபுரம் சேது மண்ணை சார்ந்து எழுதிய இவரது எழுத்து, தமிழில் அவருக்கு தனித்த இடத்தை கொடுத்துள்ளது. 'மதயானை கூட்டத்தில்' தன் சினிமா பிரவேசத்தை துவக்கினார். பாயும்புலி, சேதுபதி, கொம்பன், ரஜினி முருகன், கிடாரி, சேதுபதி என்று பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக:
* எழுத்துலக அங்கீகாரம் என்று எதை கருதுகிறீர்கள்?
எழுத்துக்கான அங்கீகாரம் என்பது இன்னும் இளைஞனாக இருக்கிறேன். அதைவிட இன்னும்
மனிதனாக இருக்கிறேன். தோல்வியை சந்தித்ததாக கருதவில்லை. எல்லா வெற்றி, தோல்வியையும் வருகிற, கடந்து போகிற விஷயமாக பார்க்க எழுத்து கற்று கொடுத்திருக்கிறது. மக்களுக்கான எழுத்து எழுதியவன். இந்த பெருமை எனக்குரிய அங்கீகாரம்.
* படைப்பில் உங்களுக்கு பிடித்தது?
என் கதைகள் அனைத்தும் நான் பிறப்பதற்கு முன்பு நடந்ததாக பெரியோர் சொல்ல கேள்விப்பட்டது. 40, 50 ஆண்டுக்கு முன்பு உள்ள சம்பவங்கள் தான் கதை. உடனே எழுதிவிட மாட்டேன். மனதில் போட்டு உணர்வுகளாக மாற்றி, வெளிவரும் வார்த்தைகளை கதையாக ஒரு நாளில் எழுதி விடுவேன். பெற்ற பிள்ளைகள் பிடிக்காது என்று சொல்ல முடியாது. எல்லாமே பிடிக்கும்.
* எது எழுத்து?
வாசகனின் கபாலத்தை திறந்து புத்திமதியை கொட்டுவது எழுத்தல்ல. உணர்வை கொட்டுவது தான் எழுத்து.
* மிரட்டும் தோற்றம்?
படிப்பால், நாகரிகத்தால் வருவது தோற்றமல்ல. தாய், தந்தை வழி வருவது தான் தோற்றம். என் தோற்றத்துக்கு காரணம் என்னுடைய அப்பா மற்றும் குலதெய்வம் இருளப்பசாமி. அவர்களை நினைப்பதால், என் தோற்றம் முரடாக இருக்கலாம். உண்மையில் நான் ஒரு குழந்தை.
* எப்போதும் எழுத்தாளர், இப்போது நடிகர் என்ன செய்து கொண்டிருக்கிறார்
தனுஷ் அப்பாவாக 'என்னை நோக்கி பாயும் தோட்டாவில்' நடித்து கொண்டிருக்கிறேன். கிடாரியை தாண்டி, மதயானை கூட்டத்தை தாண்டி, மிகப்பெரிய இயக்குனர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளேன்.
* சினிமாவின் பயணம் எதை நோக்கி செல்கிறது?
சினிமா பயணம் பொழுது போக்கை நோக்கி செல்கிறது. நல்ல இலக்கியவாதிகள், கதாசிரியர்கள் பணக்காரர்கள் மத்தியில் படம் எடுத்து விட முடியாது. நல்ல படங்களை விட, பொழுது போக்கு, பெரிய பட்ஜெட் படங்கள்தான் வெளி வருகிறது. நல்ல இலக்கிய தொடர்புடையவர்களின் படங்களும் வெளி வருவது அரிதாக நடக்கிறது.
* குற்றப்பரம்பரை இயக்குவது ?
இயக்குவது பாலா.
* எழுத்து சிரமங்களை தந்துள்ளதா?
பெண்ணுக்கும், பையனுக்கும் பருவம் வந்தால் திருமணம் செய்கிறோம். அதை தொடர்ந்து பெண்ணுக்கு ஏற்படும் பிரசவம் கடினம் தான். ஆனால், குழந்தையை வளர்ப்பது சுகம். அதுபோல் தான் எழுத்து. தமிழில் எழுத்தாளராக வாழ்வது கடினம்.குற்றபரம்பரை நாவல் எழுதும்போது, மதுரை பெருங்குடி தபால் அலுவலகத்தில் பணிபுரிந்தேன்.வாரத்தில் ஒரு நாள் கூட நான் வீட்டுக்கு வர முடிவதில்லை.தற்போது சந்தோஷப்படுவது எழுத்தால் தான்.
* எழுத்தின் நேர்மை என்பது என்ன?
நுாறு சதவீதம் ஒப்பு கொடுக்க வேண்டும், நியாயவாதியாக இருக்க வேண்டும். சக மனிதனின் பசியை நம் பசியாக நினைக்க வேண்டும். எதிலும் சமரசம் செய்யக்கூடாது. ஏகப்பட்ட நஷ்டங்கள் வந்தால், அதை தாங்கி நிற்க வேண்டும். நல்ல மனது இருந்தால், நல்ல இலக்கியம் பிறக்கும். துளி கறை இருந்தால் கூட எழுத்து கறைபட்டு விடும்.
* பேரன்பு, பெருங்கோபம் என்றால் என்ன?
ஒடுக்கப்பட்ட உரிமை மறுக்கப்பட்ட கீழ் நிலை மக்களின் மேல் பாசம் கொண்டவன். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடம் பெருங்கோபம் கொண்டவன்.
* நடிப்பு எப்படி வந்தது?
கதை எழுதி கொண்டே, அறிவொளி இயக்கம், த.மு.எ.சங்கத்தில் இருந்தபோது, வீதி நாடகங்களை எழுதி இயக்கி நடித்துள்ளேன். ராமநாதபுரம் மாவட்டத்தில் பனையேறி, மீனவர்கள், வறண்ட கருவை காட்டில் இருந்த ஆயிரக்கணக்கானவர்களை கலைஞர்களாக உருவாக்கி உள்ளேன். நான் படைத்த பாத்திரத்தில் உயிர் இருந்தது. பாத்திரத்தின் அசைவில் நான் இருந்தேன். இதனால் சினிமாவில் என்னால் எளிதாக ஊருடுவ முடிந்தது, என நினைக்கிறேன்.
* சினிமாவில் பிரவேசிக்கும் போதே உங்கள் கதையால் இரு இயக்குனர்கள் சண்டையிட்டு கொள்கிறார்களே?
இயக்குனர்களாக அவர்கள் பெரிய ஆட்கள். எழுத்தில் நான் பெரியவன். எழுத்து விற்பனை சரக்கல்ல. குற்றப்பரம்பரை கதையை பாலாவுக்கு கொடுத்துள்ளேன்.
* எழுத்து, நடிப்பு எது அடையாளப்படுத்துகிறது.
நடிப்பு தான் அடையாளப்படுத்தியது. நடிப்பில் கொண்டு வந்தது எழுத்து தான்.
* பாதித்தது?
முதலில் சிறுகதைகள் எழுதியபோது, உண்மையான பெயரை போட்டு எழுதி விட்டேன். அதன் விளைவு என்னை வருத்தப்பட வைத்ததுண்டு.
* புதிய எழுத்தாளன் நிலை?
இலக்கிய வாதியாக எழுதியவர்கள் 10 ஆண்டில் இல்லை என்றே கூறலாம். 70--80-களில் வந்த எழுத்தாளர்கள் தான் இன்றும் பேசப்படுகின்றனர். இன்றைய எழுத்தாளர்களிடம் சினிமா மோகம் வந்து விட்டது. புகழ் பொருளில் நாட்டம் போகிறதே தவிர, சமூகத்தில் இலக்கிய பாத்திரம் என்ன என்பது தெரியவில்லை.தற்போது நான் குருவாக இருந்தாலும், நல்ல சிஷ்யனை உருவாக்க முடியாது, என்றார்.
இவரை பாராட்ட: 96770 28003.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Sivaraja - Chennai,இந்தியா

    தாங்கள் நல்ல சிஷ்யனை உருவாக்க முடியாது என்றதனால் குருவாக இருக்க தகுதி உடையவர் பற்றி எழுதுகிறோம். ஸ்ரீ சாய்பாபாவின் அற்புதங்கள் சத்குரு என்பார் கனவிலும்கூடத் தமது அடியவர்களிடம் இருந்து எவ்விதச் சேவையையோ, இலாபத்தையோ எதிர்பார்ப்பதில்லை. மாறாக அவர்களுக்குச் சேவைசெய்ய விரும்புகிறார். தாம் உயர்ந்தவர், தமது அடியவர் தாழ்ந்தவர் என்றும் அவர் எண்ணுவதில்லை. அவரைத் தமது புதல்வன் என்று கருதுவதோடு மட்டுமல்லாது தமக்குச் சமமானவன்அல்லது பிரம்மத்துக்குச் சமமானவன் என்று கருதுகிறார். சத்குருவின் முக்கியமான பண்பு அவர் அமைதியின் உறைவிடம் என்பதே. அவர் அமைதியற்றோ, மனவுளைவுடனோ இருந்ததே இல்லை. கற்றோன் என்ற கர்வம், அவருக்குக் கிடையாது. ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் யாவரும் அவருக்கு ஒன்றே. தம்முடைய இளமையான காலத்தில்கூட பாபா எதையும் சேகரிக்கவில்லை. (சில்லிம் என்ற புகைக்குழாய் மட்டும் இருக்கலாம்) அவருக்குக் குடும்பம் ஏதுமில்லை, நண்பர் யாருமில்லை, வீடு ஏதும் இல்லை, எவ்வித ஆதாரமும் இல்லை, பதினெட்டாம் வயதிலிருந்தே அவரின் மனக்கட்டுப்பாடு முழுமையானதும், அசாதாரணமானதாகவும் இருந்தது. அப்போது அவர் தனியான இடத்தில் பயமற்று வாழ்ந்தார். எப்போதும் அவர் ஆன்ம உணர்விலேயே மூழ்கி இருந்தார். தமது அடியவர்களின் தூய அன்பைக்கண்டு அவர்களின் விருப்பப்படியே, அவர் எப்போதும் நடந்தார். எனவே ஒருவகையில் அவர்கள்பால் அவர் சார்ந்தவரானார். பூதவுடலில் வாழ்ந்தபோது தமது அடியவர்களுக்கு என்னென்ன அனுபவங்களை அளித்து வந்தாரோ, அதே அனுபவங்களை அவரை நேசிப்பவர்களுக்கு மஹாசமாதியான பின்பு இன்றும் அளித்து வருகிறார். அன்று 1912, April சில்லிம் என்ற மட்குழாயில் புகை பிடித்துக்கொண்டிருந்த பாபா, அதை பாலாராம் துரந்தரிடம் நீட்டி புகை பிடிக்குமாறு அழைத்தார். புகைபிடித்து வழக்கமில்லை எனினும், பாலாராம் அக்குழாயை வாங்கிக்கொண்டு பெருஞ்சிரமத்துடன் புகைபிடித்துவிட்டு, பக்தியுடன் வணங்கி அதைத் திருப்பி அளித்தார். பாலாராமுக்கு இதுவே மிகமிகப் புனிதமான நேரம். ஆறு ஆண்டுகளாக அவர் ஆஸ்துமாவால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். இப்புகை அவரை முழுவதுமாகக் குணப்படுத்தியதுடன் மீண்டும் அவ்வியாதிக்கு உட்படுத்தவேயில்லை. ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஒரு குறிப்பிட்ட தினத்தில் மீண்டும் அவருக்கு ஆஸ்துமாவின் தாக்குதல் நேரிட்டது. இது பாபா மஹாசமாதி அடைந்த அதே நேரமாகும். இன்று 2014 May தங்கள் அசீர்வாதத்தின் அடையாளத்துடன் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எங்கள் வேண்டுதலை ஏற்று, தாம் விரும்பிய ஒரே பொருளாகிய சிலீம் என்ற புகை குழாய் வடிவில் மச்சத்தை பிறக்கும் போதே எமது இளைய புதல்வியின் வலது கை மணிகட்டில் இடம்பெற செய்து லீலை செய்துள்ளார்

  • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

    நல்ல பேட்டி .தங்கள் கருத்துக்கு நன்றி அய்யா .முதலில் திரையில் தான் உங்களை பார்த்தேன் .ஏதோ வித்யாசமான மனிதர் என்று தோன்றியது .தாங்கள் எழுத்தாளர் என்பது எனக்கு ஆச்சர்ய குறி அல்ல .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement