Advertisement

உரையாடல் இல்லாத களம் - ஒளிப்பதிவாளர் செழியன் 'பளீச்'

திரையில் விருந்து படைக்கும் ஓவியமே ஒளிப்பதிவு. ஒரு காட்சிக்குள் ரசிகர்கள் எதைப் பார்க்க வேண்டும் என்பதையே ஒளிப்பதிவாளர் தான் முடிவு செய்கிறார். கல்லுாரி, தென் மேற்கு பருவக்காற்று, பரதேசி, மகிழ்ச்சி, தாரைத் தப்பட்டை படங்களில் முத்திரை பதித்தவர் ஒளிப்பதிவாளர் செழியன். தற்போது 'ஜோக்கர்' படத்திலும் வெற்றி கண்டுள்ளார்.

அவர் நம்மிடம் கூறியது:
சிறு வயதிலேயே நுால்கள் படிக்கும் பழக்கம் அம்மாவால் ஏற்பட்டது. விக்ரமாதித்தன் கதை ரொம்ப பிடிக்கும். தந்தை ராமலிங்கம் அடிக்கடி சினிமாவிற்கு அழைத்துச் செல்வார். அவர்களாலேயே கவிதை, இசை, ஓவியம் மீது காதல் ஏற்பட்டது.
அந்த கலை ஆர்வமே பொறியியல் படித்த என்னை சினிமாவை நாடச் செய்தது. திரைப்படம், நாடகம் மீதான ஆர்வத்தை செயல் வடிவமாக பார்க்க வைத்தது சிவகங்கை நாட்டரசன்கோட்டையும், அங்கிருந்த நண்பர்கள் தான்.
ஒரு வெளிநாட்டு திரைப்பட விமர்சகர், 'பெரும்பாலான இந்திய படங்கள், படம் பிடிக்கப்பட்ட வானொலி நாடகங்கள்,' என்று சொன்னார். இது வருத்தப்பட வைக்கிறது. படம் காட்சிகளால் கதை சொல்ல வேண்டும்; வார்த்தைகளால் அல்ல. ஒலியும், காட்சியும் சரியான விதத்தில் அமையும் தருணமே நல்ல திரைப்படம் உருவாகிறது.
ஒளிப்பதிவாளருக்கும், இயக்குனருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இருவரும் ஒரே பணியை வெவ்வேறு விதங்களில் செய்கின்றனர். இயக்குனர் மனதில் தோன்றிய காட்சியை,
நிஜக்காட்சியாக ஒளிப்பதிவாளர் மாற்றுகிறார்.
ஒளிப்பதிவாளருக்கு காட்சியில் எதனை மறைக்க வேண்டும். எதனை காட்ட வேண்டும் என்கிற புரிதல் இருக்க வேண்டும். ஜோக்கர் படத்தில், ஒளியுடன் இருளையும் சேர்த்து காட்டியதால் குடிசை காட்சிகள் சிறப்பாக அமைந்தன. ஒவ்வொரு படத்திலும் ஒளிப்பதிவில்
புதுவித முயற்சியை செய்கிறேன். ஒளிப்பதிவு விதிகளுக்குள் இருக்கிறதா என்பதை பார்ப்பதில்லை; அதை மீறுவதே என் விருப்பம்.
படத்தின் ஒவ்வொரு சட்டகமும் ஓவியமாக இருக்க வேண்டும். வணிகம் சார்ந்த நம் தமிழ்படங்களில், அதற்கான சாத்தியங்கள் குறைவு. பெரும்பாலான நேரங்களில் கதாபாத்திரங்களே பேசுவர். மவுனம் என்பது அரிது. உரையாடல் இல்லாத களமே ஒளிப்பதிவாளருக்கு உரியது. பரதேசியில் துவக்க காட்சி, தென்மேற்கு பருவக்காற்றில் ஆடு திருடுகிற காட்சி, ஜோக்கரில் இரவில் கழிப்பறைக்கு செல்லும் காட்சி- இங்கு எல்லாம் காட்சி தான் கதை சொல்கிறது. இதில் ஏற்கனவே பார்த்த படங்களின் ஒளி அமைப்போ, காட்சியோ இருந்தால் சுவாரஸ்யம் இருக்காது. ஆசிரியர் குடும்பத்தில் பிறந்ததால் என்னவோ, சிறந்ததை கற்றுக் கொடுக்க விரும்புகிறேன், என்றார்.
வாழ்த்த chezhian6gmail.com.
Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement