Advertisement

இசை கேட்டால் புவி அசைந்தாடும்!

இந்தியாவில் ஆலயங்கள் வழிபாட்டு கூடங்களாக மட்டுமின்றி, சிறந்த கல்வி கூடங்களாகவும் பல நுாறு ஆண்டுகளாக திகழ்ந்து வருகின்றன. நுண் கலைகளை பாதுகாப்பதிலும், வளர்ப்பதிலும் கோயில்கள் வகித்த பங்கு குறைத்து மதிப்பிட முடியாத ஒன்று. கட்டடக்கலை, சிற்பக்கலை போன்றவற்றில் கலைஞர்களுக்கு இருந்த திறமையை பறை சாற்றும் வகையில், கோயில்கள் அமைந்துள்ளன. இசையினுடைய மூன்று அம்சங்களான 'கீதம்' 'வாத்யம்' 'நிருத்தியம்' ஆகியவற்றிற்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பினை, கோயில்களில் நடக்கும் பூஜையின் போது காணலாம். இம்மூன்றும் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படும் ஒரு விஷயமாக கருதப்பட்டதேயன்றி, வெறும் பொழுது போக்கிற்கு உரியவை அல்ல.

இசை, நாட்டியம் : 'நிருத்தியம் சமர்ப்பயாமி' மற்றும் 'வாத்யம் சமர்ப்பயாமி' என்ற 16 வகை உபசாரங்களில் கீதம், வாத்யம், நிருத்தியம் ஆகிய மூன்றிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன. 'காமிகாகமம்' என்ற மத நுாலில் இருந்து இசை, நாட்டியம், போன்றவை தினம் தினம் நடக்கும் பூஜைகளிலும், விழாக்களில் நடக்கும் விசேஷ பூஜைகளிலும் கட்டாயமாக ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரப்படுகிறது.
கோயில்களில் பூஜைகளின் போது நடக்கும் இசை நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு தனி முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நைவேத்யம், புஷ்பம் இவற்றைப்போல் இசையும், நாட்டியமும் இறைவனுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

வேதபாராயண குழுக்கள் : புஜங்கலலித நிருத்தம், கணபதி நிருத்தம் போன்ற அபூர்வமான நடனங்களும், அதனை பார்க்கும் வாய்ப்பும் முன்பு கோயில்களில் மட்டுமே கிடைத்தன. நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அரசர்கள் மற்றும் ஜமீன்தாரர்களால் நிலங்கள் மானியமாக கொடுக்கப்பட்டன. பாடுபவர்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள், இன்றும் கோவில்களில் பல கலைஞர்களுக்கு கொடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சைவ ஆலயங்களில் தேவாரம் பாடுவதற்கு ஓதுவார், வைணவ ஆலயங்களில் அறையர் இன்றும் இருக்கின்றனர். வேதங்களை இசைப்பதற்கு வேதபாராயண குழுக்கள் இன்றும் பல கோவில்களில் உள்ளன. 15வது நுாற்றாண்டில் இருந்து ஒரு விசேஷ வழிபாடாக பஜனை பயன்பட்டு வருகிறது. ஏகாதசி போன்ற நாட்களில் கோவில்களில் பஜனை நடத்தப்படுகின்றன. பஜனை வழியாக தான் குழந்தைகளுக்கு இசை உலகுடன் முதன் முதலில் தொடர்பு ஏற்படுகிறது.

திருப்பள்ளியெழுச்சி : கோவில்களில் பூஜைக்கு பின் இசையும், வேதமும் இசைக்கப்படுகின்றன. நித்ய பூஜையும், திருவிழாக்களும் இசை, நாட்டியத்துடன் நடக்கின்றன. சங்கு, கோயில் மணிகள், முரசு சப்தத்துடன் இறைவன் பக்தர்களால் எழுப்பப்படுகிறார். இந்த வேளையில் திருப்பள்ளியெழுச்சி என்ற பாடல்களும் பாடப்படுகின்றன. திருப்பள்ளியெழுச்சி இசைக்கப்படும் போது நாதஸ்வர வித்வான்கள் பூபாளம், பவுலி, மலயமாருதம், வலஜி, நாதநாமக்ரியா, மாயாமாளவகவுளை முதலிய ராகங்களை இசைப்பர்.

ராகங்கள் பலவிதம் : ஸ்ரீபலி விக்ரஹங்கள் கோயில் பிரகாரங்களில் வலம் வரும்பொழுது, தவிலுடன் இசைக்கப்படும் நாதஸ்வர இசையில், அந்நிகழ்ச்சிக்குரிய பாடல்கள் பல்வேறு ராகங்களில் இசைக்கப்படுகின்றன. உச்சிகால பூஜையின் போது நாதஸ்வரம், தாளவாத்யம் போன்ற கனவாத்யங்கள் பயன் படுத்தப்படுகின்றன. சில கோயில்களில் தீபாராதனைக்கு பின் தொடரும் பூஜையின் போது சைவ கோயில்களில் தேவார திருவாசகங்களை ஓதுவார்கள் இசைப்பதும், வைணவ கோயில்களில் அறையர்கள் பிரபந்தங்களை இசைப்பதும் வழக்கமாக உள்ளன.
நீலாம்பரி, ஆனந்த பைரவி ராகத்திலுள்ள பாடல்களின் மூலம் இறைவன் துாங்க வைக்கப்படுகிறார். வைணவ கோயில்களில் ஆழ்வார்களால் இயற்றப்பட்ட 'நாலாயிர திவ்ய பிரபந்தம்' அறையர்களால் பாடப்படும். அறையர் சேவை என்பது கடவுள் முன் மட்டுமே பாடப்படும்.
அறையர்கள் பிரத்தேக உடையணிந்து பிரத்யேக மெட்டில் சில செய்யுட்களை பாடுவார்கள். தன் கைகளால் தாளம் போட்டு கொள்வார்கள். அபிநயம் செய்து பாடுவதும் உண்டு. கை முத்திரைகளுடன் சில முகபாவங்களையும் செய்து காட்டுவார். இந்த அறையர் சேவை
ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீரங்கம், ஆழ்வார் திருநகரியில் நடை பெறுகிறது.

ஓதுவார் மூர்த்திகள் : சைவ ஆலயங்களில் திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் அருளிய தேவாரம், திருவாசகத்தினை ஓதுவார் மூர்த்திகள் என அழைக்கப்படும் சைவ அடியார்கள் பாடுவர். அவர்கள் பாடும் பொழுது வெண்கலத்தால் ஆன கைத்தாளம் வைத்து தாளம் போட்டு பாடுவர். இது தாண்டவம் ஆடிக்கொண்டே 'பட்டர்' எனும் சமூகத்தினர் செய்யும் தீபாராதனை ஆகும்.
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம், தென்காசி போன்ற கோயில்களில் விசேஷ காலங்களில் நடத்தப்படும் பூஜையில் இது ஒரு முக்கிய அம்சம். ஆண்டுக்கு ஒரு முறை தான் இது நடத்தப்படும். 'ஆருத்ரா' உற்சவத்தின் போது நடராஜருக்கு முன்னால் இது நடத்தப்படும். நாதஸ்வரத்தில் ஆனந்த பைரவி ராகம் வாசிப்பதற்கு ஆடுவர். அச்சமயம் சங்கு, மிருதங்கம், தவில், ஒத்து, தாளம் போன்றவை பக்கவாத்தியங்களாக வாசிக்கப்படும். இந் நிகழ்ச்சி சுமார் 15 நிமிடங்கள் வரை நீடிக்கும். ஆலயங்களில் இசை, ஆலயங்கள் வளர்த்த இசை, இசையே ஆலயம் என இசை பல வடிவங்கள் கொண்டிருந்தாலும் இசையும், ஆலயமும் ஒன்றே. ''இசை கேட்டால் புவி அசைந்தாடும்; அது இறைவன் அருளாகும்,'' என்ற கவிஞர் கண்ணதாசனின் வைர வரிகள் இசையுடன் இறைவன் இரண்டற கலந்திருப்பதை மெய்ப்பிக்கிறது.

- கே.தியாகராஜன்

மிருதங்க இணை பேராசிரியர்,

மதுரை
maduraithiagarajangmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • JAIRAJ - CHENNAI,இந்தியா

    இந்த இசைப்பான்கள் எல்லாமே நேரில் ( தற்காலத்தில் புழக்கத்தில் உள்ள லைவ் ரிலே ..) வாசித்துக் கேட்கத்தான் இன்பம். இன்றைக்குப் பல வருடங்களுக்கு முன்னால் தெற்கு பகுதிகளில் மார்கழி மாதங்களில் மற்றும் கோவில் கொடைகளுக்கு வாசிக்கும் வாத்தியங்கள் மிக அருமையாக இருக்கும். எல்லாமே கோன் வகை என்று சொல்கின்ற ஸ்பீக்கர் வழியாகத்தான் வரும்.சுற்றிலும் வயல் வெளிகளாகவே இருப்பதால், பல கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கோவில் உற்சவங்களுக்கு வாசிக்கும் நாயனங்கள், கொடைக்கே உண்டான வெறி ஏற்றும் தனிவகை மேளம் தவில் ஆகிவைகள் ஒலிப்பது மிக இனிமையாக கேட்கும். காற்றுதான் அதை கொண்டுவரும். சட்டென்று மறைந்து இதைவிட்டு அதன் தொடர்ச்சி மீண்டும் வரும். இதுதான் ஓலி அலைகள். அந்தவகையில் காருகுறிச்சி அருணாச்சலம் நெளிவு சுளிவுகளுடன் மனதை மயக்கும் நாதத்துடன் வாசிக்கும் நாதஸ்வரம். மற்றும் பத்தமடை ராஜா கம்பர் ( இவர் ஆளும் மிக அழகாக இருப்பார்.) கொடைக்கு அசராமல் வாசிப்பதும் கேட்க கேட்க ஒருவகை மயக்கம் கலந்த சுகம்தான். இதே காலகட்டங்களில் வாழ்ந்த நாமகிரிப்பேட்டை அவர்களின் வாசிப்பு நன்றாக இருந்தாலும் அதில் அருணாசலத்தின் நுணுக்கங்கள் இருக்காது. அது வேறுரகம்......வயல் வெளிகளின் வழியாக மிதந்துவரும் இசைக்கு ஈடாகாது. அதே நேரத்தில் ஓரிருமுறை ராஜரத்தினம் பிள்ளையவர்களின் நாத ஒலி சிட்டியில் கேட்டதுண்டு. ஆனால், அது மிகச்சிறப்பாக இருந்தாலும் அமைதி சூழ கேட்காததால் மனம் ஒன்றவில்லை. பல பல வருடங்கள் ஓடிவிட்டது. இன்று பல விற்பன்னர்கள் பலவிதத்தில் ஆண் - பெண்கள் திறமை காட்டுகிறார்கள். முன்னவர்களை மைல்கல்லாக வைத்து பார்க்கும் பொழுது ( எப்படி நடிப்பு என்றால் சிவாஜியை வைத்து அளவிடுகிறோமோ அதே போன்று ) இவர்கள் பின் தங்கிவிடுகிறார்கள். இருந்தாலும், இவர்கள் நாதத்திலும் இனிமை உள்ளது. இதை எல்லாவற்றையும் விட கொடுமை, தற்காலத்தில் கோவில்களில் மற்றும் பிற இடங்களில் இயந்திரத்தால் ஒலிக்கச் செய்வது மிக கொடுமை. இனிமையே இல்லை. விற்பன்னர்களுக்கும் வாய்ப்பு இல்லை.கலைகள் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன.... இறுதியாக ஒன்று.... கர்நாடக இசையில் ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே பாடி வந்த பொழுது, அதே போன்று கட்டுக் குடுமியுடன் பாடிய மதுரை சோமு புறக்கணிக்கப்பட்டது கொடுமை. திறமை அழிவதில்லை என்பதற்கு எடுத்துக் காட்டாக, " மருதமலை மாமணியே ..............." என்று உச்சஸ்தாயில் பாடுபவர்கள் யாருமே அந்த சமூகத்தில் இல்லை என்பது பிற்காலத்தில் பாமரர்களும் அறிந்துகொள்ள வாய்ப்பானது.இது போன்று திறமை இருந்தும் முடங்கிப்போனவர்கள் பலர்.அணைபோட்டுத் தடுத்தும். எழுச்சியுடன் போர்புரிந்தவர்கள் பலர்.ஆக, காற்றில் கலந்து வருபவை என்றுமே மனதை மயக்குபவை.அதற்கு ஈடு இணை இல்லை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement