Advertisement

திரையுலக 'ஜாம்பவான்களை' தந்த பண்ணைப்புரம்

'நேட்டிவிட்டி' மாறாமல், 'கிரியேட்டிவிட்டி'யை கலந்து 'அன்னக்கிளி உன்னை தேடுதே' என்ற பாடலுக்கு முதன் முதலாக இசை அமைத்து, பட்டி தொட்டியெல்லாம் அதனை ஒலிக்க செய்த பெருமை இசைஞானி இளையராஜாவுக்கு உண்டு. உலகம் முழுவதும் பரவியுள்ள இசை பிரியர்களின் மந்திர சொல்லாகவே மாறி விட்டது இவரது பெயர்.
“தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே” என்ற தாலாட்டு பாடலாகட்டும், “எவரிபடி விஸ்யூ ஏ கேப்பி நியூ இயர்” என, ஆங்கிலப்புத்தாண்டை வரவேற்கும் பாடலாகட்டும், எப்போதும் ஏதாவது ஒரு இடத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும். இதுபோன்ற 'எவர்கிரீன்' பாடல்களால் மனித இதயங்களை வெகுவாக கவர்ந்தவர். தாயை தெய்வமாக மதிக்க வேண்டும் என்பதற்காக வாலி எழுதிய 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே... அம்மாவை வணங்காது உயர்வில்லையே' என்ற பாடலுக்கு இசை அமைத்தவர். தாயை நேசிக்கும் இதயங்கள் இப்பாடலை எளிதில் மறக்க முடியாது. அந்த திரையுலக இசை ஜாம்பவான் பிறந்தது, தேனி மாவட்டம் பண்ணைப்புரம் கிராமத்தில் தான். இங்கு நான்கு சகோதரர்களுடன் பிறந்த ராசையா, தன் இசை மூலம் உலகையே கட்டி போட்ட இளையராஜாவாக உருவெடுத்தார்.
தலைமுறைகள் தாண்டியும் திரையுலகில் இன்னும் ஜொலித்துக் கொண்டிருக்கும் இசைமேதை இளையராஜா, அவரது சகோதரர் கங்கை அமரன் மட்டுமல்லாமல், தென் இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளை மணந்த நடிகர் தனுஷின் தந்தையான சினிமா இயக்குனர் கஸ்துாரி ராஜா, மத்திய அரசு விருதை தட்டிச்சென்ற கருத்தம்மா திரைப்பட வசனகர்த்தாவும், நடிகர் சத்யராஜ் நடித்த சேனாதிபதியை இயக்கியவருமான ரத்னகுமார் ஆகியோரின் சொந்த ஊரும்
பண்ணைப்புரம் தான்.
எஜமான், சின்னக்கவுண்டர் உள்ளிட்ட வெற்றி படங்களின் இயக்குனர் ஆர்.வி. உதயக்குமார் பண்ணைப்புரத்தை சேர்ந்த சுச்ச ரீட்டா என்பவரை மணந்தார்.
முன்னர் இருதய பாதிப்புக்குள்ளான இளையராஜா, பூரண குணமடைய வேண்டி பண்ணைப்புரத்தில் இருந்து அவருக்கு முதல் போன் பறந்தது. இதில் நெகிழ்ச்சியுற்ற அவர் தனது கிராம மக்களுக்காக மதுரையில் 'சங்கீத திருநாள்' என்ற 'மியூசிக்கல் ஷோ' வை நடத்தினார். வி.வி.ஐ.பி., க்கள் அதிகம் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் பண்ணைப்புரம் மக்களுக்கு இலவச அனுமதி
அளிக்கப்பட்டது. இன்று சமூகத்தில் என்ன தான் பெரிய அந்தஸ்தில் இருந்தாலும் பண்ணைப்புரத்தில் பிறந்தவர்கள் சொந்த ஊர், மக்களிடம் பாசப்பிணைப்பில் உள்ளனர்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • X. Rosario Rajkumar - TRICHY,இந்தியா

    குன்னக்குடி வைத்தியநாதன், லால்குடி ஜெயராமன், மதுரை சோமு, சிதம்பரம் ஜெயராமன், திருச்சி லோகநாதன், பெங்களூர் ரமணியம்மாள், பாம்பே ஜெயஸ்ரீ, சூலமங்கலம் சகோதரிகள், ........பிறந்த ஊருக்கு பெருமை சேர்த்த இசைக்கலைஞர்கள் வரிசையில் நம் பண்ணைபுரம் இளையராஜா.

  • Singai Vendan - Singapore,சிங்கப்பூர்

    எல்லோரும் ஓர் குலம்...எல்லோரும் ஓரினம்...எல்லோரும் இந்நாட்டு மன்னர் பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை...யாதும் ஊரே யாவரும் கேளிர்...எல்லா மண்ணுக்கும் ஏதோ ஒரு வகையில் மண் மனம் உண்டு...இது பெருசு அது பெருசு என்பது வீண் பேச்சு...எனக்கு என் ஊர் பிடிக்கும் அவன்அ வனுக்கு அவன் அவன் ஊர் பிடிக்கும் இது இயற்க்கை...வாய்ப்பு வந்தால் தான் சச்சின் டெண்டுல்கரே உருவாக முடியும்...இதே இளைய ராஜ இன்னைக்கு வரைக்கும் வேலை தேடி திரிந்திருந்தால்...நல்லா வெளங்கும் பண்ணைப்புரம்

  • Thiyagarajan Srimbhs - Coimbatore,இந்தியா

    பன்னைபுரத்துக்காரர்கள் கோவை மாவட்டத்துக்கு சொந்தக்காரர்கள். ஆர்.சுந்தர்ராஜன்,பாக்கியா எல்லாம் நண்பர்கள்.அதை ஏன் போடவில்லை.ஒரவஞ்சனை.அல்லது லஞ்சம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement