Load Image
Advertisement

வாழ்... வாழவிடு... வாழவை!

  வாழ்... வாழவிடு... வாழவை!
ADVERTISEMENT
வாழ்க்கை என்பது என்ன?


கோடிக்கணக்கான கனவுகள்லட்சக்கணக்கான முயற்சிகள்ஆயிரக்கணக்கான தோல்விகள்
நுாற்றுக்கணக்கான வெற்றிகள்...இருந்தாலும், ஒரு சில நிஜங்களுடன் சில பல நினைவுகளுடன் நாம் வாழும் இந்த நிகழ்வுக்கு பெயர் தான் வாழ்க்கை.இந்த வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், நல்ல வாழ்க்கை எது, எதற்காக வாழ வேண்டும், எத்தனை நாள் வாழ வேண்டும்?
ஒரு முறைதான் வாழ்க்கை; பல முறை அல்ல. இந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து விட வேண்டும். வாழ்க்கை எவ்வளவு பெரியது! எத்தனை அரியது! ஒரு செல் உயிர் அமீபாவை பற்றி அறிவியலில் அறிந்தோம். லட்சக்கணக்கான செல்கள் கொண்ட மனிதனாக பிறக்க, எத்தனை யுகங்கள், எத்தனை பரிணாமங்கள் கடந்தோம். எப்படிப்பட்ட வாழ்க்கை இந்த மனித வாழ்க்கை!
அதை போற்றுகிறோமா, அதை பாராட்டுகிறோமா, கொண்டாடுகிறோமா, இல்லை ரசிக்கிறோமா? இக்கரைக்கு அக்கரை பச்சையாய் ஒன்று, அடுத்தொன்று, மற்றொன்று, பிறகு வேறொன்று என்று மனம் தாவித் தாவி நிம்மதி இழந்து, மகிழ்ச்சியின்றி, அமைதியின்றி வாழ்வதற்கா இந்த வாழ்க்கை.லெபனான் கவிஞர் கலில் ஜிப்ரான், 'மனிதனாகப் பிறப்பது பெரிய விஷயமல்ல, மனிதனாக வாழ்வதே மிக முக்கியம்' என்றார்.

மனிதனாக வாழ்வது எப்படி

தான், தனது, தனக்கு, தன்னுடையது என்று வாழாமல் தன்னைச் சார்ந்தவர்களுக்கும், பிறருக்கும் வாழும் தன்னலம் இல்லாத மனிதர்களே உண்மையான மனிதர்கள்.
தமிழின் ஒவ்வொரு வார்த்தையையும், வாழ்வின் ரகசியத்தை திறக்கும் ஒரு மந்திரச் சொல்லாக செதுக்கி வைத்தார்கள் நம் முன்னோர்கள்.'யாதும் ஊரே! யாவரும் கேளீர்' என்ற கணியன் பூங்குன்றனார் வாக்குப்படி வாழ்ந்துவிட்டால், வாழ்வின் துன்பம் என்பது ஏது?
'நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே' என்ற பாரதியாரையும், 'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' என்ற ராமலிங்க அடிகளையும் மனதில் நிறுத்தி விட்டால், மகிழ்ச்சிக்கு குறை என்பது ஏது? இந்த பூமியையும், பூமியில் உள்ள அத்தனை உயிர்களையும் தம்மை போல் நேசிக்க கற்றுக்கொண்டு விட்டால், அமைதிக்கு ஏது பஞ்சம்?
வார்த்தைகளே வாழ்க்கை. நாம் எப்படிப்பட்ட வார்த்தைகளை நம் வாழ்வில் உபயோகப்படுத்துகிறோமோ, அதுவே நம் வாழ்க்கையாய் மாறி இருப்பதைப் பார்த்து வியந்து போயிருக்கிறோம். ஒவ்வொருவரின் வாழ்க்கை அர்த்தத்திற்கான மந்திர வார்த்தை எப்போது, எங்கு, யாரிடம் இருந்து கிடைக்கிறது என்பது இன்றும் பெரிய ரகசியமாகவே இருக்கிறது. திடீரென்று ஒரு நாள் கிடைக்கும் அது, நம் வாழ்க்கையையே புரட்டி போட்டு விடுகிறது. இப்போது நாம் தமிழில் ஒரு ஒற்றை வார்த்தையை எடுத்துக் கொள்ளுவோம்.

வாழ்க்கை; அந்த ஒற்றை வார்த்தையில்தான் எத்தனை எத்தனை கருத்துக்கள். அத்தனை அத்தனை அர்த்தங்கள். ஓராயிரம் சிந்தனைகள் பொதிந்து கிடக்கின்றன. வாழ்க்கை என்ற சொல்லின் முதல் எழுத்தையும், இறுதி எழுத்தையும் எடுத்துக் கொள்வோம்; அது 'வாகை'
வாழ்க்கை என்பது தொடக்கம் முதல் இறுதி வரை வாழ்ந்து, வாழ்வில் வாகை சூட வேண்டிய ஒன்று என்று அது நமக்கு உணர்த்தவில்லையா? வாழ்வுக்கு வருடங்கள் சேர்ப்பது வாழ்க்கையல்ல. வருடங்களுக்கு வாழ்வு சோர்ப்பதுதான் வாழ்க்கை. கின்னஸ் ரெக்கார்டு புத்தகம், உலகில் அதிக வருடங்கள் வாழ்ந்த மனிதர்களின் பெயர்களை தன்னுள் கொண்டு உள்ளது. ஆனாலும் அவர்களை பற்றி நாம் யாரும் அறிந்திருக்கவில்லை.

வெகு குறுகிய கால ஆண்டுகளே நம்மோடு வாழ்ந்த 'அன்பென்று கொட்டு முரசே' என்ற நம் பாரதியாரையும், 'நுாறு இளைஞர்களை என்னிடம் கொடுங்கள். இந்த உலகத்தை மாற்றிக் காட்டுகிறேன் ' என்ற விவேகானந்தரையும் எத்தனை வருடங்கள் கடந்தாலும், இன்னும், இப்போதும், எப்போதும் நம் கண் முன் இருப்பது போல் நினைத்துக் கொண்டுதான் இருக்கிறோம், போற்றிக் கொண்டுதான் இருக்கிறோம்.
அவர்கள் தம் கூறிய கருத்துகளை புதிதாய், புத்தம் புதிதாய் ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். இதிலிருந்து, நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது முக்கியம் அல்ல, எப்படி வாழ்ந்திருக்கிறோம் என்பதே முக்கியம் என்று புரியவில்லையா?
வாழ்க்கையில் இறுதி எழுத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம் 'கை'. இந்த வாழ்வில் வெற்றி பெற இரண்டு கைகள் மட்டும் இருந்தால் போதாது. மூன்றாவது 'கை' ஒன்று நமக்கு தேவை அது 'நம்பிக்கை'. நம் மேல் நாம் கொண்டுள்ள நம்பிக்கை மட்டுமே, நம்மை வாழ்வில் உயர்த்தும்.

வாழ்க்கையில் நம்பிக்கை

நெப்போலியன் உலகை வெல்ல போருக்குச் செல்லும்போது, தன்னிடம் இருந்த அத்தனை செல்வங்களையும் பிரித்து கொடுத்து விட்டார். அது பற்றி அவரிடம் கேட்டபோது, எனக்கு என்மேல் அதிக நம்பிக்கை இருக்கிறது.இதை விட பல மடங்கு திருப்பி கொண்டு வருவேன் என்று கூறினார். அது போலவே நடந்தது.அப்படிப்பட்ட தன்னம்பிக்கை வாய்ந்த மனிதர் கூட இறந்தவுடன், தன் கைகளை வெளியில் வைத்து, வாழ்வை விட்டு போகும் போது, தான் எதையும் எடுத்துச் செல்லவில்லை என்று மக்களுக்கு வாழ்வின் அர்த்தத்தை விளக்கச் செய்தார். 'எதை நாம் கொண்டு வந்தோம்; அதை நாம் இழப்பதற்கு ' என்ற பகவத் கீதையின் கருத்தும் அதுதான் அல்லவா! அடுத்து, இப்போது, முதல் இரு எழுத்துக்களை எடுத்துக் கொள்வோம்.

'வாழ்...' ஆம். இந்த வாழ்க்கையை முழுவதும் வாழ்ந்து பார்த்து விட வேண்டும். ரசிக்க, ரசிக்க, திகட்ட, திகட்ட இந்த வாழ்க்கையை, அன்பு வழியில், அற வழியில், அமைதி வழியில் வாழ்ந்து பார்த்து விட வேண்டும்.வாழ விடு... அது போல் நாம் மட்டும் நலமாக, மகிழ்ச்சியாக வாழாமல், நம்மைச்சுற்றி உள்ள மற்றவர்களையும் துன்புறுத்தாமல், தொந்தரவு படுத்தாமல் வாழ விட வேண்டும்.

வாழ வை!

நம்மை விட தாழ்ந்த நிலையில் உள்ளவர்களுக்கு உதவி புரிந்து, சேவை செய்து அவர்களையும் நம்மை போல் அமைதியாக வாழ வைக்க முயற்சி செய்ய வேண்டும். உலகமே ஒரு வாடகை வீடு. இதில் நாம் செய்யும் சேவையே, நாம் அதற்கு தரும் வாடகை.

அர்த்தமுள்ள வாழ்க்கை
நாம் பிறருக்கு செய்யும் நற்செயல்கள் அத்தனையும் ஒரு பூமராங் போல் பல மடங்காக நமக்கு திருப்பி வரும். அப்போதுதான், நமது வாழ்க்கை ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையாக மாறும். நேற்று என்பது நினைவு, நாளை என்பது கனவு இன்று மட்டுமே நிஜம். மகத்தான வாழ்க்கை வாழ சாரியான நேரம் இதுவே.அனைவரும் சேர்வோம். இரு கை விரிப்போம். நம்பிக்கைச் சிறகு சேர்ப்போம். இணைந்து பறப்போம். வாழ்வை ரசிப்போம்.
- அல்லிராணி,சமூக ஆர்வலர், திருச்சிalliranibalaji@gmail.com


வாசகர் கருத்து (3)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement