Advertisement

கமல் போல் ஆவது லட்சியமல்ல - விஷ்வக்

விஷுவல் கம்யூனிகேஷன் படித்து ஹீரோவாக தான் நடிப்பேன் என பிடிவாதம் பிடிக்கும் நடிகரில் சற்று மாறுபட்டிருக்கிறார் விஷ்வக். ராஜபாளையத்தை சொந்த ஊராக கொண்டு நடிப்பு துறையில் கால்பதிக்க வேண்டும் என வைராக்கியம் மிகுந்தவராக வலம் வருகிறார். தற்போது, 'மதுரை-தேனி பாகம்- 2'ல் ஹீரோவாக அடியெடுத்து வைத்துள்ள இவர், துடிப்புடன் கூறிய சில பூரிப்புகள்...
* வாய்ப்புகள் தள்ளிப்போவதற்கு காரணம் வயதா...
எந்த நடிகரும் தனது வயதை கூற தயங்குவார்கள். ஏனெனில், வயதை காரணம் காட்டி பட வாய்ப்புகள் தள்ளிப்போகும். ஆனால் இது உண்மை அல்ல. ஒரு நடிகர் முன்னணி நடிகராக வலம் வர வேண்டும் என்றால் குறைந்தது 5 ஆண்டுகள் ஆகும். 25 வயதில் நடிக்க ஆரம்பிக்கும் நடிகர் 30 வயதில் தான் பேசப்படுவார். இதற்கு பல நடிகர்களை உதாரணமாக கூறலாம். இதுபோல் நானும் உச்சத்திற்கு வருவேன். நானும் வயதை கூறப்போவதில்லை. வெற்றி
பெற்றவுடன் வயதை கூறுகிறேன்.
* உங்களது ரோல் மாடல்
என் ரோல் மாடல் விஜய்சேதுபதி. எந்த கேரக்டரை கொடுத்தாலும் அர்ப்பணிப்புடன் நடிப்பது அவரது வழக்கம். எந்த ஒரு 'ஓவர் ஆக்டிங்' இல்லாமல் சாதாரணமாக நடிப்பார். அவரது வழியை பின்பற்றி நடிக்க கற்றுக்கொண்டேன். இதுபோல் நடிப்பவர்களை தான் தற்போது ரசிகர்கள் விரும்புகின்றனர். விஜய் சேதுபதி ஏற்று நடித்த ரோல்களில் நடிக்க மிகவும் ஆசை.
* உங்களின் முதல் படம்
எனது முதல் படம் இயக்குனர் சேரன் தயாரித்து நடித்த 'ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை'. அதில் ஒரு சிறிய ரோல் எடுத்து நடித்தேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் அடிப்படையில் தான் 'மதுரை-தேனி பாகம் 2 'ல் என்னை இயக்குனர் எஸ்.பி.எஸ்.குகன் தேர்வு செய்து நடிக்க வைத்தார். இந்த படம் முதல் பாகத்தை தழுவிய கதை அல்ல. முற்றிலும் வேறுபட்டது. கமர்ஷியல் கலந்த ஒரு குடும்பபாங்கான காமெடி படம். இன்று இது மட்டுமே கூற முடியும். கூறினால் இயக்குனரிடம் அடிவாங்க நேரிடும்(சிரிக்கிறார்).
* படத்தின் ஹீரோயின்கள்...
'மதுரை-தேனி பாகம் 2'ல் முன்னணி திரை நட்சத்திரங்கள் பலர் நடிக்கின்றனர். கேரளாவில் இருந்து இரு புதுமுக ஹீரோயின்களை இயக்குனர் அறிமுகப்படுத்தி உள்ளார். முழு படப்படிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது. அடுத்த மாதம் இறுதிக்குள் படம் திரைக்கு வர உள்ளது. திரையரங்கில் மூன்று மணிநேரம் மக்களை மகிழ் விக்கும் படமாக இது இருக்கும்.
* உங்களது ஆசை...
இயக்குனராவதே எனது ஆசை. ஆனால் தற்போது நடிகனாக அறிமுகமாகி உள்ளேன். எல்லோரும் இயக்குனராகி நடிகனாக அறிமுகமாவார்கள். இதில் நான் சற்று வேறுபட்டு உள்ளேன். நடிப்பில் கமல் போல் ஆகவேண்டும் என்பது எனது லட்சியம் அல்ல. அவரை போல் நடிக்க ஆசைபடுவது அதிக பேராசை. எனக்கு தெரிந்த நடிப்பில் முழு முயற்சியில் நடித்து வருகிறேன். கண்டிப்பாக திரைத்துறையில் வெற்றி பெறுவேன்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement