Advertisement

கனவுகளைக் கைப்பற்றுவோம்...- 34

அன்பு தோழமைகளே நலமா ..
இன்று நாம் பார்க்கவிருப்பது விற்பனைக்கு அடிப்படைத் தேவையான சாதுர்யமான பேச்சுக்கலையை வளர்த்து கொள்வது எப்படி என்பது குறித்தே...
ஒரு ஊரில் குப்பன் என்ற பெயருடைய மனிதர் ஒருவர் இருந்தார்.
அவரை எல்லோரும் முட்டாள் என்றும் பிழைக்கத் தெரியாதவர் என்றும் கேலி செய்து வந்தனர்.
இதைக் கேட்டுக் கேட்டு அந்த மனிதருக்கு வெட்கமாகிப் போய்விட்டது. அந்த ஊரின் எல்லையில் ஒரு முனிவர் இருந்தார். அவரிடம் சென்று அந்த மனிதர் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கேட்டார்.
"கடவுளை நினைச்சுத் தவம் செய். உனக்கு வேண்டிய வரத்தைக் கொடுப்பார்..." என்று அந்த முனிவர் கூறினார்.
குப்பனின் கடுமையான தவத்திற்கு பின் கடவுள் அவர் எதிரில் தோன்றினார்.
"பக்தனே, உனக்கு என்ன வரம் வேண்டும்?'' கடவுள் கேட்டார்.
''தவம் செய்தால் கடவுள் வந்து வரம் கொடுப்பார்னு அந்த முனிவர் சொன்னார், அதான்...'' என்றார் நம்ப குப்பன்..
"என்ன வரம் வேண்டும், கேள்...'' என்றார் கடவுள்.
"அதான் கேட்டேனே வரம்... அதைக் கொடு...'' என்றார் குப்பன்
இப்போது கடவுளுக்கே குழப்பம் வந்து விட்டது. கடவுள் பிரத்யட்சம் செய்துவிட்டால் யாருக்காவது வரம் கொடுத்தே ஆக வேண்டும்....! அதுவும் தவம் செய்தவருக்குத் தவறாமல் வரம் கொடுத்தே ஆக வேண்டும்.
என்ன செய்யலாம்......!? - கடவுள் யோசித்தார்.
"பக்தா, இப்போது நீ என்ன நினைக்கிறாயோ, அதையே வரமாகக் கொடுக்கின்றேன்... பெற்றுக் கொள்... போ!''
"அய்...யய்ய....யோ... நான் ஒண்ணும் நினைக்கவே இல்லையே!''
"அதான்...'' என்று சொல்லிவிட்டுக் கடவுள் மறைந்து விட்டார்.
..- வள வள பேச்சை விட நம் பேச்சில் நோக்கம் இருக்க வேண்டும். எப்படிப் பேச ஆரம்பிப்பது , அதுவும் அறிமுகமில்லாதவர்களிடம் , எப்படிப் பேச ஆரம்பிப்பது என்று தெரிந்திருக்க வேண்டும் இல்லையென்றால் மற்றவர்களோடு தொடர்பு கொள்ளுதல் பெரிய தடையாகவே போய் விடுகின்றது...
.வெற்றி பெற்றவர்கள் எல்லோருக்குமே பொதுவான திறமை ஒன்று உண்டு ..அது தான் வார்த்தைப் பிரயோகம் , நாம் வகிக்கும் பதவிகள், சம்பாதனை இவற்றிற்கும் வார்த்தை திறமைக்கு நெருக்கமான தொடர்பு உண்டு..
பயனில்லாத சொற்களை சொல்லக் கூடாது. “சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயன்இலாச் சொல்” என்கிறார் வள்ளுவர். பயன் இல்லாத சொற்களால் பிறரின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். இகழ்ச்சிக்கு உள்ளாகக்கூடும்
பேச வேண்டிய விஷயத்தை சுறுசுறுப்பாய் ஆவல் உண்டாக்குபவையாக அமைய வேண்டும்.. நாம் யாருடன் உறவாடுகின்றோமோ அவர்களைப் பற்றி அவர்களாகவே பேச வைக்க வேண்டும். இதுவே அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கின்றீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தும். இதுவே இருவருக்கும் இடையேயுள்ள பனிப்பாறை உடைய காரணமாகும்.
அவர்களுக்கு மிகவும் தெரிந்த விஷயங்களைக் கொண்டே பேச்சை ஆரம்பித்தால் போதும். நாம் எவ்வளவு அறிவுபூர்வமாக பேசுகின்றோம் என்பதில் இல்லை. மாறாக மற்றவர்களை மனம் திறந்து பேச வைப்பதில் தான் நம் புத்திசாலித்தனம் உள்ளது. மற்றவர்களை நாம் பேசத் தூண்டி அதனால் அவர்கள் பேசும் பொழுது நம் கருத்தையும் நம்மையும் ஏற்றுக் கொள்வதற்கு மற்றவரைப் பேசச் செய்தாலே. அந்த சூழ்நிலைக்கு அவர் வந்தாலே போதும்... நாம் வெற்றி பெற்றது போல் தான்..
உரையாடலை நம் பக்கமாய் வைத்துக் கொள்வதை விட அவர்கள் பக்கம் திருப்பும் போது அவர்களது மதிப்பீட்டில் பெரிதும் உயர்வோம்.
ஊக்கத்தோடு கூடிய ஆர்வம் தீயென பற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது. ஆர்வமின்றி தொய்வாய் செய்யும் செயலும் நமக்கு நம்பிக்கை ஏற்படுத்தாத வரையில் நாம் மற்றவருக்கு நம்பிக்கை ஏற்படுத்தி விட முடியாது..உன்னதமான மகிழ்ச்சி ததும்பும் உரையாடலை உபயோகித்தல் நலம்....கேலி செய்தல் , குதர்க்கமான பேச்சுக்களை தவிர்த்தல் நலம்
ஒரு பொருளை விற்பனை செய்ய நாம் அறிவாளியாகவோ பரிபூரணமானவராகவோ இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. மற்றவர்களுக்கு முன்பாக பேசுவதன் நோக்கம் இதுவே: மதிப்புமிக்க ஒன்றை உங்கள் கூட்டத்தாருக்குக் கொடுப்பது” என்கிறார் மனச்சோர்வுக்கு சிகிச்சை அளிக்கும் நிபுணரும் தேர்ச்சி பெற்ற பேச்சாளருமான டாக்டர் மார்டின் சி. ஆர்மன். வேறு வார்த்தைகளில் சொன்னால், கவனம் முழுவதும் சொல்லும் செய்தியிடம் இருக்க வேண்டும், நம்மிடமோ நம் கவலைகளிடமோ இருக்கக் கூடாது. நம் பேச்சு எந்தளவுக்கு உரையாடல் பாணியில் இயல்பாக இருக்கிறதோ அந்தளவுக்கு பதறாமல் இயல்பாக இருப்பீர்கள்
நம் பேச்சு சொந்த வார்த்தையில் இருக்க வேண்டும்... பேசப் போகும் விஷயம் மிகவும் பயனுள்ளது என்பதை நாம் முழுமையாக நம்ப வேண்டும் . நம் பேச்சு முக்கியமான ஒன்று என நாம் நினைத்தால் பார்வையாளர்களும் அப்படியே நினைப்பார்கள்.”
பிறரோடு நம்மை இணக்கமாக வைத்திருப்பது வார்த்தைகளே. வார்த்தைகள் பூப்போன்றவை. தொடுக்கும் விதத்தில் தொடுத்தால்தான் மாலையாகும். நமக்கு மதிப்புக் கிடைக்கும். வார்த்தைகளைக் கட்டுப்படுத்தி விட்டால் வாழ்வில் வெற்றிகரமான இணக்கம் நிலவும்.
எப்படிப் பேச வேண்டும் என்று சொல்லும் போது வள்ளுவர் 'இனிய உளவாக இன்னாத கூறல் கனி இருப்பக் காய் கவர்ந்தற்று' என்கிறார்.
இத்துறையில் பல்வேறு விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். யாராவது நம் குறைகளைச் சுட்டிக் காட்டினால், 'அடடா, நல்லவேளை நீங்கள் சொன்னீர்கள், இதுவரை நான் கவனிக்கவே இல்லை, உங்களுக்கு மிக்க நன்றி' என்று சொன்னால் சுட்டிக் காட்டியவரே 'அதனாலென்ன, பரவாயில்லை' என்று நமக்கே ஆறுதல் சொல்வார். இதுதான் வார்த்தைகளின் வலிமை..
விமர்சனங்கள் நம்மை வளப்படுத்தும் அதேவேளை ஏளனங்கள் தன்மான உணர்வைத் தூண்டி விடுகின்றன. தன்னைத்தானே செதுக்கிக்கொள்ள தோல்வி எனும் வலி தரும் உளி அவசியமாகின்றது
அழகான வலிமையான சொற்களை அளவாக கையாளுவோம் வெற்றி நம் கையில் . இதற்கு முதலில் நம் மேல் நம்பிக்கை வேண்டும் அந்த நம்பிக்கை என்பது தும்பிக்கை போல் வலுவாக இருக்க வேண்டும். நான் யாருக்கும் சளைத்தவனல்ல, அடுத்தவர் செய்யக்கூடியதை உருவாக்க கூடியதை நாமும் செய்ய முடியும் உருவாக்க முடியும், அதை விட புதுமையாக செயல்படுத்திக் காட்ட முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். வெற்றிகள் நம்மை உலகுக்குத்தெரியப்படுத்தும் அதேவேளை இவ்வுலகத்தைப்பற்றி தோல்வி நமக்கு அறியச்செய்கிறது பல தோல்விகளைச் சந்தித்தவர்களே அதிசயிக்கத்தக்க சாதனைகளையும் நிகழ்த்தி இருக்கிறார்கள்...
முட்டாள் என்றும், கல்விகற்பதற்கு அருகதை இல்லாதவன் என்று பாடசாலையில் திட்டி வீட்டிற்கு அனுப்ப்பட்ட ஒருவனால் தான் இன்றைய உலகு ஒளி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றது... ..
நாளை நம்மால் இந்த உலகம் ஒளிபெறும் ..
அன்புடன் ரோஸ்லின்
aaroselinegmail.com
Ph: 9842073219
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement