Advertisement

ஆறு, ஏரிகளில் கழிவுநீரை கலக்கும் பேரூராட்சி நிர்வாகம்:ஊத்துக்கோட்டையில் தான் இந்த கூத்து

ஊத்துக்கோட்டை;அணைக்கட்டில் இருந்து, 15 ஏரிகளுக்குச் செல்லும் நீரில், ஊத்துக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம், கழிவுநீரை கலப்பதால், ஆறு, ஏரி நீர் மாசுபடுவதுடன், நிலத்தடி நீர் கெடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஆந்திர மாநிலம், சுருட்டப்பள்ளி கிராமத்தில், ஆரணி ஆற்றின் நடுவே அணைக்கட்டு உள்ளது. 1954ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணைக்கட்டில் இருந்து, தமிழக பகுதிகளில், ஊத்துக்கோட்டை, பேரண்டூர், லட்சிவாக்கம், பாலவாக்கம், முக்கரம்பாக்கம் வரை, விவசாயத் தேவைக்கு, 15 ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது.

இதற்காக ஆந்திர மாநிலத்தில், 1.2 கி.மீ., துாரத்திற்கு, தமிழகத்தில், 13.1 கி.மீ., துாரத்திலும், நீர்வரத்து கால்வாய்கள் அமைக்கப்பட்டன. சமீபத்தில் பெய்த மழையால் அணைக்கட்டில் உள்ள மதகு திறக்கப்பட்டு, ஊத்துக்கோட்டை ஏரிக்கு தண்ணீர் செல்கிறது.
இந்நிலையில், ஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில், ஒவ்வொரு சாலையிலும் அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாயில் இருந்து, ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் கழிவுநீர் கலக்கிறது. பல இடங்களில் இதுபோல் இருப்பதால், ஏரி நீர் மாசுபட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். மேலும், இந்த கால்வாயில், தண்ணீர் கலப்பதால், நிலத்தடி நீரும் கெட்டு, குடிநீருக்கு அவதிப்படும் நிலை தோன்றும். தண்ணீர் செல்லும், 15 ஏரிகளின் மொத்த கொள்ளளவு, இரண்டு டி.எம்.சி., இதில் சேகரிக்கப்படும் நீர் முழுவதும், பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
இந்த பேரூராட்சியில், ஆரணி ஆற்றை ஒட்டி அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படாமல் உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஏரி நீரில், கழிவுநீர் கலக்காத வகையில் தடுக்க வேண்டும் என, விவசாயிகள், பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீர் மாசடைவது குறித்து, விவசாயிகள் சிலர் கூறுவதாவது:நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, குடிநீர், விவசாய தேவைக்கு தண்ணீர் எப்படி சேமிப்பது என, மழைநீர் சேகரிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.இந்நிலையில், அரசு துறையான பேரூராட்சி நிர்வாகமே ஏரி மற்றும் ஆறுகளில் கழிவுநீரை கலப்பது வேதனை அளிக்கிறது. இதனால் குடிநீர், விவசாயம் கெடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட
ஆட்சியர் நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஏரிக்கு செல்லும் நீர்வரத்துக் கால்வாய் மற்றும் ஆரணி ஆற்றில் பேரூராட்சி நிர்வாகம், வீடு, கடைகளில் இருந்து செல்லும் கழிவுநீரை கலக்கிறது. இதனால், 15 ஏரிகளுக்கு செல்லும் நீர் மற்றும் ஆரணி ஆறு மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே, மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊத்துக்கோட்டை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணி துறை அதிகாரி

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • எல்.கே.மதி - Lalgudy,இந்தியா

    அரசு துறையான பேரூராட்சி நிர்வாகமே ஏரி மற்றும் ஆறுகளில் கழிவுநீரை கலப்பது வேதனை அளிக்கிறது. இதனால் குடிநீர், விவசாயம் கெடும் அபாயம் ஏற்பட்டுள்ளது இதுதான் அம்மாவின் பார்புகழும், நிர்வாக சிறப்பு.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement