Advertisement

என் பார்வை - நல்ல சிந்தனை வளர்ப்போம்

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத்தான் இருந்தானே
தானே தனக்குப் பகைவனும், நண்பனும் என்பதை அறிந்தும், மக்கள் மனத்தெளிவு இன்றி அல்லல்படுகின்றனர் என்கிறது, திருமூலரின் திருமந்திரம்.

மனதில் நல்ல மற்றும் தீய எண்ணங்கள் இரண்டுமே உருவாகும். பண்படுத்திய நிலத்தில் நல்ல விதைகளை விதைத்தால் தேர்ந்த பயிர் விளையும். நம் மனத்திலும் நல்ல எண்ணங்களை ஏற்படுத்தினால் நல்ல விளைவுகளையும், எதிர்காலத்தையும் உருவாக்கி கொள்ளலாம். முதலில் கருவுற்றிருக்கும் தாய்க்கு மனநலத்தை தர வேண்டும். அவர்களுக்கு இயற்கையுடன் ஒன்றிய நல்ல படங்களை காட்டுவது, ஓசை தரும் வளையல்களை அணிந்து கொள்ளச் செய்வது, நீதிக்கதைகளை கேட்கச் செய்வது, அனைத்தும் காரணம் கருதியே என முன்னோர் தெரிவித்துள்ளனர். வளையல்கள் அணிவிப்பது தாயின் வயிற்றில் இருக்கும் கரு நல்ல முறையில் ஒலியை அறிந்து கொள்ள பயன்படும் என்று அன்றே விஞ்ஞான ரீதியாக தெளிவுபடுத்தி இருக்கின்றனர். கருவில் வளரும் குழந்தைகளுக்கு உற்சாகத்தையும், ஊக்கத்தையும் வெளிப்புற செயல்பாடுகளால் வரவழைக்க முடியும் என மனநல நிபுணர்கள் கூறுகின்றனர்.

மனம் போல வாழ்வு : டாக்டர் பென் பீல்டு ஆழ்மனதின் செயல்பாடுகளை விளக்கமாக கூறுகிறார். தாயாரின் ஆழ்மனதில் ஏற்பட்ட பயம், கோபம், தோல்வி இவை அனைத்தும் பிறக்கும் குழந்தைகளை பாதிக்கும். மனிதனின் குழந்தை பருவத்தில் இருந்து முதுமை வரை வாழ்க்கையின் அனைத்து செயல்பாடுகளுக்கும் மனமே காரணியாக உள்ளது. அதனால் தான் மனம் போல் வாழ்வு என முன்னோர் கூறுகின்றனர். மனதில் மூன்று நிலைகள் உள்ளன. மூளையின் இடது பக்கத்தில் இருந்து முதல் நிலை உருவாகிறது. அதில் தான் மனிதனின் சிந்திக்கும் திறன் அனைத்தும் நடக்கிறது. இரண்டாம் நிலை மூளையின் வலது பக்கத்தில் இருந்து தோன்றுகிறது. அதில் தான் கலை, கற்பனை சக்தி உருவாகிறது. மூன்றாவது நிலை பிரபஞ்ச நிலை, மூன்றாவது கண்ணுக்கு (பினியல் கிளாண்ட்) இறந்த காலம், எதிர்காலம் அறியும் தன்மை உள்ளது. பிரபஞ்ச நிலையுடன் ஞானிகள் தொடர்பு கொள்ளலாம் என கூறப்படுகிறது.

முதல் இரண்டு நிலைக்கும் பெற்றோரும், மற்றவரும் வழிகாட்டுதலாக இருந்து, குழந்தைகளின் மனதை செம்மையுறச் செய்யலாம். குழந்தை மனதில் ஏற்படும் ஒவ்வொரு எண்ணத்திற்கும் செயலுக்கும் பின்னால் பெற்றோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

மாமனிதர்களை உருவாக்கலாம் : தாமஸ் ஆல்வா எடிசன் சிறு குழந்தையாக இருக்கும் போது அவர் படித்த பள்ளியில் இருந்து அவரது தாயாருக்கு ஒரு கடிதம் கொடுத்தனுப்பினர். அதை படித்தவுடன் அவருக்கு கண்ணீர் பெருகியது. எடிசன், தன் தாயார் அழுததும் காரணம் கேட்டார். உடனே தாயார், 'நீ மிகவும் நன்றாக படிப்பதால், போதிய வசதிகள் அப்பள்ளியில் இல்லாததால், உன்னை வேறு பள்ளியில் சேர்க்க சொல்லியிருக்கின்றனர்,'' என்றார். பல ஆண்டுகளுக்கு பிறகு பல அரிய கண்டுபிடிப்புகளை உலகுக்கு தந்த எடிசன் தாயாரின் அறையை பார்வையிட்டார். அப்போது அங்கே ஒரு கசங்கிய நிலையில் காகிதம் இருந்தது. அது எடிசன் சிறுவனாக இருந்த போது பள்ளியிலிருந்து கொடுக்கப்பட்ட கடிதம். அக்கடிதத்தில் எடிசன் மனநலக்குறைபாடு உள்ளவராக இருப்பதால் வேறு பள்ளியில் சேர்க்கும்படி பரிந்துரைக்கப்பட்டிருந்தது. எடிசனின் பிஞ்சுமனதை காயப்படுத்தாமல் அத்தாயார் செயலாற்றினார். அதை உணர்ந்து எடிசனின் கண்களில் கண்ணீர் திரண்டது. குழந்தையின் மனதை அரவணைக்கும் தாயால், உயர்ந்த மாமனிதர்களை உருவாக்க முடியும்.

மனம் எனும் சொர்க்கவாசல் : தகுந்த நேரத்தில் தேர்ந்த வழிகாட்டுதல் இல்லையெனில் குழந்தைகள் பாதுகாப்பின்மையால் தாழ்வு எண்ணத்துடன் எதையும் புறக்கணிக்கும் குணத்துடன் வளர்வர். குழந்தைகளின் மனம் ஓர் அற்புதமான சொர்க்கவாசல். அதில் நல்ல எண்ணங்களையும், உயர்ந்த குறிக்கோள்களையும் உள்ளே விடுவது பெற்றோர்
குறிப்பாக தாய்மார்களை சார்ந்தே உள்ளது. பிரெஞ்சு மனநல மருத்துவர், மனம் நன்றாக உள்ளது; உடல் நன்றாக உள்ளது; நம்மை சார்ந்தவர்கள் நன்றாக உள்ளார்கள் என்று கூறுவதன் மூலம், நம்மை நாமே மனதாலும், உடலாலும் குணப்படுத்திக் கொண்டு மற்றவர்களையும் குணப்படுத்த முடியும்.

எண்ணமே குணமாக்கும் : சில நோயாளிகள் மருத்துவரிடம் சென்று தனக்கு நோய் இருப்பதாகவும், அதனால் மிகவும் துன்புறுவதாகவும் கூறுவர். மருத்துவர் சோதித்து நோயில்லை என கூறினால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால் வைட்டமின் மாத்திரைகளை கொடுத்து அனுப்புவர். திரும்பி வரும் நோயாளிகள் அவர்களுக்கு முற்றிலும் குணம் கிடைத்து விட்டதாக கூறுவார்கள். நலமாகி விடும் என்ற எண்ணமே குணமாக்கி விடும். இப்போதுள்ள காலகட்டத்தில் குழந்தைகளின் மனதில் பெற்றோர் என்றும் தனக்கு அரணாக இருப்பர் என பதிய வைக்க வேண்டும்.கட்டடக்கலை, தோட்டக்கலை போன்றதே மனவளக் கலையும். மனவளக்கலை உடலுடனும், உயிருடனும் இணைந்து நிற்கும் கலையாகும். மனம் நல்ல சிந்தனைக்குள் ஆட்படுத்தப்படுவதே மனவளக் கலையாகும். ஒவ்வாத உணவுக்கு உடல் எதிர்ப்பை காட்டுவது போல மனதிற்கு ஒவ்வாத செயல்களை காணும் பொழுதோ, செய்யும் பொழுதோ உடலின் நரம்பு மண்டலம் எதிர்ப்பை காட்டி கோபமாக, எரிச்சலாக, நரம்புத்தளர்ச்சியாக,
தூக்கமின்மையாக வெளிப்படுத்தும்.

இயற்கையுடன் இயைந்த வாழ்வு : தாய்மார்கள், குழந்தைகளுடன் கிடைக்கும் நேரத்தை பயன்பாடுள்ளது ஆக மாற்றி கொள்ள வேண்டும். குழந்தைகளின் மனதை நல்ல சிந்தனைக்குள் ஆட்படுத்த, தொலைக்காட்சி பெட்டியை தொல்லைக்காட்சியாக நினைத்து தொலைவில் வைத்து விட்டால், உண்மையான இன்பம் வரும். இயற்கையுடன் இயைந்த வாழ்க்கைக்கு குழந்தைகளை கொண்டு செல்ல வேண்டும். தெளிவான வானத்தில் தோன்றும் நிலாவையும், நட்சத்திரங்களையும், வானவில்லையும், கொட்டும் மழையையும், வீசும் தென்றலையும் ரசிக்க வைக்க வேண்டும். இயற்கை சூழலில் வளரும் குழந்தைகள் மனநலத்துடன் வளர்வர் என மனநல
வல்லுனர்கள் கூறுகின்றனர். மனம் என்பது மென்மையானது. அதை சுகமாக வைத்து கொள்வது நம் கைகளில் தான் உள்ளது.
'தீதும் நன்றும் பிறர் தர வாரா' அது நம் மனதில் தான் உள்ளது.

-முனைவர் ச.சுடர்க்கொடி,
காரைக்குடி.
94433 63865.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

    ஞாபகம் வந்ததே, ஞபகம் வந்ததே. இளமையின் நினைவு ஞாபகம் வந்ததே.

  • pradeban - goodge street ,யுனைடெட் கிங்டம்

    அருமை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement