Advertisement

கிரைம் பீட் - செங்கல்பட்டு

ரயில் மோதி

முதியவர் பலி
செங்கல்பட்டில், ரயில் மோதி முதியவர் இறந்தார்.
சென்னை அடுத்த, காரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள், 69, தனியார் நிறுவன ஒய்வு பெற்ற ஊழியர். நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு, பரனுார் ரயில் தண்ட வாளத்தை கடந்தபோது, செங்கல்பட்டிலிருந்து சென்னை சென்ற மின்சார ரயில் மோதியது.
இதில், படுகாயமடைந்த கலியபெருமாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். செங்கல்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இளம்பெண்
திடீர் மாயம்
ஈச்சங்கரணையில், தனியார் நிறுவன தொழிற்சாலைக்கு சென்ற மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் செய்தார்.
செங்கல்பட்டு அடுத்த, ஈச்சங்கரணையைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகள் யுவஸ்ரீ, 24, 'மகேந்திரா சிட்டி'யில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 6ம் தேதி, வீட்டிலிருந்து தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
அதன் பிறகு, வீட்டிற்கு வரவில்லை; உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது தந்தை ஏழுமலை அளித்த புகாரை அடுத்து, தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அம்பையை சேர்ந்தவர்
விபத்தில் மரணம்
திருநெல்வேலி அடுத்த, அம்பாசமுத்திரம் மன்னார்கோவில் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவர் மகன் சிவக்குமார், 37, கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, செங்கல்பட்டு புலிப்பாக்கம் சாலையில், நடந்துசென்று கொண்டிருந்தார்.
அப்போது, செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் சென்றுகொண்டிருந்த இரு சக்கர வாகனம், சிவக்குமார் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை, அருகிலிருந்தவர்கள் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவர் மனைவி கலாவதி அளித்த புகாரையடுத்து தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கார் - வேன் மோதல்
வாலிபர் பலி
கார் - வேன் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், தனியார் நிறுவன உரிமையாளர் இறந்தார்.
செங்கல்பட்டு கோகுலபுரம் பாரதியார் தெருவைச் சேர்ந்த பழனிவேல் என்பவர் மகன் விஜயகுமார், 38; தனியார் நிறுவன உரிமையாளர். நேற்று முன்தினம் இரவு, சென்னையிலிருந்து காரில் செங்கல்பட்டு சென்றுகொண்டிருந்தார்.
இரவு 10:00 மணிக்கு, செங்கல் பட்டு புலிப்பாக்கம் சாலையில் சென்ற போது, எதிரே, செங்கல்பட்டிலிருந்து சென்னை சென்று கொண்டிருந்த வேன், கார் மீது மோதியது. இதில், விஜயகுமார் படுகாயமடைந்தார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பெண் மீது மோதி
கவிழ்ந்த அரசு பஸ்
செங்கல்பட்டில், அரசு பேருந்து மோதியதில் பெண் இறந்தார்.
கும்பகோணம் வடக்கு தெருவைச் சேர்ந்த பெரிய ஆண்டவர் என்பவர் மனைவி பழனிசெல்வி, 42, நேற்று காலை, 5:30 மணிக்கு, செங்கல்பட்டு பச்சையம்மன் கோவில் அருகில், சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திருச்சியிலிருந்து சென்னை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பழனிசெல்வி மீது மோதியது. அதன் பின், கட்டுப்பட்டை இழந்த பேருந்து, புறவழிச்சாலையில் கவிழ்ந்தது. இதில், படுகாயமடைந்த பழனிசெல்வி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அரசு பேருந்து ஓட்டுனர் மதுரை கல்லுப்பட்டியைச் சேர்ந்த இளங்கோவன், 52; முசிறியைச் சேர்ந்த நடத்துனர் சுரேஷ், 39; மற்றும் பேருந்தில் இருந்த, ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement