Advertisement

மக்களின் 'அவார்டு' - நெகிழ்கிறார் நதியா

தமிழ் சினிமாவின், 80 களை கொஞ்சம் புரட்டும் போது, நினைவுக்கு வரும் கதாநாயகிகளில் நதியாவுக்கு என்றுமே தனியிடம் தான். ஒரு காலத்தில் நதியா ஹேர் ஸ்டைல், நதியா தோடு, நதியா வளையல்களுக்கு என்றே, தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. தமிழ் சினிமாவின், உச்ச நட்சத்திர கதாநாயகியாக இருந்தபோதே, திருமணம் செய்து, வெளிநாட்டில் செட்டிலான இவர், 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' படத்தின் வாயிலாக, இரண்டாவது கட்டத்தை துவக்கினார்.
தற்போது, மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட படங்களில் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கும் இவர், நமக்கு அளித்த பேட்டி:
* தமிழில் அதிக படங்கள் நடிப்பதில்லையே... ஏன்?
பணம் சம்பாதிப்பது என் நோக்கம் இல்லை. நல்ல படங்கள் பண்ணனும். தமிழில் புதுப்புது இளம் இயக்குனர்கள் நிறைய பேர் வராங்க. ஸ்கிரிப்ட் நிறைய கேட்கிறேன். பிடிச்சிருந்தால் மட்டுமே நடிப்பேன்.
* தேசிய விருது வாங்கியதில்லை என்ற வருத்தம் உண்டா?
இத்தனை வருஷங்களுக்கு பிறகும் நதியாவை மக்கள் மறக்கவில்லை. அன்போடு வரவேற்கின்றனர். விரும்பி என் படங்களை பார்க்கின்றனர். இதை விட பெரிய, 'அவார்டு' வேணுமா என்ன?
* எந்த மாதிரியான கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறீர்கள்? உங்களுக்கான ட்ரீம் ரோல் என்ன?
அப்படி எதுவுமே இல்லை. 'பூவே பூச்சூடவா' நான் டிரீம் பண்ணாமல் கிடைத்த ரோல். என்னை பொறுத்தவரை, மக்கள் என்னை திரையில் பார்க்கும் போது, இது நதியாவா? என ஆச்சரியப்படணும். மக்களையும், என்னையும், 'சர்ப்ரைஸ்' செய்ய வைக்கும் எந்த ரோலும் எனக்கு டிரீம் ரோல்தான்.
* தமிழ் சினிமாவில் இப்போதுள்ள நடிகைகளில், யாருக்கு நல்ல எதிர்காலம் உண்டு?
இன்றைய சினிமா உலகில் போட்டிகள் அதிகம். பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் மிகக்குறைவு. ஓரிரு படங்கள் வந்தாலும், ஹீரோயிசம் சார்ந்த படங்களே அதிகம். சவாலான ரோலில் நடிக்கும்போது தான் நடிகைகளின் திறமை தெரியவரும். இந்த சூழலில் சிறந்த நடிகைகளை கணிப்பது சிரமம்.
* சின்னத்திரையில், அதிகமாக உங்களை பார்க்க முடிவதில்லையே?
இடையில், 'டிவி' நிகழ்ச்சிகள் நிறைய பண்ணிட்டு இருந்தேன். ஒரு கட்டத்தில் சலித்துப்போய் விட்டது. ஒரே மாதிரியான கதைக்களத்தில் நடிக்க எனக்கும் விருப்பமில்லை.
* எப்படி இன்னும் இளமையாகவே இருக்கீங்க?
அளவான சாப்பாடு, உடற்பயிற்சி, மனசை எப்பவும், 'ரிலாக்ஸ்' ஆக வெச்சுகிட்டா எல்லாருமே இளமையாக இருக்கலாம். முக்கியமாக, உடலில் எந்த பிரச்னை என்றாலும் இயற்கை மருத்துவ முறையிலே தீர்வு காண முற்படுவேன். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement