Advertisement

இளையராஜா என் இறைவன் - இயக்குனர் மிஷ்கின்

கனவுகளுடன் சுற்றும் திரையுலகில் இவர், தனி உலகமாய் சுற்றி வருகிறார். கற்பனைகளோடு கருத்துக்கள் உறவாடியதில் உருவான கதைக் கருவை சுமந்தே வாழ்கிறார். தன் இதயத்தில் இருக்கும் திரைக் கருவறையில் தவழும் சினிமாக் குழந்தைக்கு சிந்தனை பால் ஊட்டியே வளர்க்கிறார்...
இந்த குழந்தை சில நேரங்களில் சுகப்பிரசவமாகிறது, பல நேரங்களில் ரணப் பிரசவமாகிறது... வலிகளை தாங்கி தன் வழியில் தனித்துவமாய் பயணிக்கும் இயக்குனர் மிஷ்கின், தன் திரைக்கதை புத்தக வெளியீட்டு விழாவிற்காக மதுரை வந்த போது 'தினமலர்' வாசகர்களுக்காக மனம் திறந்த பளிச் நிமிடங்கள்...
* சீரியஸ் படங்களாகவே எடுக்குறீங்களே...
என் படங்களில் குத்துப் பாடல்கள் எல்லாம் இருக்கிறதே. காட்சிகள் வித்தியாசமாக இருப்பதால் சீரியஸ் படமாக தெரிகிறதே தவிர, ரசிகர்கள் விரும்பும் வகையில் தான் படம் எடுக்கிறேன்.
* இயக்கம் - நடிப்பு ?
இதுவரை 72 தொழில்கள் செய்துவிட்டேன், சினிமாவில் இன்னும் 20 வேலைகளை கொடுத்தாலும் செய்வேன். இயக்கி கொண்டே நடிப்பதில் எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை.
* திடீரென எழுத்தாளராக...
நான் இயக்கிய 'நந்தலாலா', 'யுத்தம் செய்', 'அஞ்சாதே', 'பிசாசு' படங்களின் திரைக்கதையைதான் புத்தகமாக எழுதியுள்ளேன். 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தின் திரைக்கதையுடன் அந்த படத்தின் திரைஆக்கத்தையும் புத்தகமாக எழுதியிருக்கிறேன். இந்த புத்தகத்தை படித்தால் ஒரு சினிமா எப்படி எடுக்கப்படுகிறது என்பது சாமானியர்களுக்கும் புரியும். திரைத்துறைக்கு வரத் துடிக்கும் இளைஞர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
* உங்கள் எழுத்துப் பணி தொடருமா ?
நான் இயக்கும் படங்களின் திரைக்கதையை புத்தகமாக எழுத வேண்டும் என, நினைத்திருக்கிறேன். மொழிபெயர்ப்பு புத்தகம் ஒன்றையும் எழுத உள்ளேன்.
* இளையராஜா...
நான் பிறந்ததே இவருடன் சினிமாவில் வேலை செய்ய தான். என் வாழ்வில் சிறந்த நாட்கள் எது என்று கேட்டால் இளையராஜாவுடன் கழித்த நாட்கள் தான் என்று சொல்வேன். யாருக்கும் பயப்படாத நான், என் 'இறைவன்' இளையராஜாவுக்கு மட்டுமே பயப்படுவேன். அவருடன் வேலை செய்ய வேண்டும் என்பதற்காகவே ஒரு படம் செய்கிறேன்.
* இளையராஜா இசையில் வந்த 'ஓநாயும் ஆட்டுக் குட்டியும்' படத்தில் பாடல்கள் இல்லையே, அடுத்த படத்திலாவது இருக்குமா?
இளையராஜா இசை அமைக்கும் பாடல்களில் மட்டும் இசையில்லை; பின்னணி இசையிலும் சங்கீதம் இருக்கிறது. அதனால் தான் இந்தப் படத்தின் டைட்டில் கார்டில் இவர் பெயருக்கு முன், 'முன்னணி இசை கோர்ப்பு' என, குறிப்பிட்டிருப்பேன். அவருக்கான படத்தில் பாடல்கள் இருக்கலாம்...
* உங்கள் பட ஹீரோக்களின் அசைவில் மிஷ்கின் தெரிகிறாரே...
கதை சொல்லும் போதே நான் அப்படித் தான் சொல்வேன். என் படத்தில் ஹீரோக்களிடம் கண்டிப்பாக என் அசைவுகள் இருக்கும். அப்படி இருந்தால் தான் அது நியாயமான படமாக இருக்கும் என நினைக்கிறேன்.
* கதைக்கு ஹீரோ - ஹீரோவுக்கு கதை, உங்கள் சாய்ஸ்?
இதுவரை என் கதைக்கு தான் ஹீரோவை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறேன். என் இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'துப்பறிவாளன்' படம் ஒரு ஹீரோவுக்கான படமாக இருக்கும்.
* பிசாசு படத்தின் கிளைமாக்ஸ்...
என் படத்தின் கிளைமாக்ஸ் ஒரு பிரசவ வேதனை வலியை போல இருக்க வேண்டும் என நினைப்பேன். 'பிசாசு' படத்தின் 'கிளைமாக்ஸ்' காட்சிக்காக ஒரு கோடி ரூபாய் செலவு செய்தேன், ஹாங்காங் கலைஞர்களை வரவழைத்தேன். படத்தில் வரும் வீடு கூட, ஒரு 'செட்' தான் என பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் கூடத் தெரியாது.
* சினிமா கற்றுக் கொடுத்த பாடம்?
நான் இயக்கிய 'முகமூடி' படம் சரியாக போகவில்லை. நான் அதிகம் கவனம் செலுத்தவில்லை,
என்னுடைய குறை தான். இது போல மீண்டும் ஒரு படத்தை எடுக்கக் கூடாது என கற்றுக் கொண்டேன்.
* காமெடி படம் இயக்குவீர்களா?
என் இயக்கத்தில், இயக்குனர் ராம் நடித்து வெளிவரவிருக்கும் 'சவரக்கத்தி' முழுக்க, முழுக்க காமெடிப் படமாக இருக்கும். அடுத்து ஒரு புதுமுகம் நடிக்கும் 'டெரர்' படம் ஒன்றை இயக்குகிறேன்.
* இளம் இயக்குனர்களுக்கு அறிவுரை...
இந்த காலத்தில் அறிவுரை சொன்னால் கோபம் வந்துவிடும். என் பாட்டி எனக்கு 4 ஆயிரம் கதை சொல்லியிருக்கிறார். நான் 6 ஆயிரம் கதை படித்திருக்கிறேன். வாழ் நாள் முழுவதும் படித்துக் கொண்டே இருப்பேன். நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும். நாம் எடுக்கும் படம், ஒரு மனிதனை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இயக்க வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Vaduvooraan - Chennai ,இந்தியா

    எல்லாம் சரிதான் இந்த 'இளையராஜா என் தெய்வம்' பிட் தான் சற்று நெருடுகிறது. இவர்களுக்கு வேலை ஆகவேண்டும் என்பதற்காக பெரிய தலைகளை இறைவன், ராக தேவன் மேஸ்ட்ரோ என்று தூக்கி வைத்து ஆடுவதனால் அவர்கள் தங்களை அவதார புருஷர்களாகவே கற்பனை செய்து கொள்ள தொடங்கி விடுகிறார்கள். கோடம்பாக்கமோ, கொபாலபுரமோ அல்லது கோட்டையோ இந்த வழிபாட்டு கலாச்சாரத்திற்கு விதிவிலக்கு அல்ல

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement