Advertisement

உலக வங்கிகளுக்கு ஒரு வேண்டுகோள்!

கடன் வாங்குவது என்பது, சாதாரண விஷயமல்ல; அது ஒரு கலை. ஒருவரிடம் கடன் கேட்கப் போகிறோம் என்றால், முதலில் அவருடைய பொருளாதார சூழ்நிலையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது, நாம் எதிர்பார்க்கும் கடன் தொகையை கொடுக்கும் அளவுக்கு அவருக்கு வசதி இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அடுத்தது, அவருடைய குடும்ப சூழ்நிலை.
நாம் கடன் கேட்கப் போகும்போது அவருடைய வீட்டில், நல்ல காரியமோ, கெட்ட காரியமோ நடந்திருக்கக் கூடாது. திருமணம், சீமந்தம், மகப்பேறு, வீடு கட்டுதல், தீர்த்த யாத்திரை செல்லவிருத்தல், பள்ளி, கல்லுாரிகளில் சேர்க்க இருப்பது போன்றவை நல்ல காரியங்கள். குடும்ப உறுப்பினர்களில் யாராவது நோய்வாய்ப்பட்டிருத்தல், யாராவது காணாமல் போயிருப்பது, யாராவது இறந்து போயிருப்பது அல்லது வீட்டுக்குள் பிரச்னை போன்றவை கெட்ட காரியங்கள்.

நாம் கடன் கேட்கப் போகும் நபர், மேலே குறிப்பிட்டுள்ள பட்டியலில் ஏதாவது ஒன்றில் சிக்கியிருந்தாலும் கூட, 'கடன்' என்ற வார்த்தையையே அவரிடம் உச்சரிக்காமல், வெறுமனே, 'நலம்' விசாரித்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் வந்து விடுவது உசிதம்.

அடுத்தது, கடன் வாங்குவதற்கு, 'வாய்ஜாலம்' என்று சொல்லப்படும் பேச்சுத் திறமை மிக மிக அவசியம். இந்த பேச்சுத் திறமையானது, ஒருவேளை அவரிடம் நீங்கள் கேட்கும் தொகை இல்லையென்றாலும், வேறு யாரிடமிருந்தாவது வாங்கித் தர வைக்கும்.நாம் வாங்கும் கடனை, வட்டியுடன் உரிய காலத்தில் திருப்பிக் கொடுக்கும் சக்தி உள்ளதா என்பதையும், கடன் கொடுப்போர் யோசிப்பர். சாதாரண மனிதன் கடன் வாங்குவதென்றால், அதில் இவ்வளவு விஷயங்கள் பொதிந்து கிடக்கின்றன.

ஆனால், உலக வங்கி என்று ஒன்றுள்ளது. உலகில் நாடுகளுக்கும், அந்த நாடுகளில் உள்ள அரசுகளுக்கும் கடன் கொடுக்கும் வங்கி அது.'எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டுமேயல்லாது, வேறொன்றறியேன் பராபரமே' என்ற வள்ளலாரின் பாடல் வரிகளுக்கேற்ப, உலகில் உள்ள மக்கள் அனைவரும் பசி, பட்டினியின்றி வாழ வேண்டும்; அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும்.கல்வி பயிற்றுவிக்க வேண்டும்; போக்குவரத்து வசதி கிடைக்க வேண்டும்; விவசாயம் செழிக்க, பாசன வசதி ஏற்படுத்த வேண்டும்; அணைகள், மேம்பாலங்கள் கட்டப்பட வேண்டும்; புத்தம் புதிய பேருந்துகள் வாங்கப்பட வேண்டும். இதுபோன்ற மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கு மிக மிக அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, உலக வங்கியானது, நாடுகளுக்கும், அரசுகளுக்கும் நீண்ட காலத் தவணையில், மிகக் குறைந்த வட்டியில் கடன்கொடுக்கிறது.நோக்கம் நல்ல நோக்கம் தான்; மறுக்கவே முடியாது.

உதாரணமாக, மேலே சொன்ன அத்தனை விஷயங்களுக்கும், கடன் வழங்க முன்வரும் உலக வங்கியானது, 'நாங்கள் (ஒரு நாடு) பக்கத்து நாட்டோடு போர் தொடுக்கப் போகிறோம். அதற்கு போர் ஆயுதங்களும், விமானங்களும், கப்பல்களும் வாங்க வேண்டும். அதற்குக் கடன் கொடுங்கள்...' என்று விண்ணப்பித்தால், கொடுக்குமா? கொடுக்காது.

ஆனால், நலத் திட்டங்களின் பெயரைச் சொல்லி கடன் வாங்கிவிட்டு, ஒரு அரசு, ஆயுதம் வாங்கினால், உலக வங்கி, 'பெப்பெப்பே' என்று முழிக்க வேண்டியதுதான். தனி மனிதன் கடன் வாங்கினால், அவனது வருமானம், திருப்பிக் கொடுக்கும் சக்தி, காலக்கெடு ஆகியவை கூர்ந்து கவனிக்கப்படும் என்று குறிப்பிட்டோம்.ஆனால், நாடுகளும், அந்த நாடுகளில் உள்ள அரசுகளும் வாங்கும் கடன்களுக்கு, மேலே சொன்ன எதுவும் கடைபிடிக்கப்படுவதாகக் தெரியவில்லை.ஒரு நாட்டில், வாழும் மக்களின் நலன் கருதி வழங்கப்படும் கடன்கள் என்பதால், உலக வங்கி அது குறித்துக் கவலைப் படுவதில்லையோ என்னமோ?

தவிர, கடன்கள் அனைத்தும் நாடுகளை குறிவைத்தே கொடுக்கப்படுவதால், கடன் வாங்கும் ஆட்சியாளர்களுக்கு, (அரசியல்வாதிகளுக்கு) வாங்கும் கடன்களில் கிஞ்சிற்றும் பொறுப்பு இருப்பதில்லை.

உதாரணமாக, தமிழக அரசுக்கு மட்டும் இன்றைய தேதியில், இரண்டு லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறதாம்.நமக்கு, இந்த கடன் விவகாரம் குறித்து, ஆனா, ஆவன்னா தெரியாது. நம்மிடம் யாரும் கேட்கவுமில்லை; நாமும் கடன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லவுமில்லை; நமக்கே தெரியாமல், நம் தலையில் மிளகாய் அரைக்கப்பட்டுஇருக்கிறது.இந்த இரண்டு லட்சம் கோடி ரூபாய் கடனை யார் வாங்கி இருக்கின்றனர். தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளும் தான் மாறி மாறி வாங்கிக் குவித்து வைத்திருக்கின்றன.

அதாவது, ஆட்சி புரிவதற்கு, இவர்களுக்கு நாம் (ஓட்டு போட்டு) கொடுத்த அனுமதியை, இவர்கள் கடன் வாங்குவதற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.சரி. வாங்கிய கடனை, அவர்கள் எந்த காரியத்திற்காக என்று சொல்லி வாங்கினரோ, அந்தக் காரியத்திற்காகப் பயன்படுத்தினரா என்றால், அதுவுமில்லை.வாங்கும் கடனுக்கு, ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுபவர்கள் தான் பொறுப்பு என்றிருந்தால், அவர்கள் கடனே வாங்கியிருக்க மாட்டார்கள். 'ஊரான் வீட்டு நெய்யே! எம் பொண்டாட்டி கையே' என்ற கணக்கில், திருப்பிக் கட்டவா போகிறோம் என்ற துணிச்சலே, அவர்களைக் கடன் வாங்கித் துாண்டியிருக்கிறது.

சரி ஐயா! அந்த கடன் தொகை இரண்டு லட்சம் கோடி ரூபாய் எங்கே போனது?உங்களைச் சுற்றியுள்ள அரசியல்வா (வியா)திகளைப் பாருங்கள். ஓட்டு கேட்டு கும்பிடு போட்டு, அவர்கள் உங்களிடம் வரும்போது, அவர்களின் பொருளாதாரம் எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது? இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இரண்டு லட்சம் கோடிகள் எப்படி மாயமானது என்ற மர்மம் புரியும்.

உலக வங்கி உத்தமர்களே! உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். நீங்கள் இந்தியா முழுவதும் சுற்ற வேண்டாம். தமிழகத்துக்கு ஒரு நடை வாருங்கள்.கடந்த, 20 ஆண்டுகளில், (40 ஆண்டுகள் வேண்டாம்; 20 ஆண்டுகளிலேயே சாயம் வெளுத்துவிடும்) தமிழகத்திற்கு எந்தெந்த திட்டங்களுக்காக, எத்தனை எத்தனை கோடிகள் கடன் வழங்கியிருக்கிறீர்கள்? அந்த திட்டங்களில் ஏதாவது ஒரு திட்டமாவது முடிந்திருக்கிறதா என்று கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள்.
முடியவில்லை என்றால், ஏன் முடியவில்லை என்று, 'வீண் ஆராய்ச்சி'யில் ஈடுபட வேண்டாம். இனிமேலாவது எச்சரிக்கையாக இருங்கள்.தயவு செய்து இதற்கு மேலும் தமிழகத்திற்கு கடன் கொடுத்து, மக்கள் எங்களை கடன்காரன்களாக ஆக்காதீர்கள்.

வாங்கும் கடனுக்கு, ஆளும் ஆட்சியாளர்கள் பொறுப்பேற்றுக் கொள்ள முன் வந்தால், கடன் கொடுங்கள். உலக வங்கியிடம் பணம் இருக்கிறதே என்று, கடன் கொடுத்து, அரசியல்வா(வியா)திகளை வாழவைத்து நாட்டு மக்களை நடுத்தெருவில் நிற்க வைத்து விடாதீர்கள். கொடுத்துத்தான் தீருவோமென்றால், எங்கள் இந்திய நாட்டில், அரசுடைமை
ஆக்கப்பட்ட வங்கிகள், பணக்காரர்களுக்குக் கொடுக்கும் சலுகையைப் போன்று, கடன் கொடுத்த
உடனேயே அத்தொகையை 'வராக்கடன்' என்ற கணக்கில் எழுதி, 'வரவு' வைத்துவிடுங்கள்.

- எஸ்.ராமசுப்ரமணியன் -
எழுத்தாளர், சிந்தனையாளர்
இ - மெயில்: essorresgmail.com
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement