Advertisement

விபத்துகளில் 4 பேர் பலி

வேப்பம்பட்டு: வேப்பம்பட்டில், மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார். வேப்பம்பட்டு அடுத்த, கந்தன்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் வினோத், 25. வெல்டராக பணிபுரிந்து வரும் இவர், நேற்று முன்தினம் மாலை, வீட்டிலிருந்து வேப்பம்பட்டு நோக்கி, இருசக்கர வாகனத்தில் (டி.என்.20.ஏ.பி.2076) சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, வேப்பம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, நிலை தடுமாறிய இருசக்கர வாகனம், சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், படுகாயமடைந்த வினோத், சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து, அவரது சகோதரர் விஜயகுமார் கொடுத்த புகாரையடுத்து, செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி: மாடு குறுக்கே வந்ததால், இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி, விபத்தில் சிக்கி இறந்தார்.கும்மிடிப்பூண்டி அருகே, தம்புரெட்டிபாளையம் கிராமத்தில் வசித்தவர் ஆறுமுகம், 50; காய்கறி பயிரிடும் விவசாயி.
கடந்த, 10ம் தேதி அதிகாலை, காய்கறிகளை இருசக்கர வாகனத்தில் எடுத்து, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டு சென்றார்.
கும்மிடிப்பூண்டி மார்க்கெட் எதிரே, சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்ததால், அவர் விபத்தில் சிக்கி, தலையில் பலத்த காயம் அடைந்தார். சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று இறந்தார், வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர்: திருவள்ளூரில், மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்தவர் முரளி, 32. இவரது மனைவி ரேணுகாதேவி, 28, மற்றும் குழந்தைகளுடன், திருவள்ளூரில் தங்கி கட்டட பணி புரிந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கட்டட பணியை முடித்து விட்டு, மூன்றாவது மாடியில் துாங்கி கொண்டிருந்த அவர், தவறி விழுந்தார். இதில், படுகாயமடைந்த முரளி, சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்து, திருவள்ளூர் டவுன் போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி: ரயில் பாதையோரம் நடந்து சென்ற ஒருவர், கடும் வெயிலால் சுருண்டு விழுந்து இறந்தார்.
கும்மிடிப்பூண்டி அருகே, சாமிரெட்டிகண்டிகை கிராமத்தில், ரயில் பாதையோரம், 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர், நேற்று மதியம் நடந்து சென்றார். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், அந்த நபர் சுருண்டு விழுந்து இறந்தார்.
அவர், வட இந்தியரை போல் தோற்றம் அளிக்கிறார். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார், அவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement