Advertisement

யோகா எனும் யாகம்

இந்தக் காலத்தில் இயந்திரம் கூட ஓய்வு எடுத்துவிடும் போல; ஆனால், பெண்களுக்கு ஒரு நொடி கூட ஓய்வு கிடைப்பது இல்லை. காலையில் காபி தயாரிப்பதில் துவங்கி, இரவில் கொசு விரட்டி வைப்பது வரை ஓயாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள்.
உழைக்கும் பெண்கள் கொஞ்சம் இளைப்பாறி உடல் ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும். அவசர உலகில் பெண்கள் தங்கள் உடல், மனதை நலமாகவும், பலமாகவும் வைத்துக்கொள்ள யோகா என்ற யாகத்தை செய்ய பழக வேண்டும்.
யோகா என்னும் சொல் 'யுஜ்' என்ற சமஸ்கிருத சொல்லிருந்து வந்தது. மனம், உடல், ஆன்மா இம்மூன்றும் ஒன்றிணைவது தான் யோகா பயிற்சி. யோகா கலை என்பது மக்கள் தம் உடலையும், உள்ளத்தையும் அடக்கியாள உதவும் ஓர் அற்புதக் கலை. இக்கலையை முறைப்படி பயின்று தினமும் செய்து வந்தால் நம் உடலின் உள் உறுப்பு மற்றும் வெளி உறுப்புகள் துாய்மையாகவும், வலிமையாகவும் இருக்கும்.

பெண்களுக்கு அவசியம் :நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், நோயற்ற வாழ்வு பெற பெண்கள் பெரிதாக முயற்சிப்பதில்லை என்பது தான் உண்மை. வீட்டிற்கு வெளியே ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல துறைகளில் சாதித்து வருகிறார்கள். வீட்டிற்கு உள்ளே குழந்தை சுமப்பது முதல் உணவு சமைப்பது வரை அனைத்திலும் பெண் தான் நிரம்பியிருக்கிறாள். அதனால் தான் என்னவோ 'மங்கையராய் பிறக்க மாதவம் செய்திட வேண்டும் அம்மா' என்றார்கள் போல. இத்தனை பெருமைமிக்க பெண் தன் மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அவசியம் யோகா செய்ய வேண்டும்.
வரும் முன் தடுக்கலாம் :நோய் வந்தபின் கவனித்து சிகிச்சை பெறுவதை விட, வரும் முன் தடுக்க பெண்கள் எளிமையான யோகா பயிற்சிகளை பழகிக் கொள்ள வேண்டும். சதா சர்வ காலம் குடும்பத்திற்காக உழைக்கும் பெண்கள் தங்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி யோகா செய்வதால் உடலின் உள் உறுப்புகளான பிட்யூட்டரி, தைராய்டு, தைமாஸ், கணையம், நுரையீரல், இதயம் சரியாக செயல்படும். உடலின் வெளிப்புறம் சுத்தமாக நாம் எப்படி குளிக்கிறோமோ, அதை போல உள் உறுப்புகள் புத்துணர்ச்சி பெற யோகா உதவும்.

ஒருவரின் செயல்பாடுகளை கொண்டு, அவர் ஆரோக்கியமானவரா என்பதை எளிதில் கண்டறியலாம். உதாரணமாக மூச்சுவாங்காமல் படிக்கட்டுகளில் ஏறுபவர்கள், சம்மணமிட்டு உணவு உண்பவர்கள், நேரத்திற்கு துாங்குபவர்கள், கோபம் இல்லாமல் பிறரின் குற்றங்களை மன்னிக்க தெரிந்தவர்கள், பதட்டப்படாமல் பொறுமையாக இருப்பவர் தான் ஆரோக்கியமானவர்களாக வலம் வர முடியும். யோகா, தியானம் செய்யும் பழக்கமுள்ளவர்கள் ஆரோக்கியத்தின் இலக்கணம் என்றும் சொன்னால் கூட மிகையாகாது.

மன அழுத்தம் :இன்றைய காலத்தில் பெண்களுக்கு உடல், மனம் சார்ந்த பிரச்னைகள் அதிகரித்து கொண்டே வருகிறது. அப்படி ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் மன அழுத்தம், துாக்கமின்மை, மாதவிடாய் தொல்லை, உடல் எடை அதிகரித்தல், சர்க்கரை நோய், முதுகு வலி என பல்வேறு நோய்களுக்கு பெண்கள் ஆளாகின்றனர். இதுபோல பெண்களுக்கு வரும் நோய்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க யோகாவில் சிறப்பு ஆசனங்கள் உண்டு.

பெண்களின் மனதை ஒருநிலைப்படுத்தி ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. உடலில் ரத்த ஓட்டம் சீராகி, சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கிறது. நாளமில்லா சுரப்பிகள் நன்றாக செயல்பட்டு, நீண்ட ஆயுள், இளமையுடன் வாழ உதவுகிறது. பெண்கள் தன்னை இளமையாக உணர்வதால், மனதில்
தன்னம்பிக்கை பிறக்கிறது. இந்த தன்னம்பிக்கை சில நேரங்களில் தைரியமாகவும் மாறுகிறது. இப்படி நமக்கே தெரியாமல் பல நன்மைகளை யோகா அள்ளித் தருகிறது.

யோகா செய்யும் முறை :சாப்பிடும் முன் காலையில், அல்லது சாப்பிட்டு 4 மணி நேரத்திற்கு பின், மாலையில் யோகா செய்ய வேண்டும். யோகா செய்யும் முன் உடலை தளர்வாக்கி கொள்ள வேண்டும். இதனால் உடல் புத்துணர்ச்சி பெற்று இயல்பாக வளையும் தன்மைக்கு வரும். பின் மூட்டு, தசைகள் ஒருங்கிணைந்து உடலை நினைக்கும் பக்கமெல்லாம் வளைத்திட ஒத்துழைக்கும்.பின் வரும் யோகாசனங்களை பெண்கள் தினமும் செய்து பயனடையலாம்.

பத்மாசனம்: முதலில் விரிப்பின் மேல் அமர்ந்து இரு கால்களையும் நேராக நீட்டி, சுவாசத்தை வெளியிட்டு, வலது முழங்காலை மடித்து குதிகாலை தொட வேண்டும். பின், இடது காலை மடக்கி, வலது கால் தொடையின் அருகில், அடிவயிற்றை தொடும்படி வைக்க வேண்டும். இரண்டு கையிலும் சின் முத்திரை இருப்பது அவசியம். இந்த ஆசனத்தால் அடி வயிற்று பகுதிக்கு ரத்த ஓட்டம் அதிகமாகி நன்றாக பசிக்கும். கை, கால் வாத நோய்களும் நீங்கும்.

யோக முத்ரா: பத்மாசனத்தில் அமர்ந்து வலது கையில் ஆதி முத்திரையுடன், இடது வலது கையை பின்புறம் கொண்டு சென்று ஒன்றோடு ஒன்று இணைத்து மூச்சை மெல்ல வெளியிட்டபடி முன்புறம் குனிந்து தரையை நெற்றியால் தொட வேண்டும். சில வினாடிகள் ஆசன நிலையில் இருந்த பின்பு மூச்சை இழுத்து வெளியிட்டு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். பெண்கள், மகப்பேறு அடைந்த பின் வயிறு பெரிதாவதை தடுக்க இந்த ஆசனம் செய்யலாம்.
பட்சி மோத்தாசனம்: தரையில் விரிப்பை விரித்து அமர்ந்து கால்களை நேராக நீட்ட வேண்டும்.

பின், மூச்சை இழுத்துக் கொண்டே இரண்டு கைகளையும் தலைக்கு மேல் காதுகளை ஒட்டி நீட்டி மூச்சை வெளியிட்டபடி கால் கட்டை விரல்களை, கை விரல்களால் பற்றி முழங்கால்களுக்கு இடையே முகத்தை ஒட்டி வைக்க வேண்டும். 10 முதல் 20 வினாடி ஆசன நிலையில் இருக்க வேண்டும். வயிற்றுப் பகுதி தசைகள் பலம் பெறவும், மாதவிடாயின் போது ஏற்படும் இடுப்பு, வயிறு, தலை வலிகளை இந்த ஆசனம் குறைக்கும்.

திரிகோணாசனம் : கால் பாதங்கள் இரண்டு அடி இடைவெளிவிட்டு வைக்க வேண்டும். கைகள் இரண்டையும் நேராக நீட்டி மூச்சை வெளியிட்டபடி பக்கவாட்டில் குனிந்து, கால் விரல்களின் மேல் கை விரல்களின் நுனிப்பகுதியால் தொட வேண்டும். பார்க்க முக்கோணம் போல் காட்சியளித்தால் நீங்கள் செய்யும் ஆசனம் சரியானது என்று அர்த்தம். பின், மூச்சை பழைய நிலைக்கு மாற்றி இயல்பு நிலைக்கு திரும்பி மறுமுனையில் இதே போல் செய்ய வேண்டும். முதுகு எலும்பு, கழுத்து, அடிவயிற்றின் தசைகள் வலிமை பெறும். இடுப்பையும், அதனை சுற்றியுள்ள தசைகளையும் நன்றாக இயக்க வைக்கிறது.

உத்தான பாதாசனம் : தரையில் படுத்து கொண்டு கைகளை உடலோடு ஒட்டியபடி சேர்த்து வைக்க வேண்டும். கால்கள் இரண்டையும் தரையிலிருந்து 45 டிகிரி துாரம் துாக்கி 10 முதல் 20 வினாடிகள் நிறுத்தி மெதுவாக கீழே இறக்க வேண்டும். இந்த ஆசனம் செய்வதால் அடி வயிறு இறுக்கமாவதோடு, ஜீரண சக்தியும் அதிகமாகும். மகப்பேறுக்கு பின் வயிறு பெரிதாவை குறைக்க இந்த ஆசனத்தையும் பெண்கள் செய்யலாம்.நோய் தீர்க்கும் ஆசனங்கள்: பத்த பத்மாசனம், பவனமுக்தாசனம், சர்வாங்காசனம், ஹலாசனம், சக்கராசனம், வஜ்ராசனம், சலபாசனம், தனுராசனம் செய்தால் சர்க்கரை நோய் குணமாகும். பவனமுத்தாசனம், புஜங்காசனம் முதுகு வலியை குறைக்கும். பட்சி மோத்தாசனம், பாதஹஸ்தாசனம் செய்தால் உடல் எடை சீராகும். நவாசனம், காக்காசனம் செய்தால் மலச்சிக்கல் பிரச்னை வராது. மச்சாசனம் செய்தால் மாதவிடாய் தொல்லைகள் நெருங்காது.எனவே தினமும் யோகா பயிற்சியை வழக்கமாக்கு வோம்!

- எம். வனிதா, யோகா பயிற்சியாளர், மதுரை,
sen2chandrayogagmail.com
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement