Advertisement

கோளாறு எங்கே உள்ளது?

சென்னையில், தொழிலாளர் வைப்பு நிதி பிராந்திய அலுவலக ஆணையர் உட்பட, ஏழு பேர், 14 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது, கையும் லஞ்சப் பணமுமாக, சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அலுவலக பியூனிலிருந்து, உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வா(வியா)திகள் வரை, லஞ்சம் வாங்கும் போது கையும், லஞ்சப் பணமுமாக கைது செய்யப்படுவது நம் நாட்டில் புது விஷயமல்ல. லஞ்சம் வாங்கி கைது செய்யப்படுபவர்களும், அதை அவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை; பொதுமக்களும் அதை சீரியசாகப் பார்ப்பதில்லை. பாலசந்தரின், அரங்கேற்றம் படத்தில், 'ஆம்பிளை என்றாலே எனக்கு மரத்துப் போய்விட்டது' என்றொரு வசனம் வரும். அதுபோல லஞ்சமும், கைதும் சம்பந்தப்பட்டவர்களுக்கும், பொதுமக்களுக்கும் மரத்துப் போய் விட்டது போலும். பொதுமக்களும், தங்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டுமென்றால், சம்பந்தப்பட்டவர்களுக்கு லஞ்சம் கொடுத்து, அதை முடித்துக் கொள்ளும் மனோபாவத்தில் உள்ள போது, அந்த லஞ்சமும், கைதும் அவர்களுக்குப் பெரிய விஷயமாகத் தோன்றாததில் வியப்பில்லை. லஞ்சம் வாங்கி கைது செய்யப் பட்டவர்களை, காவல் துறையினர், நீதி மன்றங்களுக்கு அழைத்து வரும்போது, மிக மிக பாதுகாப்பாக, முகத்தை மூடியவாறு அல்லவா அழைத்து வருகின்றனர். அவ்வாறு கைது செய்யப் பட்டவர்கள் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் ஜாமினில், 'ஜாம் ஜாம்' என்று வெளியே வந்தும் விடுகின்றனர். அதோடு அந்த விஷயம் மறக்கடிக்கப்பட்டு விடுகிறது.

அரசு அலுவலராக இருப்பின், ஒரு இட மாற்றத்தோடு விஷயம் முடித்து வைக்கப்படுகிறது. புதிதாகச் சேர்ந்த இடத்தில், அவர் அவரது லஞ்சம் வாங்கும் பணியை செவ்வனே செய்யத் துவங்குகிறார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மத்திய தொலைதொடர்பு மந்திரியாக இருந்த ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சுக்ராம் வீட்டிலிருந்து, 400 கோடி ரூபாய் அளவுக்கு கைப்பற்றப் பட்டது. சில நாட்களுக்கு பத்திரிகைகளில் பரபரப்பாக செய்திகள் வந்த வண்ணமிருந்தன; அவ்வளவுதான். மருத்துவ கவுன்சில் தலைவர் ஒருவரது வீட்டிலிருந்து, 1,000 கோடி மதிப்புள்ள கரன்சிகளும், தங்க நகைகளும், சொத்து பத்திரங்களும், முதலீட்டுப் பத்திரங்களும் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாயின. அதன் பிறகு என்ன ஆனது? பீஹாரில் பாருங்களேன்... மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, வழக்குத் தொடரப்பட்டு, விசாரிக்கப்பட்டு, சிறை தண்டனையும் வழங்கப்பட்ட லாலுவே, தண்டனையை நிலுவையில் வைத்துவிட்டு, ஜாம் ஜாம் என்று வெளியே சுற்றிக் கொண்டு, மாநில ஆட்சியையும் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறார். நம் நாட்டுச் சட்டங்கள் குற்றவாளிகளுக்குத்தான் பாதுகாப்பாக உள்ளன என்பதற்கு, லாலுவே சரியான உதாரணம்.

உ.பி.,யில் என்ன ஆனது? வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, சி.பி.ஐ., குற்றம் சாட்டியதற்கு, 'அனைத்தும் தொண்டர்கள் கொடுத்தது' என்ற ஒரே வார்த்தையில் குற்றச்சாட்டை குளோஸ் செய்தார் மாயாவதி. தமிழகத்திலும், சில அரசியல்வாதிகள் மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்குகள், போதிய ஆதாரம் இல்லை என்று தள்ளுபடி செய்யப்பட்டன. சட்டங்களில் உள்ள ஓட்டைகளை வைத்து, குற்றம் சாட்டப் படுபவர்கள் மிகச் சுலபமாக, தண்டனைகளிலிருந்து தப்பி வெளியே வந்து விடுகின்றனர். அதனால்தான், தவறு செய்பவர்கள் துணிந்து செய்தனர்; செய்கின்றனர்; இன்னமும் செய்வர். நம் நாட்டுச் சட்டங்கள், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அளவுக்கு, சாதாரண பொதுமக்களை பாதுகாப்பதில்லை என்பதுதான் நிதர்சனம்.நடைமுறையில், லஞ்சம் வாங்கியவர்களையோ, ஊழல் குற்றம் சாட்டப் பட்டவர்களையோ கைது செய்யும் போது, சம்பந்தப்பட்ட தொகையை மட்டும்தான் கோர்ட் நடவடிக்கைகளுக்காக பறிமுதல் செய்கின்றனர். அவரது இதர சொத்துகளையோ, குடும்ப உறுப்பினர்களின் சொத்துகளையோ பறிமுதல் செய்வதில்லை. லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபடுபவர்களுக்கு இது மிகப்பெரிய வரப் பிரசாதம்.

'இங்கே அடித்தால், அங்கே வலிக்கணும்' என்பது மாதிரி, லஞ்சம் மற்றும் ஊழலில் ஒருவர், அவர் அரசு அலுவலரோ, அரசு அதிகாரியோ, அரசியல்வாதியோ, மந்திரி பிரதானியோ யாரோ ஈடுபட்டுள்ளதாக புகார் வந்தால், அந்தப் புகார் உண்மையாக இருக்குமேயானால், அவரை கைது செய்ய வேண்டியதே இல்லை. அவருடைய மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மனைவி, மகன், மகள், மருமகன், மருமகள், தாயார், தந்தை, சகோதர, சகோதரிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர், மாமன் மற்றும் மச்சான்ஸ், பினாமிகள் என்று யாரும் இருந்தால் அனைவரது சொத்துகளையும், வங்கிக் கணக்குகளையும் முடக்கி பறிமுதல் செய்வதோடு, அவர்கள் வசிக்கும் வீடுகளிலிருந்தும் வெளியேற்றி, வீட்டை, 'சீல்' செய்து விட வேண்டும். அவ்வளவுதான். கைது, வழக்கு, ரிமாண்ட், விசாரணை என்ற எந்த நடைமுறையும் தேவையில்லை. குற்றம் சாட்டப்பட்டவர், அரசின் மீது வழக்குத் தொடுத்து, தகுந்த சாட்சியங்களோடு, 'தான் நிரபராதி' என்று நிரூபித்து, பறிமுதல் செய்யப்பட்டுள்ள சொத்துகளை திரும்பப் பெற வேண்டும்.

லஞ்சம் வாங்கி ஊழல் செய்தவர்களுக்கு, ஏன் அரசு செலவில் பிரியாணி வாங்கிக் கொடுத்து, கட்டில் மெத்தை கொடுத்து, மின் விசிறி வேறு கொடுத்து, பராமரிக்க வேண்டும்? குடும்பத்தோடு நிர்கதியாய், நடுத் தெருவில் நிற்க வையுங்கள். லஞ்ச ஊழல் பற்றி கனவிலும் நினைத்துப் பார்க்க மாட்டார்கள். குடும்பமே நடுத் தெருவுக்கு வரும் என்றால், குடும்பத்தாரும் ஊழல் புரிய துணை போக மாட்டார்கள். இப்படியொரு சட்டத் திருத்தததை கற்பனை செய்து பாருங்கள். நாட்டின் தலைமுதல், வால் வரை எங்கும் லஞ்சம் ஊழல் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. இந்த இடத்தில் மனித உரிமை, மண்ணாங்கட்டி என்றெல்லாம் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கக் கூடாது. இந்த சட்டம் மற்றும் அமலாகுமானால், உலக நாடுகளே அதை பாராட்டும்; பின்பற்றும். முடியுமா, விடியுமா? நம் நாட்டை பீடித்திருக்கும் லஞ்சம் மற்றும் ஊழல் விலகுமா?
இ - மெயில்: essorresgmail.com
எஸ். ராமசுப்ரமணியன்
எழுத்தாளர், சிந்தனையாளர்
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Indian - Chennai,இந்தியா

    அருமையாக சொன்னீர்கள்.. இந்த சிந்தனை செயல் வடிவம் பெற வேண்டும்.. நடக்குமா.. தேர்தலில் வாக்குறுதியாக வர வேண்டும்.. வருமா..?

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    இதுதான் உண்மை. //லஞ்சமும், கைதும் சம்பந்தப்பட்டவர்களுக்கும், பொதுமக்களுக்கும் மரத்துப் போய் விட்டது போலும்//

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    இதைவிட சிம்பிள்...... லஞ்சம் கொடுத்தவரும் கைது செய்யப்படவேண்டும்...... அரசு வேலை பெற லஞ்சம் கொடுத்து, ஏமாந்து புகார் கொடுத்தால், கொடுத்தவர் வாங்கியவர் என்று இரண்டுபேரும் கைது செய்யப்படவேண்டும். அதேபோல இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் முகத்தை மறைக்க அனுமதிக்கவே கூடாது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement