Advertisement

மண்ணின் கதை மனசுக்கு பிடிக்கும் -'நம்பிக்கை' இயக்குனர் ராஜ்

மதுரை மண்ணில் நிகழும் மெல்லிய காதலை மையக் கருவாக கொண்டு ஆரவாரம் இல்லாமல் 'அழகாய் பூக்குதே' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் மதுரை மேலமாசிவீதியை சேர்ந்த ராஜ்.
'நிலவே முகம் காட்டு', 'மிட்டா மிராசு', 'கருங்காலி' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் களஞ்சியத்திடம் ஏழு ஆண்டுகள் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவ உதவியுடன் புதிய இயக்குனர் கட்டத்தை எட்டியுள்ள இவர், சொந்த மண்ணில் இருந்தே தனது முதல் படத்தை துவக்கி உள்ளார். இதுதவிர 'சீறிவருவேன்' என்ற திரில் படம் உட்பட சில படங்களை இயக்கி வரும் இவர், மதுரை வந்திருந்த போது நம்மிடம்...
மதுரையில் புகைப்படங்கள் எடுத்து வந்தேன். இதன் மூலம் இயக்குனர் களஞ்சியத்திடம் தொடர்பு கிடைத்து உதவி இயக்குனரானேன். மதுரை மண் சார்ந்த பாலா, சசிகுமார், அமீர் போன்ற இயக்குனர்கள் வரிசையை எட்டி பிடிக்க போராடும் எனது முதல் முயற்சி தான் இந்த
'அழகாய் பூக்குதே' படம்.
இதன் கதைக்கரு மதுரை களம். மதுரை ஆறுமுகம் தயாரித்துள்ளார். கதாநாயகன் பெங்களூரு ராக்கா, நாயகி மார்த்தாண்டம் ஜெர்ஷா. இருவரும் புதுமுகம். முதல் முறையாக எழுதி இப்படத்தை இயக்கியுள்ளேன். இப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது.
முதல் படம் மறக்க முடியாத பல அனுபவங்களை தந்தது. அகமலையில் படப்பிடிப்பு நடக்கும்போது காட்டெருமைகள் கூட்டமாக வந்து யூனிட்டையே நாசமாக்கி விரட்டியது. அப்பகுதி மக்களிடம் தஞ்சமடைந்தோம்.
பட்டாசு வெடித்து அவைகளிடமிருந்து எங்களை காப்பாற்றினர். 'அரசியலோ, சினிமாவோ மதுரை மண் சார்ந்த விஷயமாக இருந்தால் அது 'சக்சஸ்' என்பது நம்பிக்கை. அந்த வகையில்
என்னையும் இம்மண் காப்பாற்றும் என நம்புகிறேன், என்கிறார் இந்த மண்ணின் மைந்தர்.
இவரை 96987 80007ல் வாழ்த்தலாம்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement