Advertisement

மலை வாழை அல்லவோ கல்வி

'குஞ்சி அழகும் கொடுந்தானை கோட்டழகும்மஞ்சள் அழகும் அழகல்ல... கல்வி அழகே அழகு'
என்பது நாலடியார் கூறும் அழகாகும். 'மலை வாழை அல்லவோ கல்வி; அதை வாயார உண்ணுவாய் வா என் புதல்வி' என்பது கல்வி குறித்த, பாவேந்தரின் பாராட்டு; கல்வி இனிமையானது என்கிறார்.

'எண்ணெழுத்து இகழேல்', 'எண்ணும் எழுத்தும் கண்ணெனெத் தகும்' என்பன அவ்வையின் அமுத வாக்கு. 'ஒருவருக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வி. கல்வி தவிர மற்ற பொருட் செல்வங்கள் செல்வங்களே அல்ல' என கல்வியின் சிறப்பை பாராட்டுகிறார் வள்ளுவர்.

'ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவருக்குஎழுமையும் ஏமாப் புடைத்து' என்பது தமிழ்மறை.
ஒருவர் ஒரு பிறவியில் தேடிய கல்வி செல்வம், ஏழு பிறவிகளிலும் அழியாத செல்வமாக விளங்கும். அறியாமை என்னும் இருளை அகற்றி மனித வாழ்வில் ஒளிவிளங்க செய்வதே கல்வியாகும்.

'உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார்' என்பார் வள்ளுவர். அரசனேயாயினும் அவனுக்கு தன் நாட்டில் மட்டுமே சிறப்பு உண்டு. ஆனால் கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாயினும் அறிவுடையவனையே தாயும் விரும்புவாள். 'அறிவுடையவனை அரசனும் மதிப்பான்' என்கிறார் அதிவீரராமபாண்டியர்.

கல்லாதவர்களை விலங்குகளுக்கு சமம் என்பார் திருவள்ளுவர். கல்வியானது அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய உறுதி பொருள்களை தர வல்லது. ஒரு நாட்டின் கலை, பண்பாடு நாகரிகம், அரசியல் அறிவியல், பொறியியல், பொருளியல் முதலியவற்றை வளர்ந்தோங்க செய்வது கல்வியே.

ஆசிரியரின் கடமை :'மாதா, பிதா, குரு தெய்வம்' என்ற வரிசைப்படி பார்த்தால் எல்லாம் வல்ல இறைவனை காட்டும் தகுதி நமக்கு கல்வியை கற்றுத்தரும் ஆசிரியருக்கே உண்டு.
'அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல்அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்பார் பாரதியார். மனிதன் செய்யும் அறங்களில் தலையாயது கல்விக்கொடையே. கல்வி கொடுப்பவர், கொள்பவர் ஆகிய இருவருக்கும் இம்மை, மறுமைப்பயன் ஆகிய இரு பயனையும் நல்கும். 'கேடில் விழுச்செல்வம் கல்வி' என்பார் வள்ளுவர். அழியாத கல்விச் செல்வத்தை வாரி வழங்கும் பணி, ஆசிரியர் பணி என்றும் பெருமைக்கு உரியது.'குரு' என்ற வட சொல்லுக்கு 'அறியாமையாகிய இருளை அழிப்பவன்' என்பது பொருள்.
'ஆசிரியன்' என்பது ஆசு+இரியன் என பிரியும். இதற்கு 'குற்றங்களை நீக்குபவன்' என பொருள். நல்லவனாய் பிறக்கின்ற மனிதன் அவனது சேர்க்கையாலும், பிறவற்றாலும் எண்ணற்ற தீமைகள் வந்து சேர்வதால், தன் நிலையில் இருந்து மாறுபடுகின்றான்.

நல்லொழுக்கம் :'கல்வியை பரப்புகிறவன் தேவனால் போற்றப்படுவான்' என்கிறது விவிலியம். 'கல்வியை பரப்புகிறவன் பாவங்களில் இருந்து விடுதலை பெறுகிறான்' என்பது நபிகள் வாக்கு. மாணவர்கள் நல்லொழுக்கம், கடமை தவறாமை, நேரம் தவறாமை, பிறருக்கு உதவும் மனப்பான்மை, விட்டுக்கொடுக்கும் பழக்கம், விதிகளுக்கு கீழ்படிதல், தொண்டுள்ளம், ஒற்றுமை பண்பு, உண்மை, கடமை உணர்வு, பணிவு, துணிவு, சுறுசுறுப்பு ஆகிய பண்புகளை கற்று தருபவரே ஆசிரியர்.

'கல்வித் தொண்டே கடவுள் தொண்டு' என்ற கூற்றை பொன்னே போல் போற்றி மாணவனுக்கு சிறப்பான கல்வியை வழங்குவதே ஆசிரியரின் கடமை. வயதில்லை

கல்விக்கு வயதில்லை. மேலும் மேலும் படிக்கலாம். போட்டி நிறைந்த உலகத்தில், நம் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். கல்வித்துறையில் தேவை இல்லாதவற்றை நாம் நீக்க வேண்டும். சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும், நம் கல்வி முறையில் மேற்கத்திய நாடுகளின் மன நிலைதான் உள்ளது. மிக பழமையான நம் கல்வி முறையை பார்க்கும்போது, தற்போதைய கல்வி வெட்கப்படும்படியாக உள்ளது.

நம் நாட்டில் இருந்த பழைய குருகுல கல்வி முறையை போல நல்ல கல்வி, இப்போதைய குழந்தைகளுக்கு கிடைப்பது இல்லை. நுாறு சதவீதம் மக்கள் எழுத்தறிவு பெற வேண்டுமானால், ஒவ்வொருவரும் அதற்காக பாடுபட வேண்டும்.

ஒருவருக்கொருவர் கல்வி கற்று கொடுக்க வேண்டும். அறிவை பரப்ப வேண்டும். கற்போம், கற்பிப்போம்.'கல்லாமையை இல்லாமை ஆக்குவோம். கைநாட்டு பேர்வழியை அறவே அகற்றுவோம்' என் ஒவ்வொரு மனிதனும் சூளுரைக்க வேண்டும்.

தன்னாட்சி உரிமை :கிராமங்களில் 30 சதவீத குழந்தைகள் பள்ளிக்கு செல்வது இல்லை. அந்த குழந்தைகளை பெற்றோர் தமக்கு வேலை செய்ய பயன்படுத்துகின்றனர். '14 வயது வரை குழந்தைகள் அவசியம் கல்வி கற்க வேண்டும்' என சட்டம் உள்ளது. இருந்தபோதிலும், குழந்தை தொழிலாளர்களை பாதுகாக்க கடுமையான சட்ட நடவடிக்கை இல்லை. குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதுதான் ஒரே வழி.

மேல்நிலை கல்வியில், அரசியல், ராகிங் ஆகியவை இடம் பெறுகிறது. அப்பாவி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். பயங்கரவாதமும் மாணவர்களிடம் தலை துாக்கி வருகிறது. பல்கலைக்கழகங்கள் சிறப்பாக நடைபெற, அவை முழுவதும் தன்னுரிமை பல்கலைக் கழகமாக விளங்க வேண்டும்.

உடற்கல்வி :''பிள்ளைகளுக்கு உடலில் வலுவை ஏற்படுத்தாமல், வெறும் படிப்பை மட்டும் கொடுத்தால் நாளுக்கு நாள் ஆரோக்கியம் குறைந்து, படித்த படிப்பெல்லாம் வீணாகி தீராத துன்பத்துக்கு ஆளாக நேரும்'' என்பார் பாரதியார்.''உடற்பயிற்சி வகுப்புக்கு செல்லாத காரணத்தால் ஓரளவு வலிமை பெற தவறி விட்டேன்'' என்றார் அண்ணல் காந்தி.

''உதிரத்தில் சக்தி, நரம்புகளில் வலிமை, வாளிப்பான தசைகள், எகிலான நரம்பு'' என விவேகானந்தர் உடற்கல்வியின் அவசியத்தை கூறினார். உடற்கல்வி உடல் நலத்தை மட்டும் மேம்படுத்தாமல், விளையாட்டின் விதிமுறை, நுணுக்கம், பரிவு, கட்டுப்பாடு, ஊக்கம், இணக்கம், நம்பகம், நடுவுநிலை வழுவாமை, இணைந்து செயல்படும் முறை, உணர்ச்சி வெளிப்பாடு முதலியன குறித்து நல் அறிவு பெறவும், பழகவும் உதவுகிறது.

வந்தால் போகாது :அற்றம் காக்கும் கல்வியை அனைவருக்கும் வழங்க வேண்டும். 'தேடு கல்வி இல்லாததோர் ஊரை தீயினுக்கு இரையாக மடுத்தல்' என பாரதியும், 'கல்வி நல்கா கசடற்கு துாக்கு மரம்' என பாரதிதாசனும் கூறியது நினைவு கூரத்தக்கது.கல்வி, மனிதனை பிற உயிரினங்களில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. உலக வரலாற்றில் அறிஞர்களாக விளங்கியவர்கள், தங்கள் அறிவை வளர்த்து கொள்ள உதவியது அவர்கள் பெற்ற கல்வியே ஆகும்.

போனால் வராதது உயிர். வந்தால் போகாதது கல்வி. அத்தகைய கல்வி, என்றும் நம் வாழ்க்கை பயணத்தில் துணை நிற்கும்.

-எம்.பாலசுப்பிரமணியன்,
செயலர், வள்ளல் அழகப்பர் தமிழ் இலக்கிய பேரவை,
காரைக்குடி. 94866 71830
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    கல்வி படித்து எல்லோரும் வேலைக்கு சென்றால்... விவசாயத்தை யார் பார்ப்பது... கல்வி படித்து விவசாயமும் பார்க்கவேண்டும்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement