Advertisement

ஆரோக்கியத்தை சீர்குலைக்காமல் வாழ வழி

உடல், மனம், உணர்வு ரீதியாக தன்னை முழுமையாக உணர்பவரே ஆரோக்கிய மனிதர். நம்மில் 98 சதவீதம் பேர் மூளையில் எந்த பதிவும்,நோயும் இன்றி பிறக்கின்றோம். அந்த சூழலில் மூளையில் அதிக விஷயத்தை பதிவு செய்து, நம்மை ஒரு தொழில்
நிபுணர்கள் போல் மாற்றுகிறோம். ஆனால், எந்த முயற்சியும் செய்யாதபோது ஆரோக்கியவான்களாக இருந்த நாம், நோயாளிகளாக நம்மை மாற்றிக்கொள்கிறோம்.
சமுதாயம் மற்றும் அதன் பார்வைக்காக உயிர் வாழ நினைக்கும் போது தான் நோயாளிகளாக உருவாகிறோம். இன்றைக்கு பரபரப்பான வாழ்க்கை முறையை பின்பற்றுகிறோம்.
நமக்கு நிதானமாக, பூரண விழிப்புடன் வேலை செய்ய நேரமில்லை. இன்றைய உலகில் சந்தையில் பழங்களை வாங்கி, நாமே 'ஜூஸ்' தயாரித்து சாப்பிடுவதை தவிர்த்து, பாட்டிலில் அடைத்த 'ஜூஸ்' குடிக்கிறோம்.
எப்படிப்பட்ட பழங்களை பயன்படுத்தி அந்த 'ஜூஸ்' தயாரித்தார்களோ அல்லது பழங்கள் கெட்டுப்போகாமல் இருக்க எந்தவித ரசாயன பொருளை கலந்திருப்பர் என்பதை பற்றி சற்றும் யோசிப்பதில்லை.
நமது வாழ்க்கை முன்னோக்கி செல்வதாக தான் உள்ளது. பின்னோக்கி சென்று தவறுகளை உணர்ந்து திருத்திக்கொள்ள வாய்ப்பு இல்லை. இன்று நாம் உட்கொள்ளும் உணவு முறை, முறையற்ற வாழ்க்கை முறையால் எதிர்காலத்தில் ஏற்படும் எதிர் விளைவுகளை கண்டு வருந்தி, முறையாக வாழ்ந்திருக்கலாமோ என கவலை அடைகிறோம்.
பஞ்சபூதங்களின் ஆதிக்கம் பஞ்சபூதங்களின் ஆதிக்கத்தில் தான் மனிதன் வாழ்க்கை நடத்துகிறான். உடல் ஆரோக்கியத்தில், பஞ்சபூதங்களின் முக்கியத்துவம் உணர்ந்து, அவற்றிற்கு முன்னுரிமை தந்து வாழ்க்கை நடத்தினால், ஆரோக்கிய வாழ்க்கை வாழலாம். மனிதர்கள் வாழ காற்று, நீர் மற்றும் உணவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். எந்த சூழலில் உள்ள காற்றை சுவாசிக்கிறோம் மற்றும் பிராணவாயுவை எவ்வளவு நேரம் உள்ளடங்க செய்கிறோம், எவ்வளவு சுத்தமான நீரை அருந்துகிறோம் என்பதிலும், நமது உடலின் ஆரோக்கியம் பெருமளவு தங்கியுள்ளது.
நாம் சாப்பிடும் உணவு வகை தான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதோடு, நோயையும் உண்டாக்குகிறது. எனவே, அன்றாடம் நாம் சாப்பிடும் உணவில் எதை எடுப்பது, எதை தவிர்ப்பது என்பதில் கவனம் செலுத்துவது அவசியம். அதிகளவில் காய்கறி, கீரை வகை, கடல் உணவு, பழங்கள் சேர்த்துக்கொள்வது அவசியம். இருப்பினும் உடல் உழைப்பிற்கு ஏற்ப உணவு சாப்பிட வேண்டும்.
அலுவலகம், வியாபார நிறுவனத்தில் உட்கார்ந்து வேலை செய்வோர், வாகனம் ஓட்டுவோர் அதிகமாக கொழுப்பு மற்றும் சர்க்கரை உற்பத்தியாகும் உணவு, எண்ணெய்யில் பொரித்த உணவை தவிர்க்க வேண்டும். கடின வேலை மற்றும் உடற்பயிற்சி செய்வோர் புரத சத்து நிறைந்த உணவை சாப்பிட வேண்டும்.
கொழுப்பை குறைக்க பயிற்சி ஆனால், நமது சமுதாயத்தில் வித்தியாசமான வகையில் தான் உணவு பழக்கத்தை வைத்துள்ளனர். அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்வோர், கடினமான உழைப்பவர்கள் போல் அதிகமான உணவை சாப்பிடுகின்றனர். கடினமாக உழைப்பவர்கள், வறுமையில் வாடுபவர் போல், குறைவாக சாப்பிடுகின்றனர். இதனால் இரு தரப்பினரும் நோய் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர்.
அதிக கொழுப்பு நிறைந்த உணவை சாப்பிடுவோர், அந்த உணவு பொருளின் காரணமாக உடலில் உற்பத்தியாகும் கொழுப்பை கரைக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சியின் போது, உடலில் அதிகமாக உற்பத்தியாகும் சர்க்கரை, கொழுப்பு, உப்பு போன்றவை எரிக்கப்படுவதால், நோய் தாக்கம் உண்டாகாது. மனிதன் குறைந்தது 40 நிமிடமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
மருத்துவத்திற்கு ரூ.120 லட்சம் இந்திய அரசு மருத்துவத்திற்காக ஆண்டுக்கு ரூ.120 லட்சம் கோடி செலவிடுகிறது. ஆரோக்கியத்தினை சீர்குலைக்காமல் வாழ்வது நமது கடமை. இருக்கும் ஆரோக்கியத்தை சீர்குலைத்துவிட்டு, அரசின் மானிய திட்டத்தை எதிர்பார்ப்பது வேடிக்கையானது. நமது வாகன உதிரிபாகங்கள் பழுதானால், அதிகளவில் செலவழித்து
நம் உடலை விட அற்புதமாக பராமரிக்கிறோம்.ஒவ்வொரு முறையும், வாகனத்திற்கு பெட்ரோல் ஊற்றுதல், ஆயில் மாற்றுதல் போன்ற சர்வீஸ் செய்கிறோம். நம்மை இயக்கும் உடல் பற்றியும், அது ஏற்படுத்தும் பின்விளைவு பற்றியும் கவலை கொள்ளாமல், நாக்கு ஆசைப்படுவதையெல்லாம் வயிற்றிற்குள் போட்டு நிரப்புகிறோம். வயிற்றை குப்பைதொட்டி போல் வைத்திருந்தால், அது சகல தோஷங் களின் உற்பத்தி மையமாகிவிடும்.
வயிற்றை சுற்றி கொழுப்பை வளரவிடாமல், வயிற்றை அவ்வப்போது வெறுமையாக வைப்பது ஆரோக்கிய வாழ்விற்கு சிறந்த வழி. மேற்கத்தியர்கள் வெளித்தோற்றம் மற்றும் சொகுசு வாழ்வில் முழு கவனம் செலுத்தினர். ஆனால், நம் முன்னோர்கள் உடல், மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை தந்தனர். அதனால் தான் நம் நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப உணவு எடுத்தல், துாங்குதல், விழித்து எழுதல், சிறந்த வாழ்வு வாழ்வது எப்படி என தெரிந்து ஆரோக்கிய வாழ்வை சீர்
குலைக்காமல் வாழ்ந்து காட்டினர்.அரசு செயல் திட்டம்
ஆரோக்கியத்தை சீர்குலைக்காமல் வாழ்வது எப்படி என்பது குறித்து அரசு மிகப்பெரிய செயல்திட்டம் வகுக்க வேண்டும். இத்திட்டத்தை பள்ளி,
கல்லுாரிகள், கிராம நிர்வாகங்கள், அரசு அலுவலகங்களில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். எந்த பொருளை வாங்கினாலும், அப்பொருளின் நன்மை, செயல்பாடு குறித்து கையேடு வழங்குகின்றனர். அதுபோன்று மனித உடல் பற்றியும், அதன் செயல்பாடு, உடலை நல்ல நிலையில் செயல்படுத்துவது, எப்படிப்பட்ட உணவை சாப்பிடுவது என்பது குறித்து அரசு சார்பில் மக்களுக்கு 'கையேடு' வழங்க வேண்டும். ஆரோக்கியமாக வாழ கடினமாக முயற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வாழ்க்கையை அதன் வழியில் முறையாக வாழ்ந்தாலே 'நோய் நொடியின்றி' வாழலாம்.
என்ன செய்ய வேண்டும் ஆரோக்கியத்தை சீர்குலைக்காமல் வாழ, அதிகாலை எழுந்து, அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். காலை வெயிலில் காற்றோட்டமான இடத்தில் உடற்பயிற்சி செய்வது நன்று. குறிப்பாக வேகமான நடை பயிற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல், டென்னிஸ், கால்பந்து விளையாடுதல், யோகா, நீச்சல், கராத்தே பயிற்சி செய்யலாம்.
இரவு உணவு சாப்பிட்டு நீண்ட நேரம் ஆவதால், காலையில் அதிக உணவு சாப்பிடுவது நன்று. மதிய உணவில் காய்கறி, கீரை, புரத சத்துள்ள உணவை சேர்க்கவேண்டும். மாலை டீ, காபியுடன் சத்துமாவு உருண்டை சேர்த்தல் அல்லது காய்கறி சூப் சாப்பிடலாம். இரவில் உணவை குறைத்து, இரவு 10 மணிக்கு முன்பே துாங்க செல்ல வேண்டும்.
ஆரோக்கியமான உணவை குறித்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது. காலம் தவறி சாப்பிடுவதால் குடற்புண், வாயு தொல்லை, செரிமான பிரச்னை, சர்க்கரை நோய் மற்றும் தொப்பை போன்றவை உருவாகும். இசையுடன் கூடிய கடின உடற்பயிற்சிகளை மேற்கொண்டால், ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.
-என்.நிமலன்,உளவியல் நிபுணர்,சிவகங்கை. 89400 17156.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

    நல்ல பதிவு. எல்லோரும் கடைபிடித்து வாழ்க வளமுடன்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement