Advertisement

நீரும், காற்றும் நிஜமாக வேண்டும் - சிறுதுளி வனிதாமோகன் சிந்தனை

வாழ்நாளில் நாம் ஒவ்வொருவரும் மூச்சு விடுவதற்கு ஒருமரம் வளர்க்க வேண்டும். எனக்கான மரத்தை நட்டுவிட்டேன். மற்றவர்களுக்கு..? கோவையின் மக்கள் தொகை 15 லட்சம். இதுவரை 4.5 லட்சம்
மரக்கன்றுகள் நட்டுவிட்டோம். இன்னும் தொடர வேண்டும் என்கிறார், கோவையைச் சேர்ந்த சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன்.
கோவை பிரிகால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ள இவர், தொழில் வளர்ச்சியைத் தாண்டி சமுதாய வளர்ச்சிக்காக சிந்திக்க ஆரம்பித்ததன் விளைவே... சிறுதுளி அமைப்பு.
நீர்மேலாண்மை குறித்து பேச மதுரை வந்த வனிதாமோகன், தன் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
''நீரும், காற்றும் நிஜமான சுற்றுச்சூழல் சுகாதாரத்தோடு கிடைக்க வேண்டும். அதற்கான தொடக்க திட்டமிடல் தான் கோவையில் குளங்களை சுத்தப்படுத்த துாண்டியது. மனிதனுக்கு இரண்டு நுரையீரல்கள் உள்ளன. உடலுக்குள்ளே இருக்கும் நுரையீரல், வெளியே சுற்றுச்சூழலில் இருக்கும் மரங்கள் எனும் நுரையீரல். மரங்களை நுரையீரல் என்று சொல்வதற்கு காரணம் உள்ளது. அவற்றின் மூச்சுக்காற்று சீராக இருக்கும் வரை, மனித நுரையீரலின் மூச்சுக்காற்றுக்கு முழுமையான உத்தரவாதம் உள்ளது. மரங்கள் இல்லாத சூழலை நினைத்துப் பாருங்கள். சிறியபெட்டிக்குள் உங்களை அடைத்து வைத்தால் எவ்வளவு நேரம் மூச்சை பிடித்துக்
கொண்டிருக்க முடியும். அறைக்குள் 'ஏசி' இருந்தால் போதுமா. வெளியே செல்லும் போது மூச்சுவிடுவதற்கு காற்று வேண்டாமா.
மரம் எனும் சலவைக்காரர்கள்
கவிஞர் வைரமுத்து சொன்னதைப் போல, நாம் மூச்சுவிடும் காற்றை சலவை செய்வதற்கு மரங்கள் எனும் சலவைக்காரர்கள் வேண்டும். சுத்தமான காற்று, சுகாதாரமான குடிநீர் இரண்டும் தான் மனிதனுக்கு அவசியம்.
சிறுதுளியின் நோக்கமும் அதுவே. கோவையில் நொய்யலாறு 160 கிலோமீட்டர் நீளம் உள்ளது. சரியான விதத்தில் நீர் மேலாண்மை செய்யாததால் ஆற்றில் தண்ணீரில்லை. கோவையில் 2003ல் நிலத்தடி நீர் 1,000 அடிக்கு கீழே இறங்கியது. அந்த நேரத்தில் உருவாக்கப்பட்டது தான் சிறுதுளி.
தண்ணீரை தக்கவைத்தோம்
கோவை மாநகராட்சியில் 60 ஏக்கர் முதல் 350 ஏக்கர் பரப்புடைய ஒன்பது குளங்கள் உள்ளன. அவை பராமரிப்பு இன்றி குப்பைமேடாக இருந்தது.
ஏழு குளங்களை துார்வாரினோம்.
தற்போது நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. நம்ம ஊருக்கு நாம் செய்யவில்லை என்றால் வேறு யார் செய்வது. முதல்குளம் சுத்தம் செய்தபோது 50 ஏக்கர் பரப்பளவிற்கு ஆக்கிரமிப்பு இருந்தது. மீதப்பகுதிகளை சுத்தம் செய்தோம். இதுவரை 1000 ஏக்கர் குளத்தை மீட்டெடுத்து 300மில்லியன்
கனஅடி தண்ணீர் கொள்ளளவை தக்கவைத்து கொண்டிருக்கிறோம்.
வீணடிக்கப்படாத நேரங்கள்
ஒவ்வொரு வார ஞாயிறிலும் குளம் துார்வாரும் பணியை செய்தோம். முதல்வாரம் 2,000, அதன்பின் 4,000, 10ஆயிரம் பேர் திரண்டனர். இயந்திரங்களோடு இளைஞர்களும் மண் அள்ளி துார்வாரினர்; குழந்தைகள் காலித்தட்டுகளை எடுத்துக் கொடுத்தனர்; வயதானவர்கள் காபி, தண்ணீர் கொடுத்தனர். யாரும் ஒருதுளி நேரத்தை கூட வீணடிக்கவில்லை. இப்படி எல்லோரது உழைப்பும் பயன்பட்டதால், குளம் தண்ணீரால் பண்பட்டது.
நீருக்கு மரியாதை: தண்ணீருக்கு நிறைய உணர்ச்சிகள் உள்ளன. நாம் தரும் மரியாதையை பொறுத்து தான், நமக்கு திரும்ப செலுத்தும்.
நீரின் சக்தியை நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதை தான், சமீபத்திய மழை வெள்ள நிகழ்வுகள் உணர்த்தின. தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்கக்கூடாது என்பர். அரசாங்கம் செய்யுமென காத்து கொண்டிருந்தால், எதுவும் நடக்காது. மக்கள் மனது வைக்க வேண்டும். சாக்கடை கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய வேண்டும். நீங்கள் மனது வைத்தால் வைகையும் ஒருநாள் வற்றாத நதியாக மாறும்.
மழைக்கு மரங்கள் பெருக வேண்டும். என்னுடைய 11 சென்ட் இடத்தில் 1,600 மரங்கள் நட்டுள்ளேன். மிக அடர்த்தியாக இருக்கும். இதற்குள்ளே நாம் செல்ல வேண்டியதில்லை. பறவைகள் பறந்து செல்லும்; பூச்சி, உயிரினங்கள் பெருகும்; இலைகள் உரமாகும். நிலம் ஈரப்பதமாகும்.
அதன் மூச்சுக்காற்று நம்மை சுத்திகரிக்கும். பூங்காக்களின் ஓரங்களில் அடர்த்தியான முறையில் மரங்களை நடலாம். சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் கொடுத்தால் போதும். இம்முறையில் ரயில்வே நிலங்கள், பஞ்சாயத்து நிலங்களில் மரக்கன்றுகள் நட்டுள்ளோம்.
நீரும், காற்றும் இயற்கையின் நிஜமான முகமாக மாற வேண்டும். அதற்கு தேவை நம் எல்லோருடைய 'சிறுதுளி' உழைப்பு; அவ்வளவு தான், என்றார்.
Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • Manian k - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்

  சமூக அக்கறை உள்ள இது போன்றவர்களாலேயே நாடு நலம் பெறும்.

 • g k - chennai

  தன்னிறைவு அடைந்து தன் வசதிக்கு பங்கமில்லா வாழ்க்கை வாழும் இத்தகைய தொழிலதிபர்களின் சமுதாயப்பார்வையையும் அக்கறையையும் செயல் திறனையும் மனதார அனைவரும் பாராட்ட வேண்டும்

 • Kumar Sivam - alain,பிரான்ஸ்

  உங்களுடைய மினஞ்சல் முகவரி குடுத்தால் நன்று

 • GREEN INDIA - COIBATORE,இந்தியா

  இவரது சமுதாய பணி, தன்னலமில்லாதது என்றால், பாராட்டலாம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement