Advertisement

நூலகங்கள்...அறிவு திறவுகோல்கள்

நுாலகம், நான்கு எழுத்துக்கள் சேர்ந்த அழகான ஓர் ஒற்றைச் சொல். இந்த ஒற்றைச் சொல் தான் வாழ்க்கை என்ற நான்கு எழுத்துக்கள் கொண்ட சொல்லை வெற்றிப்படிகளில் பயணிக்கச்
செய்கின்றது.
வெற்றிப்படிகளிலா, அது எப்படி என்கிறீர்களா?
வாழ்க்கை என்ற இந்த சொல்லின் முதல் பகுதி வா...விகுதி கை...இரண்டையும் சேர்த்தால் 'வாகை' என்றாகும். வாகை என்றால் வெற்றி. ஆம்! வாகைக்குள் தான் வெற்றி இருக்கின்றது. இந்த வெற்றி நுாலகத்தில் இருக்கிறது.நுாலகத்திலா அது எப்படி என்று மீண்டும் வியப்படைகின்றீர்களா? ஆம்! நுாலகம்தான். நுால்களை தம் அகத்தே கொண்ட நுாலகம்தான். அத்தகைய
நுாலகங்களைப் போற்றுகின்ற விதமாகத்தான் இந்தியா முழுவதும் நவம்பர் ௧௪ முதல் ௨௦ம் தேதி வரை நுாலக வார விழா கொண்டாடப்பட்டது.
௧௯௧௭ நவம்பர் ௧௪. அப்போதைய
மதராஸ்பட்டணத்தில் அரண்மனைக்காரத் தெருவில் கம்பீரமாக இருந்த கோகலே மண்டபத்தில் முதன்முறையாக இந்தியாவில் உள்ள நுாலகர்கள் அனைவரும் பங்குபெற்ற மாநாடு நடைபெற்றது. ௧௯௬௭ல் இந்திய நுாலகச் சங்கம், முதல் மாநாட்டை நினைவுபடுத்தும் விதமாக, அந்த நாளையே தேசிய நுாலக வாரவிழாவாகத் தேர்வு செய்து, அன்று முதல் இந்த விழா கொண்டாப்படுகிறது. இந்தியாவின் நுாலகத் தந்தை என்று
போற்றப்படுபவர் தமிழராகிய சீர்காழி எஸ்.ரங்கநாதன். தமிழர்களாகிய நமக்கு கிடைத்த கூடுதல் பெருமை இது.கருத்துக் கருவூலங்கள் கி.மு., ௪ம் நுாற்றாண்டிலேயே நுால் நிலையங்கள் தோன்றிவிட்டன என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. தொடக்க காலத்தில் களிமண் ஓடுகளையும், ஏட்டுச் சுவடிகளையும் கொண்டு நுால்கள் எழுதப்பட்டன. ௨,௭௦௦ ஆண்டுகளுக்கு முன் சுமேரியாவில் ஒரு நுாலகத்தில் மட்டும் முப்பதாயிரம் மண் பலகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கால மாற்றத்தில் அச்சுப்பொறியும், தாளும் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் நுால்களும், நுாலகங்களும் வளரத்தொடங்கின.காளிதாசன் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனைகள் இன்று இல்லை. ஆனால், அவர் எழுதிய சாகுந்தலம் இன்றும் ஜீவித்துக் கொண்டிருக்கிறது. நல்ல புத்தகங்களுக்கு இறந்தகாலம் இல்லை. அதுபோல் அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், ஷேக்ஸ்பியர் போன்ற தத்துவ ஞானிகளும் நம்மோடு இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் புத்தகங்களாய். அவர்கள் எல்லோரும் நம்மிடம் வர மாட்டார்களா என்று ஏங்கித்தவம் கிடக்கின்றார்கள். அவர்கள் தவமிருக்கும் அந்தப் புனித இடம்தான் நுாலகம். அது கருத்துக்கள் பிரசவிக்கும் பிரசவ அறை. வரலாறு உயிர்த்தெழும் உன்னத இடம்.
வாசிப்பவர்களே வாழ்கிறார்கள் உயிர் வாழ்வதற்குக் காற்றை சுவாசிக்கின்றோம். அதைப்போல முறையாக வாழ்வதற்கு நல்ல புத்தகங்களை வாசிக்க வேண்டும். ஒரு மனிதன்
எத்தனை புத்தகங்களை படித்தான் என்பதை வைத்துத்தான் அவன் வாழ்ந்த நாட்கள் கணக்கிடப்படும் என்றார் ஹென்றி டேவிட் தோரோ. அதனால் தான் வாசிக்காத நாட்கள் எல்லாம் சுவாசிக்காத நாட்கள் என்கிறோம்.
காரல்மார்க்ஸ் முப்பது மூன்று ஆண்டு கால உழைப்புதான் மூலதனம். இப்புத்தகம் தான் உழைப்பாளியின் வாழ்க்கையை உயர்த்திருக்கிறது.மோகன்தாசாக இருந்த அவரை மகாத்மாகாந்தியாக மாற்றியது அவர் படித்த 'கடையனுக்கும் கடைத்தேற்றம்' என்ற புத்தகம் தான். திருச்சுழியில் பிறந்த வெங்கட்ரமணரை, மகான் ரமண மகரிஷியாக மாற்றியது அவர் படித்த பெரியபுராணம். 'பூமியில் நாம் வாழ்வதற்குத் தருகிற வாடகைதான், நம் செய்கிற சேவை'. இந்த வரியைப் படித்த பிறகு தான் தெரசாவுக்கு சமூக சேவையின் மீது நாட்டம் வந்தது. வாசித்த அந்த வாக்கியம் தான் அன்னை தெரசாவாக அகிலம் முழுவதும் அறியச்செய்தது. இப்படி பலரும் புத்தகங்களை வாசித்ததால் தான் வரலாறாக இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
வாழ்வின் திறவுகோல்
வெள்ளைத்தாள்களுக்கு இரண்டு இடங்களில் அதிக மரியாதை இருக்கின்றன. ஒன்று பணமாக மாறும்போது, மற்றொன்று புத்தகமாக மாறும்போது. புத்தகங்களின் தாள்கள் வெறும் தாள்கள் அல்ல. சரியான பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும் கால்கள். அந்தக்கால்கள் இருக்கும் நுாலகம் நோக்கி நம்முடைய கால்களும் பயணமாகட்டும். நுாலகத்திற்கு மன நல மருத்துவ நிலையம் என்று பெயரிட்டு மகிழ்ந்தார், எகிப்து நாட்டு அரசர் பாரோ. இது எவ்வளவு அர்த்தம் பொதிந்த வார்த்தைகள். வாழ்க்கையை நேசிப்பவர்கள் புத்தகங்களை நேசிப்பவர்கள். எப்படி தெரியுமா? மனிதர்களைப் போலவே புத்தகங்களுக்கும் இதயம் இருக்கிறது.
சில புத்தகங்கள் உழைக்கச் சொல்லும், சில அழச் சொல்லும், சில சிரிக்கச் சொல்லும், சில காயப்படுத்தும், சில காயங்களுக்கு மருந்து தடவும், சில வாழச்சொல்லும், சில வாழ்ந்ததைச் சொல்லும். இப்படி ஒவ்வொரு புத்தகத்திற்கும் இதயம் இருக்கின்றது.
உங்களுக்குள் மறைந்திருக்கும் மனிதத்தை, புத்தக வாசிப்பு மட்டுமே உருக வைக்கும் என்பார் அறிஞர் பிரான்சிஸ் காப்கோ. ஆம்! உண்மைதான். அருணிமா சின்கா என்ற பெண்மணி, தேசிய கைப்பந்து, கால்பந்து ஆகியவற்றில் பங்கு பெறும் விளையாட்டு வீராங்கனை. ௨௦௧௧ ஏப்ரல் ௧௧ம் தேதி லக்னோவிலிருந்து, டில்லி செல்லும் பத்மாவதி விரைவு ரயிலில் தேர்வு ஒன்று
எழுதுவதற்காக பயணம் செய்தார்.
அவர் கையில் இருந்த பையும், கழுத்தில் இருந்த சங்கிலியையும் பறிக்க வந்த திருடர்களை எதிர்த்துப் போராடிய போது ரயிலில் இருந்து துாக்கி எறியப்பட்டார்.
தண்டவாளத்தில் தடுமாறி விழுந்த அந்தப் பெண்மணி சுதாரித்து எழுவதற்குள், தடத்தில் வந்த ரயில் அவரது வலது கால் மேல் ஏறியது. இந்தத்தடத்தில் ரயில்கள் சென்றுகொண்டே இருந்தன. அக்கம் பக்கத்தினர் அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது கால் அகற்றப்பட்டது. செயற்கை கால் பொருத்தப்பட்டது. ௨௦௧௩ மே ௨௧ல் ௫௨ நாட்கள் அவகாசம் எடுத்துக் கொண்டு, இமய மலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார். ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்ற பாடல் மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொருவருக்கும்
கூறப்பட்டதுதான். வகுப்பறையில் படிக்கும் புத்தகங்கள் தேர்வுக்கான பாடப்புத்தகங்கள். அவை பாடங்களை மட்டும் தான் கற்றுத்தருகின்றன. வாழ்க்கையை அல்ல. வாழ்க்கையைப் படிக்க அதைத்தாண்டி வாசக சாலைக்கு வரவேண்டும். அந்த வாசக சாலைதான் நுாலகம்.
வீட்டைத்திறக்க திறவுகோல் இருப்பது போல, அறிவைத்திறக்கும் திறவுகோலே நுாலகம்.-பேராசிரியர் க.ராமச்சந்திரன் அருப்புக்கோட்டை9942417103
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement