Advertisement

பாலசந்தர் எனும் பள்ளிக்கூடம்! இன்று முதலாவது நினைவு நாள்

சென்னை வெள்ளத்தையும், கே.பி.சாரையும்(கே. பாலசந்தர்) இணைத்து நான் பார்க்க வேண்டியுள்ளது. தண்ணீர் அவரது வாழ்க்கையில் முக்கியமானது. அதை வீணாக்க விரும்பமாட்டார். அவரது வீட்டு செடிகளுக்கு அவரேதான் தண்ணீர் விடுவார்.மழைக்காட்சி எடுக்கும்போது, 'ரிகர்சல்' பார்க்க லாரி தண்ணீரை வீணாக்க மாட்டார். மழை பெய்வது போல் கற்பனை செய்து கொள்வோம் என்பார். தேவை வரும்போது, 'சென்னைக்கு மழை வர பிரார்த்திப்போம்' என அடிக்கடி சமூக அக்கறையுடன் கூறியவர். அவரது 'தண்ணீர் தண்ணீர்' படத்தில் தண்ணீர் கஷ்டத்தை மிகத் தெளிவாக கூறியவர்.நான் அவரிடம் 32 ஆண்டுகள் உதவியாளனாக இருந்துள்ளேன். எந்த சிரமமுமின்றி உதவியாளனாக சேர்ந்தது, என் அதிர்ஷ்டம். பத்திரிகையாளனாகதான் அவருக்கு முதலில் என்னை தெரியும். 'சாவி' பத்திரிகையில் நான் இருந்தபோது, 'பாலசந்தர் பக்கம்' என்ற பக்கத்திற்காக வாரந்தோறும் அவரை பேட்டி எடுப்பேன். அப்படிதான் அவருடன் நெருக்கம்
அதிகரித்தது.ஒழுக்கத்தின் உச்சம்: ஒழுக்கத்தின் உச்சம் அவர். எவ்வளவு களைப்பாக இருந்தாலும், உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், எந்த நேரமானாலும் அவரது
கடமையை, வேலையை அவரேதான் செய்வார்.அவரது திரைப்படங்களை கொண்ட ஒரு கருவூலத்தை அவரே பராமரித்து வந்தார். அவர் குறித்து பத்திரிகைகளில் வந்த செய்திகள் மற்றும் அவரது படங்களை நான் தொகுத்து அங்கு வைக்கும்போது, அவரும், நானும்தான் சேர்த்து வைப்போம். அவரது பெயர் மற்றும் பட எழுத்துக்களை வெட்டி ஒட்ட, ஒரு ெமஷின் வைத்திருந்தார். அதில் அவரேதான் எழுத்துக்களை 'கட்' செய்து ஒட்டுவார். வேலை செய்யாமல், அதற்கான காரணத்தை கூறுவது அவருக்கு பிடிக்காது. இதனால்தான் அவரது மேஜையில், 'ஐ ஆம் நாட் இன்ட்ரெஸ்ட் இன் எஸ்கியூஸ்' என எழுதி வைத்திருப்பார்.
தன்னிடம் உதவியாளராக சேருபவரிடம் அவர் சினிமாவை மட்டும் சொல்லித்தருவதில்லை. அதையும் தாண்டி வாழ்க்கை, கட்டுப்பாடு, ஒழுக்கம், சமூக அக்கறை போன்றவற்றை கற்றுத்தந்தார். அவர் ஒரு பள்ளிக்கூடம். எனக்கு எல்லா வேலைகளையும் உடனடியாக செய்து முடித்தால்தான்
நிம்மதி. அந்த உணர்வை கொடுத்தது கே.பாலசந்தர்.எல்லாமே திட்டமிடல்: அவரது திரைப்படங்கள் அனைத்தும் எதிர்பாராதவிதமாக அமைந்தது இல்லை. எல்லாமே திட்டமிட்டதுதான். 'சமூகத்திற்கு இந்த பிரச்னையை எடுத்துச் செல்வேன்' என்பார்.
ஒரு நாவலை வேறு வேறு காலக்கட்டத்தில் படிக்கும்போது, அந்த சூழலுக்கு ஏற்ப கருத்து, சிந்தனை தோன்றும். அதுபோல்தான் பாலசந்தரின் 'அவள் ஒரு தொடர்கதை', 'அவர்கள்', 'அபூர்வ ராகங்கள்' போன்ற படங்கள். 'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படத்தை சமீபத்தில் 'டிவி' யில் பார்த்தேன். அந்த படம் 1974ல் எடுத்தது. 41 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பார்த்தபோதும், ஒவ்வொரு காட்சியும் சலிக்காமல், ஆர்வத்துடன் பார்க்கும் வகையில் எடுத்திருந்ததை ரசிக்க முடிந்தது.
காலத்தோடு போட்டி: அடுத்த படம் என்ன என்று கேட்கும்போது, அதில் என்ன கருத்து இருக்க வேண்டும் என்ற சிந்தனைதான் முதலில் அவரிடம் தோன்றும். காலத்தோடு அவர் போட்டியிட விரும்பினார். தன்னை புதுப்பிப்பதில் அதிகபட்ச ஆர்வம் உடையவராக இருந்தார். தினமும் புதுப்பித்துக்கொண்டு தன்னை வளர்த்துக்கொண்டார். சினிமாவில் உறவினர், நெருங்கிய நண்பர் என யாராக இருந்தாலும் தொடர்ந்து அவர்களுடன் பணிபுரிய மாட்டார். ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஒரு டெக்னீசியனை பயன்படுத்துவார்.
ஆரம்பத்தில் அவரது படங்களில் வி.குமார் என்ற இசையமைப்பாளர் இருந்தார். 'காதோடுதான் நான் பேசுவேன்' போன்ற சூப்பர் 'ஹிட்' பாடல்களை கொடுத்தவர். பிறகு எம்.எஸ்.விஸ்வநாதனுடன் சேர்ந்து, 'அவர்கள், அபூர்வராகங்கள்' பட பாடல்களை போன்று சாகாவரம் பெற்ற பல சூப்பர் 'ஹிட்' பாடல்களை கொடுக்க வைத்தார். அடுத்து நரசிம்மன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற இசையமைப்பாளர்களை தனது படங்களில் பயன்படுத்தினார். இதேபோல், ஒளிப்பதிவு தொழில்நுட்ப கலைஞர்களையும் மாற்றிக்கொண்டே தன்னை புதுப்பித்து வந்தார்.
கற்றுக்கொண்ட கே.பி.,: கடைசி வரை அவர் கற்றுக்கொண்டுதான் இருந்தார். அவரது பேத்தி ஜனனி திருமணத்தின்போது, என்னிடம் அவர் 'டேய், எனக்கு ஒண்ணு கற்றுத்தர்றீயா' என கேட்டார். அவரிடம் நான் எவ்வளவோ கற்று இருக்கிறேன். திடீரென அவர் இப்படி கேட்டதும் ஆச்சரியமாக இருந்தது. 'என்ன' என்று கேட்டேன். 'செல்பி... செல்பி...' என்று சொல்றாங்களே. அதை எப்படி எடுப்பது?' என கேட்டார். உடனடியாக அலைபேசியில் செல்பி எடுக்க கற்றுக்கொண்டு, என்னையும், அவரையும் சேர்த்து எடுத்தார்.
எந்த ஒரு விஷயத்தையும் அலசி ஆராய்ந்து தெளிவு பெறுவது அவரது இயல்பு. மருத்துவமனையில் இருந்தபோதுகூட, டாக்டர் கூறிய விஷயங்கள் குறித்து அலசி ஆராய்ந்துதான் திருப்தி அடைந்தார். கற்றுக்கொள்வதுதான் வாழ்க்கை என்று வாழ்ந்தார்.வரும் காலங்களில் நடக்கும் விஷயங்களை முன்கூட்டியே கணித்து செயல்பட்ட தீர்க்கதரிசி. சினிமாவில் அவர் கொடிக்கட்டி பறந்த காலத்தில், திடீரென சின்னத்திரைக்கு மாறினார். பிற்காலத்தில் 'டிவி' சேனல்கள் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்று கணித்து, 1989ல் 'ரயில் சிநேகம்' என்ற முதல் சீரியலை எடுத்தார். 1987லேயே தனது மகன் கைலாசத்தை, 'அட்வான்ஸ் வீடியோ டெக்னிக்' படிக்க வைத்தார்.
வயது 110: அவரது 55 வயது பிறந்தநாளில், 'உங்கள் வயதென்ன' என்று கேட்டேன். '110' என்றார். 'என்ன சார் விளையாடுறீங்களா' என நான் கேட்க, 'இல்லைடா, நம்ம உழைப்பையும் சேர்த்தால் ஒவ்வொரு வருஷத்திற்கும் டபுள் மடங்கு வயசு சேர்க்க வேண்டும்' என்றார். அந்தளவுக்கு கடுமையாக உழைத்தார். அவர் ஒரு சுதந்திர விரும்பி. தான் விரும்பியதைதான் எடுப்பார். அதற்கு 'டிவி'யும் ஒரு வழி என்றுக்கருதி, சின்னத்திரைக்கு மாறினார். மீண்டும் திரைப்படம் எடுக்க வேண்டும் என விரும்பி, திரைக்கதை எழுதி வந்தார்.
காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு வந்த அவர், தனது இறுதிகாலத்தில்கூட, இணையதள திரைப்படம் எடுப்பது குறித்து ஆலோசித்து வந்தார். அதுதான் கே.பி. சார்!
- வசந்த்திரைப்பட இயக்குனர் directorvasanthsaigmail.com
Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement