Advertisement

வண்ணங்கள் காட்டும் எண்ணங்கள்

மனித ஒளி உடல்' என்றால் என்ன?
மனிதனின் ஸ்துால உடலின் உள்ளேயும் வெளியேயும் சுற்றிப் பரவியிருக்கும் ஒளியுடன் கூடிய ஒரு சக்தி வடிவம். நமக்கு ஸ்துால உடல் மற்றும் சக்திமயமான ஒளி உடலும் உள்ளன. ஒளி உடலானது மின்காந்த அலைகளை உள்ளடக்கியது. இதைக்கொண்டு நம் மன, உணர்வு, உடல் மற்றும் ஆன்மிக நிலைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

நம் ஸ்துால உடலில் ரத்தக்குழாய்களில் குருதி ஓடுவது போல், ஒளியுடலில் உள்ள நாடிகளில் சக்தி ஓட்டம் நடைபெறுகிறது. இந்த சக்திக்கான உற்பத்தி நிலையம் போன்றவை நம் ஒளியுடலில் இருக்கும் ஏழு சக்கரங்கள்.

எண்ண அலை :நம்மிடமிருந்து பிறக்கும் ஒவ்வொரு எண்ண அலையின் நல்ல, தீய தன்மையைப் பொறுத்து நம் ஒளியுடல் நல்ல விதத்திலோ, தீய விதத்திலோ பாதிக்கப்படுகிறது. மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்து இது மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது.
சுற்றுச்சூழல், கிரகங்கள் மற்றும் பொருட்களை ஊடுருவியிருக்கும் சக்தி ஆகியவையும் நம் ஒளி உடலைப் பாதிக்கக் கூடியவையே.

(பாதிப்பு என்பது நல்ல விதமாகவும், தீயவிதமாகவும், மிதமான விதத்திலும் அமையக்கூடும்). நம் ஸ்துால உடலை புகைப்படம் காட்டுவது போல நம் அகநிலையை (மன, உணர்வு மற்றும் ஆன்மிக நிலை) நம் ஒளிஉடல் அடையாளம் காட்டிவிடும்.

நாம் நல்ல விஷயங்களாலும், கடவுள் தன்மையாலும் நிறைந்திருக்கும் போது, ஒளி உடலின் வண்ணங்கள் உயிர்ப்புடன் ஒளிவீசி மிளிரும். கவலை, பயம், பதட்டம், வருத்தம் ஆகிய எதிர்மறை உணர்வுகளுடன் இருக்கும்போதும், வாழ்க்கையின் நல்ல விஷயங்களைப் பாராட்டாமல் கஷ்டங்களை மட்டுமே பார்க்கும் போது, ஒளி உடலானது களையிழந்து ஒளியிழந்து சுருங்கி இல்லாததாகி விடுகிறது.

நல்ல விஷயங்களை அங்கீகரித்து, பாராட்டி நன்றி செலுத்தும் பொழுது நம்முடைய இதயம் இளஞ்சிவப்புடன் கூடிய தங்க நிறத்தில் இளஞ்சூரியனைப்போல் ஜொலிக்கிறது.உணர்வுகளும் எண்ணங்களும் நம்மை நாமே கவனித்து மதிப்பீடு செய்வது மிகவும் முக்கியமாகிறது.

நாம் என்ன உணர்கிறோம்? நம்முடைய எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் செயல்கள் மற்றவர்களை எவ்விதம் பாதிக்கிறது? நாம் சந்தோஷமாக இருக்கிறோமா? நல்லிணக்கத்துடன் இருக்கிறோமோ? சம நிலையில் இருக்கிறோமா? என்று உணர்ந்தும் சிந்தித்தும் பார்க்க வேண்டும். உண்ணும் உணவிற்கும், நம் ஒளிவுடலின் வலிமை அல்லது வலிமையின்மைக்கும் தொடர்பு இருக்கிறது.

ஒளி உடலில் உள்ள சக்கரங்கள் சக்தி உற்பத்தி நிலையம் போன்றவை. நமது திசுக்களில் உள்ள மைட்டோகாண்ட்ரியா, உணவை எரித்து சக்தி உண்டாக்குவது போல் இந்த ஒளி நிலையங்கள் (சக்கரங்கள்) நம்மை புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன. தினமும் நம்முடைய சக்கரங்களில் நாம் கவனம் செலுத்தும் பொழுது, அவை சமச்சீராகவும் சமநிலையிலும் இதழ் விரித்து அதிகமாகச் சுழல்கிறது. அப்பொழுது அவை அதிக சக்தியுடன் ஒளிர்ந்து நம்மையும் நம் அருகிலிருப்பவர்களையும் வாழ்த்துகிறது.

ஒளியுடலின் சக்கரங்கள் :முதுகுத்தண்டின் கடைசி எலும்பிற்கு முன்னால் மூலதாரச்சக்கரம், பிறப்புறுப்பிற்கு சிறிது மேலே ஸ்வாதிஷ்டான சக்கரம், தொப்புளுக்கு முன்னால் மணிப்பூரக
சக்கரம், இருதயத்திற்கு முன்னால் அனாகதச் சக்கரம், கழுத்து தொண்டை முன்புறம் விசுதசக்கரம், இரு புருவ மத்தியில் ஆக்ஞா சக்கரம், உச்சந் தலையில் சகஸ்ரார சக்கரம் உள்ளன.

நம் பிரார்த்தனையின் தரம் நம் இருதயம் (சக்கரம்) மற்றும் நம் உணர்வு நிலையைப் பொறுத்து அமைகிறது.

ஒளியுடலின் புகைப்படம் : ரஷ்யாவில் கிர்லியின் என்பவர் 1939 ல் இந்த புகைப்பட நுட்பத்தைத் தற்செயலாகக் கண்டுபிடித்தார். அவரும் அவருடைய துணைவியாரும் ஒரு நோயாளியின் அருகில் நின்றிருந்தனர். அந்த நோயாளிக்கு அதிவேக அலைவரிசை கொண்ட மின் உற்பத்திக் கருவி மூலம் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. அக்கருவியின் மின்வாய் நோயாளியின் அருகில் இருந்தபோது, அவரின் உடலைச் சுற்றிலும் ஓர் ஒளிவட்டம் தோன்றியது. இதை கிர்லியன் கவனித்தார். அவர் வீடு திரும்பியதும் இதே முறையைப் பரிசோதனையாகச் செய்து பார்த்தார். அப்பொழுதும் ஒளிவட்டம் தோன்றியது. இந்த ஒளி வட்டம் தான் ஒளியுடல் என்று அறியப்படுகிறது.

இத்தொழில் நுட்பத்தில் ஒரு பக்கம் படச்சுருளை தொட்டுக் கொண்டிருக்கும் உலோகக் கடத்தியும் மறுபக்கம் புகைப்படம் எடுக்கப்பட வேண்டிய பொருளோ, நபரோ இருப்பார். இப்பொழுது கண நேரத்திற்கு உலோகக் கடத்தியில் அதிவேக மின்னோட்டம் செலுத்தப்படும். அப்பொழுது அயனியாக்கத்தால் மின் வெளிப்பாடு உண்டாகிறது. இந்த மின்வெளிப்பாடு புகைப்படச் சுருளில் பதியும் பொழுது, கிர்லியன் புகைப்படம் கிடைக்கிறது. இவ்வாறு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஒரு பொருள் அல்லது நபரின் ஒளிவட்டம் காணமுடிகிறது.

ஒரு பரிசோதனையில் ஒரு இலையைப் பறித்தவுடன் கிர்லியன் புகைப்படம் எடுத்தார்கள். இலை வாடும் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் புகைப்படம் எடுத்துக் கொண்டேயிருந்தார்கள். பறித்தவுடன் எடுத்த படத்தில், அவ்விலையின் ஒளி வட்டம் பளிச்சென்று பெரிதாகவும் இருந்தது. நேரம் செல்லச், செல்ல இலையும் வாடியது, அதன் ஒளிவட்டம் மங்கி சிறியதானது.

ஆகவே இலை உயிர்ப்புடன் இருக்கும் பொழுது ஒளி வட்டம் வலுவாக இருக்கக் கண்டார்கள். இவ்வுண்மை மனித ஒளி உடலுக்கும் பொருந்தும்.

நலம் பெற வழி :ஒளியுடல் புகைப்படத்தின் மூலம் நம்முடைய ஒளியுடலையும் சக்கரங்களையும் பரிசோதித்து அவற்றில் சக்தி குறைவையும், ஓட்டமில்லாமல் சக்தி தேங்கியிருப்பதையும் கண்டு பிடிக்கலாம். இத்தகைய குறைபாடுகள் ஒருவருக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

இது போன்ற பிரச்னை உள்ளவர்கள் பிரார்த்தனை, தியானம், உடற் பயிற்சி, பிராண சிகிச்சை, தொடு சிகிச்சை, அக்குபிரஷர், அக்கு பஞ்சர் போன்ற மருந்தில்லா சிகிச்சை முறைகளை, வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்துடன் சேர்த்துக் கொள்ளும் பொழுது, நோய்களிலிருந்து குணம் பெற முடியும்.ஆன்மிகப் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் ஒளியுடலும் சக்கரங்களும் பலப்படுத்தப்பட்டு, நன்றாக செயல்படுகின்றன என்பது விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே நாம் மனித அனுபவங்களைப் பெறும், ஆன்மிகப் பிறவிகள் (ஜீவாத்மா) என்பதை
உணருவது அத்தியாவசியமாகிறது. நாம் எம்மதத்தவரான போதிலும் ஆன்மிகப் பாதையில் சென்று இறைவனிடம் ஒன்றுபடவேண்டும்.

- முனைவர் விக்னேஷ்
மனநல ஆலோசகர்,
மதுரை. 99525 40909
Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement