Advertisement

போர் இல்லாத பூமி வேண்டும் இன்று உலக அமைதி தினம்

இன்றையை தினம் உலக அமைதி
தினமாக உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐ.நா.வின்
பொதுச்சபை பிரகடனத்தின்படி 1981 முதல் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர்
மூன்றாவது செவ்வாய்க்கிழமைகளில் கொண்டாடப்பட்டு வந்தது. அதன்
பின் 2002 முதல் செப்., 21 உலக அமைதி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
'புதியதோர் உலகம் செய்வோம்-கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்'
- பாரதிதாசன்
இந்த அற்புதமான உலகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை விட, நமக்கு வேறென்ன பெருமை
இருந்துவிடப்போகிறது. மனிதநேயமிக்க புனிதர்கள், மகான்கள் அவதரித்த
அழகிய பூமி இது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனாலும் இங்கே போர்களுக்கும் வன்முறைகளுக்கும் குறைச்சல் இல்லை. விலங்குகள் கூட தன்னுடைய பசிக்காக மட்டுமே மற்ற விலங்குகளை வேட்டையாடி உண்ணும் என்பதை படித்திருக்கிறோம்.
ஆனால் ஆறறிவு படைத்த, அனைத்தையும் படித்த மனிதர்களாக உலாவிவரும் நம்முள்ளே எத்தனை குரூரம் என்பதை பல்வேறு போர்களும் நிகழ்வுகளும் உணர்த்தி வருகின்றன.
நித்தமும் உலகப்பந்தில் ஏதோ ஓர் மூலையில் பல்லாயிரக்கணக்கானவர்கள் அகதிகளாக விரட்டி அடிக்கப்படுகையில், அங்கே மனிதர்கள் மட்டுமல்ல மனிதமும் விரட்டப்படுகிறது என்பதை நாம் உணர வேண்டும். அடிப்படை சமாதானமே உலகின் சகல முன்னேற்றத்திற்கும் அடிப்படையானது சமாதானமாகும். 20ம் நுாற்றாண்டில் நடைபெற்ற இருபெரும் உலகப்போர்கள், கோடிக்கணக்கான மனித உயிர்களையும் உடமைகளையும் பலிகொண்டுள்ளன. “மனித உள்ளங்
களில் தான் போருக்கான காரணங்கள் தோன்றுவதால், மனித உள்ளங்களிலேதான் அமைதிக்கான அரண்களும் அமைக்கப்பெறல் வேண்டும்” என்பது 'யுனெஸ்கோ'வின் முகப்பு வாசகமாகும். போருக்கான அடிப்படை எதுவாக இருக்கும் என்று ஆராய்ந்து பார்த்தோம் என்றால், இதிகாச காலம்தொட்டு இன்றுவரை தனிமனித ஒழுக்கத்தவறுகளே
காரணமாக இருக்கும்.
மண், பெண், பொன் என்ற வகையிலே ஏதாவது ஒரு ஆசையும், தன்னை யார் என்று காட்ட வேண்டும் என்ற ஆணவமுமே போர்களுக்கும் இழப்புகளுக்கும் காரணமாக இருக்க முடியும். மனித மனம் என்பது போர்க்களத்தை விட மிக உக்கிரமான களமாகும்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூட “படைகொண்டு அமைதியை ஏற்படுத்த இயலாது. நல்லுணர்வால்தான் அதைப் பெற இயலும்” என்கிறார்.
“அவர்கள் வேல்கள் கொண்டு வந்தார்கள். நாங்கள் துப்பாக்கிகளால் அவர்களை வென்று விட்டோம். அவர்கள் துப்பாக்கிகளை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். நாங்கள் பீரங்கிகள் கொண்டு வென்றுவிட்டோம். அவர்கள் பீரங்கிகளையும் பயன்படுத்த தொடங்கினார்கள். நாங்கள் வெடிகுண்டுகளால் அவர்களை சிதறடித்தோம். நிறைவாக அவர்கள் மகாத்மா என்ற ஆத்மா துணையோடு அகிம்சையை கொண்டு எதிர்த்தார்கள். அகிம்சையை வெல்ல எங்களிடம் ஆயுதங்கள் இல்லை. நாங்கள் விலகிவிட்டோம்”என்று ஆங்கிலேய அதிகாரி ஒருவர் கூறியதாக செய்தி உண்டு.அகிம்சை என்பதன் மகத்துவம் புரிய ஆரம்பித்தால் உலகிலே எந்த சண்டையும் நிகழாது.
மனிதனின் மனதில் ''ஊருக்கு உழைத்திடல் யோகம்-நலம்ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்
போருக்கு நின்றிடும் போதும் -மனம்பொங்கலில்லாத அமைதி மெய்ஞானம்''
என்பான் பாரதி.'போர்க்களத்தில் நின்றாலும் தடுமாறாத மனதோடு நிற்றலே ஞானத்தின் ஆரம்பம்' என்கிறான். நம்முடைய சுயநலத்திற்காகவும் கோபத்திற்காகவும் எந்த இழப்புகளுக்கும் நாம் காரணமாகிவிடக்கூடாது. இந்த உலகம் அமைதியான முறையில் அதனுடைய இயல்பிலே அனைவரும் வாழும் ஒரு அழகிய சொர்க்கமாக மாற வேண்டும் எனில், அது ஒவ்வொரு மனிதனின் மனதிலும் இருந்து தொடங்க வேண்டும்.
அடுத்த வேளை உணவுக்காக பசியோடு இருக்கும் அனைவருமே நமது சகோதரர்கள் என்ற எண்ணம் நம்மில் எழ வேண்டும். எங்கே மனிதம் மரணித்துப்போனாலும் அது நம்முடைய மரணமாக எண்ணி துடித்துப் போக வேண்டும்.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்'
என்ற கணியன் பூங்குன்றனாரின் ஒற்றை வரிகளே நமது உலகை நமதாக நேசிக்க வைத்துவிடும். அறிவார்ந்த, படித்த, நாகரிகமான சமூகமாக நாம் மாற வேண்டும் என்றால் அமைதியை நிலைநாட்ட வேண்டும். கண்ணுக்கு கண்,
பல்லுக்குப்பல் என்ற காட்டுமிராண்டி சிந்தனைகளை கைவிடுதல் அவசியமாகும். சக மனித நேசிப்பு இருக்கும் இடத்தில் அறச்சிந்தனைகள் நிறைந்திருக்கும் என்பதிலே ஐயமில்லை. உலகில் இருக்கும் அனைவரையும் நம்முடைய உறவுகளாக நினைக்கும் உயரிய சிந்தையை வளர்த்துக் கொண்டாலே, போரில்லாத உலகத்தை நாம் காண இயலும். அனைவரும் விரும்பும் அமைதியை நிலைநாட்ட முடியும். நோபல் பரிசின் வரலாறு “என் வாழ்நாளில் டைனமைட்
கண்டுபித்ததே என்னுடைய துரதிருஷ்டமாக கருதுகிறேன். ஆக்கத்திற்காக கண்டுபிடித்த அந்த வெடிபொருளால் இன்று மனித சமூகம் அழிவை நோக்கி பயணிப்பதைப் பார்க்கும்போது என் மனம் வேதனை அடைகிறது” என்றார் ஆல்பிரெட் நோபல்.
தனது சொத்தை அறக்கட்டளையாக்கி, உலகில் அமைதியை நிலைநாட்டுபவர்களுக்கு, பரிசு வழங்கப்பட வேண்டும் என்று நோபல் பரிசை அறிவித்தார் அவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனித குலத்தை வளப்படுத்த உதவுவதற்காகவே என்றாலும், சில நேரங்களில் அதுவே நம்முடைய அமைதிக்கு எதிராக திரும்பி விடுகிறது.
நம்முடைய பழங்கால போர்முறைகளில் கூட ஒருவித ஒழுங்கு இருந்தது. ஆனால் தற்போது உலகெங்கும் நடக்கும் போர்களையும் வன்முறைகளையும் காணும்போது மனம் வேதனையின் உச்சத்தை தொடுகிறது. எதற்குச் சாகிறோம் என்று கூட தெரியாமல் கரைஒதுங்கிய சிரிய நாட்டுச் சிறுவனின் சடலம், பலருடைய மனசாட்சியை உலுக்கி எடுத்தது. எவ்வித அறிவும் இன்றி மனிதனை மனிதன், வேட்டையாடும் இடமாக பூமி மாறிவிடக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

அமைதிக்கு என்ன வழி :வன்முறைகளால் இந்த உலகை ஒருபோதும் ஆண்டுவிட முடியாது என்பதையே, தோற்றுப்போன பல சர்வாதிகாரிகளின் வரலாறுகள் காட்டிக்கொடுத்துவிடுகின்றன.
உலகம் அனைத்தையுமே, தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆள விரும்பிய பலரும், அரைஅடி நிலத்தில் அடங்கிப்போனார்கள் என்ற உண்மை தெரிய
வரும்போதே, இந்த உலகம் குறித்த ஒரு புரிதல் நமக்குள் ஏற்பட ஆரம்பிக்கும்.
அழகிய உலகிலே வாழ்ந்து
கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் இந்த உலகத்தின் மீதான நேசிப்பு
அதிகரிக்க வேண்டும். பார்வை தெளிவாக இருந்தால் பார்க்கும் அத்தனையும்
அழகாகவே தெரியும் என்பதைப்
போலவே, நம்முடைய மனம் போர்
களற்ற, வன்முறையற்ற சமூகத்தை
நோக்கி சிந்திக்க வேண்டும்.
உலகம் அமைதி அடைய வேண்டும் என்றால், இயற்கையை நேசிக்க வேண்டும். நம்முடைய சுயநலத்திற்காகவும், சுயலாபத்திற்காகவும், இயற்கையை சிதைக்க ஆரம்பித்ததன் விளைவாகத்தான் இன்று பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறோம். உலகம் அமைதியாக வேண்டும் என்றால் முதலில் நமது மனம் அமைதியாகவேண்டும்.வரும்காலங்களில் ஒவ்வொரு நாளுமே, உலக அமைதிநாள்தான் என்ற மனநிறைவோடும், நிம்மதியோடும் கொண்டாட வேண்டும்.
இதுவே நம்மை வாழவைக்கும் இந்த உலகத்தை, நாம் வாழவைக்கும் முறை. ஓவ்வொரு மனமும் மாறும்போது, உலகமும் மாறும் என்ற நம்பிக்கையோடு நடைபோடுவோம்.
-முனைவர். நா.சங்கரராமன்தமிழ்ப்பேராசிரியர்,எஸ்.எஸ்.எம்.கலை, அறிவியல் கல்லுாரி,
குமாரபாளையம். 99941 71074.
Advertisement
 

வாசகர் கருத்து (5)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement