Advertisement

இலையெல்லாம் நலமே...

முருங்கை மரம்- ஓர் ஊட்டச்சத்து வங்கி. பொதுவாக மரங்கள், செடிகள், கொடிகள்
என இயற்கை படைத்த தாவர இனங்கள் மனித இனத்திற்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுகிறது. தாவர உணவு மனித சமுதாயத்திற்கு சத்துக்கள் அடிப்படையிலும், சமூக ரீதியாகவும் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற எல்லா வகையிலும் மனிதனுக்கு ஏற்ற உணவாகும்.

முக்கிய தாவர உணவான பச்சைக்கீரைகளில் எண்ணிலடங்கா பயன்கள் உள்ளன. நாம் தான் கீரை வகைகளை முறையாகப் பயன்படுத்துவதில்லை. ஏழை முதல் பணக்காரர்கள் வரை எல்லோருக்கும் நலமளிக்கும் கீரைகளை விட்டு விலகி வருகிறோம். அதில் மருத்துவ குணம் கொண்ட முருங்கைக் கீரையும் ஒன்று.பூமியின் கற்பக தரு முருங்கையை கற்பகத்தரு என்றே சித்தர்கள் அழைப்பர். வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்தால் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக வாழலாம். பழங்காலத்தில் அரசர்கள் வீரர்களுக்கு முருங்கை கீரையை உணவாக கொடுத்துள்ளனர். 'இதனால் வீரர்கள் பலமுடன் போர் புரிந்தனர்' என வரலாற்று குறிப்பு கூறுகிறது. முருங்கைக் கீரையை மூளை சுறுசுறுப்பாக இருக்கவும் சருமம் பொலிவுடன் இருப்பதற்காகவும் ராஜா, ராணிகள் கூட பயன்படுத்தியுள்ளனர்.

முருங்கைக் கீரையை ஏழைகளின் 'அமிர்தம்' என்பர். அனைத்து சத்துகளும் அடங்கிய முருங்கைக் கீரை ஒரு இயற்கையின் அற்புதம் தான். முருங்கைக் கீரை, பிசின், இலைக்காம்பு, விதை, காய் அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் கொண்டவை.
எந்த மண்ணிலும் வளரும் முருங்கை மரம் எல்லா வகையான மண்ணிலும் வளரும் தன்மையுடைய பயிராகவும், பி.கே.எம்., 1, 2 போன்ற ரகங்களை பயிரிடலாம். இந்த ரகங்கள் குறைந்தது 6 அடி அல்லது 7 அடி உயரத்தில் வளரக்கூடியது. நிலவளம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் இந்நாளில் அதிக அளவு முருங்கைக் கீரை பயிரிட்டு அதனை பல உணவு வகைகளில் சேர்த்து உபயோகிக்கலாம். இயற்கை வைத்தியத்திலும் கிராமப்புறங்களில் கை வைத்தியத்திலும் முருங்கைக் கீரை அபரிமிதமான பங்காற்றி வருகிறது.

மருத்துவத்தின் ராஜா இந்த கீரையில் 30 வகையான சத்துக்களும் 46 வகையான எதிர் ஆக்சி காரணிகளும் (ஆன்டி ஆக்சிடென்ட்) உள்ளன. இது 300 வகையான நோய்கள் வராமல் தடுக்கிறது. 67 வகையான நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. இன்றும் கிராமப்புறங்களில் 'முருங்கை தின்னா முன்னுாறு வராது' என்ற சொல்வழக்கு உள்ளது. இதிலுள்ள 'பைட்டோக
ெமிக்கல்', 'எதிர்ஆக்சி' காரணிகள் பல்வேறு நோய்கள் வராமல் காக்கிறது.

உணவின் அமிர்தம் கீரையில் பாலை விட 17 மடங்கு கால்சியம், ஆரஞ்சுப்பழத்தை விட
பல மடங்கு விட்டமின் சி சத்தும், முட்டையை விட 4 மடங்கு புரதச்சத்தும், வாழைப்பழத்தை விட 15 மடங்கு பொட்டாசியமும், கேரட்டை விட 10 மடங்கு விட்டமின் 'ஏ' சத்தும் உள்ளது.
சத்துக்கள் கெடாமல் சமைக்கணும் பெண்கள் சமையலில் செய்யும் மிகப்பெரிய தவறு என்ன தெரியுமா? காய்கறி மற்றும் கீரைகளை அதிகநேரம் வேகவைத்து அதன் சத்துக்களை அடியோடு அழிக்கிறார்கள். நம்நாட்டில் தான் இப்பிரச்னை. மேலை நாடுகளில் காய்கறி, கீரைகளை நீண்டநேரம் வேகவைப்பதில்லை. கீரைகளை சத்துக்கள் கெடாமல் சமைக்க வேண்டும். கீரையை நன்கு கழுவிய பின் சமைக்க வேண்டும். அதிக தண்ணீர் விட்டு வேக வைக்கக்கூடாது. 'வெந்து கெட்டது முருங்கை; வேகாமல் கெட்டது அகத்தி' என்றொரு பழமொழி உண்டு. கீரைகளில் அதிக மசாலாக்களை சேர்ப்பதன் மூலம் அதன் நிறம், சுவை, மணம் மற்றும் சத்துக்கள் கெட்டு விடும்.

தற்சமயம் ஊட்டச்சத்து குறைவினால் ஏழைக்குழந்தைகள் மட்டுமின்றி தவறான உணவுப்பழக்கத்தினால் மேல்தட்டு மற்றும் நடுத்தர குடும்பத்தினரும் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகிறார்கள். இந்நிலை ஒருபுறம் இருக்க, தற்சமயம் மூலிகை சார்ந்த இயற்கை உணவுகளுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.

தினமும் உணவில் சேர்க்கலாம் :முருங்கை எல்லா இடங்களிலும் எளிதில் வளரக்கூடியது. எளிதில் கிடைக்கக் கூடியது. அதிகமாக கிடைக்கும் காலங்களில் சுத்தம் செய்து, நிழலில் உலர்த்தி, உலர்ந்த முருங்கைக் கீரையாகவோ அல்லது பவுடராகவோ தயார் செய்து, காற்றுப் புகாவண்ணம் அடர்த்தி அதிகமான பாலிதீன் பை அல்லது அலுமினிய 'பேக்'களில் சேமிக்கலாம்.
அன்றாடம் உபயோகிக்கும் அனைத்து உணவுகளிலும், ஒரு கிராம் முதல் 40 கிராம் வரை கீரை அல்லது பொடியை சேர்க்கலாம். தனிநபருக்கு தினமும் 8 கிராம் முதல் 25 கிராம் வரை உணவில் சேர்ப்பது நல்லது.வீட்டுக்குச் செல்வம் மாடு; தோட்டத்துக்குச் செல்வம் முருங்கை மரம். முருங்கைக் கீரையை, சாதாரணமாக எண்ணாமல், அதை வைட்டமின் டானிக் ஆக நினைத்து பயன்படுத்தி நோயின்றி வாழ்வோம்.-பேராசிரியை சி. பார்வதி,கோவை வேளாண் பல்கலைகழகம் 94422 19710.
Advertisement
 

வாசகர் கருத்து (4)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement