Advertisement

என்ன புத்தகம் படித்தீர்கள்: செப்.7 வரை மதுரையில் புத்தகத் திருவிழா

'எழுத்தாளர்களைக் கொண்டாடும் தேசமேஎல்லையில்லாத மகிழ்ச்சியடையும்'
என்பது ஆங்கிலப் பழமொழி. இந்தச் சமூகத்தின் திறவுகோல் அறிவார்ந்த எழுத்தாளர்களிடமே உள்ளது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விநாடியும் நம்மை புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லும் அனுபவம் நுால்களுக்கும் எழுத்தாளர்களுக்குமே உண்டு. உலகின் தலை
சிறந்த நுால்கள் அத்தனையும், அந்தந்த இனத்தின், மொழியின் பண்பாட்டை அறிவிக்கும் ஒரு பறையாகவே பார்க்கப்படுகிறது.நுால்கள் என்பதை வெறும் தாளில் கோர்க்கப்படும் எழுத்துக்கள் என்ற அளவிலே மட்டும் பார்த்துவிடக்கூடாது. அது சமூகத்தை புரட்டிப்போடும் நெம்புகோல்கள் என்பதை உணர வேண்டும்ஒவ்வொரு நாளும் நாம் வாசிப்பதற்கு ஒரு நேரத்தை ஒதுக்க வேண்டும். ஆரம்பத்தில் நமக்கு பிடித்தமான நுால்களை, எளிதாக படிக்க கூடிய நுால்களை படிக்க ஆரம்பிக்க வேண்டும். அப்படியே நமது வாசிப்பினைத் தொடரும்போது, ஒரு
காலகட்டத்தில் ஆழ்ந்த வாசிப்பு நமக்கு பழக்கமாகிவிடும். இதில் லயித்து கரைந்து போகும் இன்பத்தை வேறு ஏதும் தந்திட இயலாது.

என்ன புத்தகம்
“இப்போது என்ன புத்தகம் வாசித்துக் கொண்டு இருக்கிறீர்கள்?”-தமிழில் சுயமுன்னேற்ற நுால்களை அறிமுகம் செய்த பெருமகனார் டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி ஒவ்வொரு முறையும் புதிய நபர்கள் யாரைச் சந்தித்தாலும் அவர்களிடம், இந்த கேள்வியைக் கேட்பதில் வழக்கமாகக் கொண்டிருந்தவர். அவருடைய “எண்ணங்கள்” என்ற தன்னம்பிக்கை நுால் 115 பதிப்புகளையும் தாண்டி வெற்றிகளைப் பெற்று பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் பாடநுாலாகவே வைக்கப்பட்டுள்ளது.'அறிவை விரிவு செய்' என்பான் பாரதி. எட்டையபுர அரண்மனையில் ஒரு மிகப்பெரிய நுாலகம் பாரதியால் உருவாக்கப்பட்டது. அதில் பல்வேறு அரிய நுால்களை வாங்கி அதை அப்படியே அடுக்கி வைத்துப் பார்ப்பதில், அத்தனை பெரிய ஆனந்தம் பாரதிக்கு இருந்தது.
எட்டையபுர மன்னனோடு பாரதிக்கு பல இடங்களில் கருத்துவேறுபாடு இருந்தாலும், அவருடைய குணங்களில் பாரதிக்கு மிகவும் பிடித்த குணம், புத்தகம் வாங்க பாரதி பணம் கேட்கும்போதெல்லாம் முகமலர்ச்சியோடு தந்து உதவியதே ஆகும். வாங்கிய புத்தகங்களை பெருமித உணர்வோடு அரண்மனைக்கு வண்டியில் கொண்டு வந்து இறக்கி அதை குழந்தைகள் போல துாக்கி ஒவ்வொரு புத்தகங்களாக பிரித்து படிக்க ஆரம்பிக்கையில் அவரது முகத்தில் தெரிந்த ஞானத்தை, உணர்ந்தவர்களே அறிய முடியும்'பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்இறவாத புகழுடைய புது நுால்கள்தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்'என்பார் பாரதி.நம்முடைய பெருமைகளை நாம் மட்டுமே பேசிக்கொண்டிருப்பதில் பலன் இல்லை. உலகின் பல்வேறு கலாசாரங்களையும் பண்பாட்டையும் நமக்கு
அறிவிக்கும் நுால்களை, நம்முடைய உயிரை விட மேலானதாக கருத வேண்டும் என்றார் பாரதி.
நமது வாழ்வின் மிகச்சிறந்த துணையாக, எப்போதும் நம்முடன் இருக்க வேண்டியது, நல்ல புத்தகங்களே ஆகும். ஒவ்வொரு முறையும் நம்முடைய மனம் சோர்வடையும்போதும் கலங்கி நிற்கும்போதெல்லாம், நமக்குத் துணையாக இருப்பதே மிகச்சிறந்த நுால்களே ஆகும். சில புத்தகங்கள், எழுத்தாளருடைய பல வருடத் தவம் என்பதை நம்மால் மறக்க இயலாது. அவர்களுடைய அனுபவங்களையும் நம்பிக்கையையும் நம்மிடையே விட்டுச் செல்வதை நாம் கனிவோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு அறிமுகம் சென்ற தலைமுறை படித்து மகிழ்ந்த அம்புலிமாமாக்கள் போன்ற நல்லவர்களை, நம்முடைய குழந்தைகளுக்கு அறிமுகம் செய்துவைக்க வேண்டும். வெறும் ஏட்டுக்கல்வி சம்பாத்தியம் என்பதை தாண்டி அவர்களுக்கு, நன்னெறியை சொல்லிக் கொடுக்கும் கதைகளை அறிமுகம் செய்யுங்கள்.
பரமார்த்த குரு கதைகள், தெனாலி ராமன், மரியாதை ராமன், பீர்பால், முல்லா உள்ளிட்ட சிறு சிறு கதைகளை அவர்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள். ஒவ்வொரு நாளும் அலுவலகம் சென்று வந்ததும், அரைமணி நேரமாவது நல்ல நுால்களைப் படிக்க நேரம் ஒதுக்குங்கள். அந்த நேரத்தில் நமது
குழந்தைகளை அழைத்து, அவர்களையும் படிப்பதற்கு சொல்லிக்கொடுங்கள். அதனை ஒரு வேலை யாகச் சொல்லி அவர்களை வருத்தமடைய வைத்து விடாதீர்கள். ஒரு அனுபவமாக்கி அவர்களைக் கொண்டாடச் சொல்லுங்கள்.

வீட்டில் உள்ள பெரியவர்களோடு குழந்தைகளை இணைத்துவிடுங்கள். அவர்களின் அனுபவங்கள் மிகச்சிறந்த புத்தகங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்யும். நல்ல அனுபவம் “வாசிப்பு ஒருவனை எப்போதும் தயாரான நிலையிலேயே வைத்திருக்கிறது” என்கிறார் பிரான்சிஸ் பேகன் எனும் அறிஞன். பல்வேறு அறிஞர்களின் அனுபவங்கள் நம்மைச் சரியான வழிக்கு இட்டுச் செல்கிறது என்பதை மறுக்க முடியாது. வாழ்க்கையில் எத்தகைய ஆபத்தான சூழல்களையும் ஒரு நல்ல புத்தகத்தோடு கடந்து
விடலாம் என்பதே வாசிப்பு நமக்குத் தரும் அனுபவம்.“காட்டுமிராண்டித்தனமான நாடுகளைக்காட்டிலும் மற்ற நாடுகள் எல்லாம் புத்தகங்களால் ஆளப்படுகின்றன”என்ற பேகனின் கூற்றை உண்மையாக்குகிறது சில வரலாற்றுச் சம்பவங்கள். நாளந்தா பல்கலைக்கழகம் தீக்கிரையானதும், யாழ்ப்பாண நுாலகம் தீயிட்டு எரிக்கப்பட்டதும் புத்தகங்கள் மேலிருந்த அச்சம் காரணமாகவே என்பதை உணர முடிகிறது. அரண்மனை நுாலகத்தில் ஏரளமான நுால்களைச் சேகரித்து வைத்ததாலே, அக்பர் மிகச்சிறந்த சான்றோராக விளங்கினார்.துாக்குமேடைக்குச் செல்லும் முந்தைய நாள் இரவு வரை, படித்துக்கொண்டிருந்த பகத்சிங் வரலாறு நாம் அறிவோம்.
இரண்டாயிரம் பக்கங்கள் ஒவ்வொருவரும் சராசரியாக ஓராண்டில் இரண்டாயிரம் பக்கங்களாவது படிக்க வேண்டும் என்று சர்வதேச பண்பாட்டு மையம் பரிந்துரை செய்கிறது. குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 30 பக்கங்களாவது படிக்க ஆரம்பித்து, பின்னர் அதை நீட்டிக்கலாம்.
சிறந்த புத்தகம் என்பது அதன் வடிவமைப்பிலோ, அட்டைப்படத்திலோ அல்லது தலைப்பிலோ இல்லை. அது படிப்பவர் மனதிலே கலக்க வேண்டும். அவருக்கு ஏதாவது ஒரு வகையில்
நெருக்கமாக வேண்டும். மனதை ஆள வேண்டும். அப்படிப்பட்ட புத்தகங்களைத் தேடுங்கள். ஏதேனும் ஒரு புத்தகம் உங்களை மாற்றலாம். அது எந்த அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தாலும் அது உங்களுக்காக காத்திருக்கும். அதைத் தேடிச் செல்லுங்கள்.
நல்ல புத்தகங்களுக்கும் அதை எழுதிய எழுத்தாளருக்கும் நன்றி சொல்லுங்கள். முடிந்தால் அந்த நல்ல நுால்களை நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் பரிந்துரை செய்யுங்கள்.நிறைவாக 2009ல் ஈரோடு புத்தகத்திருவிழாவில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூட்டத்தில், 'இளைஞர்களின் கனவு நாயகன்' அப்துல்கலாம் பேசியதன் கடைசி வரிகளை குறிப்பிடுகிறேன்...
“பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளுக்கு அறிவார்ந்த 20 புத்தகங்களையாவது வருடம் ஒருமுறை வாங்கிக் கொடுங்கள். அவர்கள் நன்றாக வளர்ந்து வரும்போது, அது 200 புத்தகங்களாக மாறும். அதுவே உங்கள் குழந்தைகள், பெற்றோர்களாக பரிணமிக்கும்போது, 2000 புத்தகங்களாக உருவெடுக்கும். இந்த நிலை நீடிக்குமெனில் உங்கள் பேரக்குழந்தைகள் கல்லுாரி படிக்கும்போது குறைந்தது உங்கள் வீட்டில் 20,000 புத்தகங்கள் கொண்ட ஒரு நுாலகமே உருவாகியிருக்கும். ஒரு அறிவார்ந்த சமூகம் உங்கள் வீட்டிலிருந்து தொடங்க ஆரம்பிக்கும்”எனவே புத்தகம் படிப்பதை இன்று முதல் பழக்கமாக்கி கொள்ளுங்கள்!- முனைவர்.நா.சங்கரராமன்
தமிழ்ப்பேராசிரியர்எஸ்.எஸ்.எம்.கலை அறிவியல் கல்லுாரிகுமாரபாளையம். 99941 71074.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement