Advertisement

சிந்தை மயக்கும் சிங்கப்பூர்: என்பார்வை

சிங்கப்பூர் என்கிற 'பூலோக சொர்க்கம்' இந்த மாதம் முழுக்க பொன்விழாவைக் கொண்டாடுகிறது. மலேசியாவில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டிற்குச் சென்றுவிட்டு பிப்ரவரியில் சிங்கப்பூர் சென்றிருந்தேன். பல கைகள் சேர்ந்து உழைத்ததால் உலகின் சொர்க்கபுரியாக மாறிப்போன ஒரு
இளையதேசத்திற்குப் போன நிகழ்வுகள் என்றும் மறக்கமுடியாதது.திட்டம் போட்டுத் திடமாய் உழைத்தால் நாம் இருக்கும் இடத்தையே சொர்க்கமாக்கலாம் என்பதற்கு சிங்கப்பூர் அழகான சான்று. மலேசியாவிலிருந்து ஐந்துமணிநேரப் பேருந்துப் பயணம். கண்ணாடி போல் பளபளத்த சாலைகள், இருபுறமும் நீண்டுவளர்ந்திருந்த அழகு மரங்கள். மின்னல் போன்று தோன்றிமறையும் வெளிநாட்டு அதிநவீன கார்கள்,கடற்கரைஓரத்தில் சிங்கப்பூரையே சுற்றிக்காட்டும்
அளவுக்கு மிகப்பெரிய ராட்சச ராட்டினம். அழகான ஆழமான கடற்பரப்பு, விண் எட்டும் கண்ணாடி மாளிகைகள் எனச் சிங்கப்பூர் வரவேற்றது. கண்காணிப்பின் தேசம் சிங்கப்பூர் எல்லை வந்தவுடன்
சுற்றுலா வழிகாட்டி சொன்னார். “கட்டுப்பாடுகள் நிறைந்த அழகான நாடு, இங்கு நாம் நினைத்ததெல்லாம் செய்துவிட முடியாது, நாட்டுக்குள் நுழைந்துவிட்டோம், நம் ஒவ்வொரு அசைவும் கேமராக்களால் துல்லியமாகப் பதிவாகிக்கொண்டிருக்கிறது. தயவுசெய்து கவனமாக இருங்கள்... குப்பைகளைச் சாலையில் போட்டுவிடாதீர்கள் அபராதம் உறுதி” என்றார். அவர் சொன்னது உண்மைதான். இறங்கிப் பார்த்தோம் எங்கெங்கு காணினும் சிசிடிவி கேமராக்கள். வாகனங்கள் அதனதன் போக்கில் ஓடிக்கொண்டிருந்தன. கட்டுப்
படுத்த நம் ஊரில் உள்ளதைப் போல் காவலர்கள் யாருமில்லை. அவர்கள் சாலைவிதிகளை மீறவுமில்லை. பாதசாரிகள் சாலையைக் கடக்கும் வரை ஓட்டுனர்கள் பொறுமை காத்து வாகனங்களை நிறுத்துவதைக் காணமுடிந்தது. வரையறை செய்யப்பட்ட ஒழுங்கிற்குள் அந்த தேசம் யாவரையும் வைத்திருக்கிறது என்பது நன்றாகப்புரிந்தது. ஐம்பதுஆண்டுகளில் அதன் அசுரவளர்ச்சிக்கு அதுவே காரணம்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எல்லா இடங்களிலும் சீன,மலாய், தமிழ், ஆங்கில மொழிகளில் அறிவிப்புகளைக் காணமுடிகிறது. அதிநவீனமான சாங்கி விமானநிலையம் சிங்கப்பூருக்கு வடகிழக்கில் 13 சதுரகிலோமீட்டர் பரப்பில் லட்சக்கணக்கான மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாய் ஜொலிக்கிறது. உலகின் இரண்டாவது மிகச் சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ள சாங்கி எங்கும் அழகுதமிழில் அறிவிப்புகள். சுத்தம் தாண்டவமாடுகிறது. உள்ளேயே நீச்சல் குளம், திரையரங்குகள், நுாற்றுக்
கணக்கான அங்காடிகள் என்று பூலோக சொர்க்கமாய் திகழ்கிறது. சவால்களை வென்ற தேசம் சிங்கப்பூரில் மிகக்குறைந்த மழைக்
காடுகள்தான் உள்ளன. புவியியல் அமைப்புகூட அத்தேசத்திற்குச் சாதகமாய் இல்லை. குடிதண்ணீரைக் கூட மலேசியாவிலிருந்து வாங்குகிறது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் ஆக்கிரமிப்பில் இருந்து செல்வத்தை இழந்து,1965 ஆகஸ்ட் 8 ம் நாள் மலேசியாவிடமிருந்து பிரிந்து தனிக் குடியரசுநாடாக உருப்பெற்று ஐம்பதுஆண்டுகள் ஆகிவிட்டன.
தெற்காசியாவின் மிகச் சிறிய நாடாக சிங்கப்பூர் திகழ்ந்தாலும் இந்த ஐம்பதுஆண்டுகளில் அது சந்தித்த சவால்களும் அவற்றை எதிர்கொள்ள தலைவர்களும் நாட்டுமக்களும் மேற்கொண்ட முயற்சிகளும் வளரும்நாடுகளுக்கு முன்னுதாரணம்.விடுதலை பெற்ற பின் பொருளாதாரத் தேவைகளைத் தனியே சமாளிக்க வேண்டிய சூழல், குறைந்த நிலப்பகுதியில் நிறைவான வசதிகளைச் செய்துமுடிக்க வேண்டிய இக்கட்டான நிலையில் அந்த நாட்டுக்குக் கிடைத்த தொலைநோக்குள்ள தலைவர் லீ குவான் யூ எடுத்த முயற்சிகள் திடமானவை. குறைந்த நிலப்பரப்பை கொண்டு அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டும் அதிநவீன வீடமைப்பு, கட்டிடத் தொழில்நுட்பங்களை அப்போதே நேர்த்தியாகச் செயல்படுத்தினார் லீ குவான் யூ.
கடலிலிருந்து நிலத்தை மீட்டார். சிங்கப்பூரைச் சுற்றியுள்ள அறுபதுக்கும் மேற்பட்ட தீவுகளை ஒருங்கிணைத்தார். சிறுசிறுதீவுகளை ஒன்றாக்கிப் பெருந்தீவாக்கினார். சிறுதுண்டு இடம்கூட வீணாக்கப்படாமல், சிங்கப்பூரின் வளர்ச்சிக்குத் திட்டமிட்டுப் பயன்படுத்தப்பட்டது.
சிறந்த துறைமுகம் அதிக மழையும் அதிக வெயிலும் இல்லாத சீரான காலநிலை இருந்துவருவதாலும், தொடக்கத்திலிருந்தே சட்டம் ஒழுங்குமிக்க நாடாக திகழ்வதாலும் அயல்நாட்டவர் அதிக அளவில் தொழில் தொடங்கப் பெருவாய்ப்பாக அமைகிறது. மிகப்பெரும் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் சிங்கப்பூரின் துறைமுகம்
பிரம்மாண்டமாய் திகழ்வதால் ஏற்றுமதி சுலபமாயிற்று. உலகின் 7000 முன்னணி தொழில் நிறுவனங்களின் கிளைகள் சிங்கப்பூரில் உள்ளன. மின்னணுத் துறை, இயந்திரப் பொறியியல் துறை, உயிரிமருத்துவ துறையில் முன்னணியில் உள்ளது. சீனர்கள்,மலாய் மக்கள், தமிழர்கள் என அனைவரையும் சிங்கப்பூர் ஒன்றாகவே பார்ப்பதால் தேசவளர்ச்சிக்கு இணைந்து உழைத்து வருகின்றனர்.
உலகத்தரம் வாய்ந்த மருத்துவ மனைகள் உள்ளதால் ஆண்டுதோறும் இரண்டு லட்சம் வெளிநாட்டினர்
மருத்துவ சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் வருகின்றனர். உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் உள்ளதால் இந்தியா, சீனா, இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளிலிருந்து கல்வி
கற்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் சிங்கப்பூர் வருகின்றனர். பொழுதுபோக்கு மையம் ஒருகாலத்தில் நாடுகடத்தப்பட்ட குற்றவாளிகளைச் சிறைவைப்பதற்கும் கொலைசெய்வதற்கும் பயன்படுத்தப்பட்ட சந்தோஷா தீவு இன்று உலக அளவில் பெயர்பெற்ற பொழுதுபோக்கு மையமாகத் திகழ்கிறது. மிகப்
பெரிய கர்ஜிக்கும் சிங்கம் சிலை, போர்க்களத்தில் நிற்கும் வீரன் சிலை, பொங்கிவழியும் நீர்ஊற்றுகள், கம்பீரமான ஆடு சிலைகள் (சீனர்களுக்கு இந்த ஆண்டு ஆடு ஆண்டு), மிகப் பழைய வாகனங்கள், அதிரவைக்கும் பலபரிமாணப் படங்களைத் திரையிடும் பிரம்மாண்டமான திரையரங்குகள், நுாறு அடி மேலேவரை கொண்டுசெல்லும் ஊர்திகள், பூத்துக்
குலுங்கும் மலர்ச் சோலைகள், மிகப்பெரிய ஆதாம் ஏவாள் பளிங்குச் சிலைகள், கனவுகளின் ஏரிகள், டாலர் அட்டையைச் சொருகினால் தங்கபிஸ்கட் தரும் தானியங்கித் தங்கம் தரும் இயந்திரங்கள் என சொர்க்கபுரியாகக் காட்சியளிக்கிறது. நேரம் பார்க்காமல் உழைத்தால் நாமும் நம் தேசத்தைச் சிங்கப்பூரைப் போல் மாற்றமுடியும். நம் தேசம் மீது நேசம் கொள்வோம்... பொன்விழாக்கொண்டாடும் இந்தச் சின்ன தேசத்திற்கு நம் வாழ்த்துகளைச் சொல்லி!--முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத் தலைவர்,சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,
திருநெல்வேலி. 99521 40275mahabarathi1974gamil.com
Advertisement
 

வாசகர் கருத்து (8)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement