Advertisement

கலாம் விதைத்ததை விருட்சமாக்குவோம்

* 'மக்கள் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன், அணு விஞ்ஞானி அப்துல் கலாமின் உடல், 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்; கண்ணீர் கடலில் மூழ்கியது ராமேஸ்வரம்.'
* 'மும்பையில், 1993 மார்ச், 12ம் தேதி நடந்த தொடர் குண்டு வெடிப்பில், 257 உயிர்கள் பலியாக காரணமான, யாகூப் மேமன் நாக்பூர் சிறையில், துாக்கிலிடப்பட்டான்.'
இந்த இரண்டு நிகழ்வுகளும், நம் பாரத தேசத்தில் நடந்தது ஒரே நாளில் தான். இரண்டிலும் தொடர்புடையவர்கள், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களே. ஆனால், ஒருவர், நாட்டின் மீது அதீதமான பற்றுக் கொண்டவர். நாடும், நாட்டில் உள்ள இளைஞர்களும் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில், தன் வாழ்நாளை எல்லாம் அர்ப்பணித்தவர். மற்றொருவரோ, நாட்டிற்கு எதிரான சக்திகளுடன் ஒன்று சேர்ந்து, நாட்டையும், நாட்டின் அமைதியையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க காரணமானவர். முதலாமவரின் மரணம் போற்றப்படுகிறது; இரண்டாமவரின் மரணம் துாற்றப்படுகிறது. கடந்த, 2002ம் ஆண்டில், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராமல் இருந்த, பொக்ரான் அணுகுண்டு வெடிப்புக்கு முக்கிய பங்காற்றிய, ஏவுகணை தொழில் நுட்பத்தில், நாடு அதிவேகமான முன்னேற்றம் பெற காரணமாக இருந்த, தமிழகத்தில் பிறந்து, பல ஆண்டுகளாக, மத்திய அரசு ஊழியராக பணியாற்றிய, 'பாரத் ரத்னா' உட்பட, பல விருதுகளைப் பெற்ற அப்துல் கலாம், நேரடியாக, நாட்டின் உயரிய பதவியான ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தன்னை தேடி வந்த பதவியை, பெரும்பான்மையினர் ஆதரவோடு பெற்ற அப்துல் கலாம், தன் பதவிக் காலத்தில் எப்படி எல்லாம் எளிமையாகவும், சிக்கனமானவராகவும், அதே நேரத்தில், அறிவுப்பூர்வமான முடிவுகளை எடுப்பதில், வல்லவராகவும் இருந்தார் என்பதை, அவ்வப்போது, அவரைப் பற்றி, ஊடகங்களில் வெளியான செய்திகள் மூலம் அனைவரும் அறிந்திருப்பர்.
அத்துடன், முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவுக்குப் பின், குழந்தைகளிடமும், இளைஞர்களிடம், அதிக அக்கறை காட்டிய ஒரே தேசத்தலைவர் இவர் தான் என்றால்,
மிகையில்லை. ஏழையாக இருந்த பலர், அரசியலிலோ, அரசிலோ உயர் பதவிகளைப் பெறும் போது, அந்தப் பதவியைப் பயன்படுத்தி, தன் குடும்பத்தினருக்கு எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்க்கலாம் என, திட்டமிட்டு செயல்பட்டுள்ளதை, பல வரலாற்று சம்பவங்கள் நமக்கு நினைவுபடுத்துகின்றன. 'காற்றுள்ள போதே துாற்றிக் கொள்' என்ற அடிப்படையில் செயல்பட்டவர்கள் அவர்கள். ஆனால், பதவியேற்ற போது கொண்டு சென்ற, அதே இரண்டு பெட்டிகளோடு, பதவிக் காலம் முடிந்த பின், தனக்கென ஒதுக்கப்பட்ட அரசு வீட்டில் குடியேறியவர் கலாம். அவர் நினைத்திருந்தால், ராமேஸ்வரத்தில் உள்ள தன் குடும்பத்தினருக்கும், தனக்கு நெருக்கமான நண்பர்களுக்கும், ஏதாவது பெரிய வகையில் உதவி செய்திருக்க முடியும். ஆனால், அவர் அதை விரும்பவில்லை. நாடு முன்னேறினால், தன் குடும்பத்தினரும் முன்னேறி விடுவர் என்ற எண்ணத்தோடு செயல்பட்டவர். தனக்கென சொந்த வீடு வேண்டும் என்று கூட நினைக்காதவர்.
தன் கடைசி மூச்சு உள்ளவரை, நாடு முன்னேற வேண்டும்; வரும், 2020ல் இந்தியா முன்னேறிய நாடாக வேண்டும் என்ற எண்ணத்திலும், இளைஞர்களே, இந்த நாட்டின் வருங்கால துாண்கள்; அவர்கள் நாட்டின் முன்னேற்றத்தில், அக்கறை காட்டினால், நாடு நிச்சயம் பெரிய வல்லரசாகி விடும் என்ற நம்பிக்கையிலும், கடைசி மூச்சு வரை தன் பணியை தொடர்ந்ததால்,
அவரின் மரணத்தை கேட்டு, நாடே துக்கத்தால் அழுது கொண்டிருக்கிறது; கண்ணீர் வடிக்கிறது.
பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் மரணம் அடையும் போது, அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்பர்; பெரிய அளவில் இறுதி ஊர்வலம் நடை
பெறுவது வழக்கம். ஆனால், எந்தக் கட்சியையும் சாராமல், ஒரு மாமனிதராக அப்துல் கலாம் நடந்து கொண்டதால், உலகமே வியக்கும் வண்ணம், அவரின் மரணத்திற்கு, லட்சக்கணக்கானோர் ஏன், கோடிக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஜனாதிபதியாக பதவி வகித்த போது, ஐரோப்பிய யூனியன் பொன்விழாவை ஒட்டி, ஐரோப்பிய பார்லிமென்ட் உறுப்பினர்கள் மத்தியில் பேசிய கலாம், 'எந்த இதயத்தில் நேர்மை இருக்கிறதோ, அங்கு தான் குணத்தில் அழகு இருக்கும்; எங்கு குணத்தில் அழகு இருக்கிறதோ, அங்கு வீட்டில் அமைதி இருக்கும்; எந்த வீட்டில் அமைதி இருக்கிறதோ, அந்த நாட்டில் ஒழுங்கு இருக்கும்; எந்த நாட்டில் ஒழுங்கு இருக்கிறதோ, அந்த நாட்டில் அமைதி நிலவும்' என்றார்.
அவரின் இந்த உரையை, ஐரோப்பிய பார்லிமென்ட் உறுப்பினர்கள் அமோகமாக பாராட்டினர். 'உலகில் அமைதி எவ்வளவு முக்கியம்; நாடு முன்னேற அமைதி நிலவ வேண்டும் என்பதில், அவர் எவ்வளவு அக்கறை காட்டினார்' என்பதையே, அவரின் பேச்சு அப்போது வெளிப்படுத்தியது. இப்படி நாட்டின் அமைதிக்கும், உலகின் அமைதிக்கும் குரல் கொடுத்த அப்துல் கலாம் போற்றப்படுவதிலும், நாடே அவரின் பிரிவை நினைத்து, கண்ணீர் சிந்துவதிலும் வியப்படைய ஒன்றும் இல்லை. மேலும், கலாமின் மறைவுக்கு, ஜாதி, மத, இன பாகுபாடின்றி, தமிழகத்தின் தெருக்கள் எல்லாம், பிளக்ஸ் போர்டுகள் வைத்து, அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியதை பார்க்கும் போது, ஒரு தேசப்பற்றாளனை, சுயநலமில்லாமல், பொதுநலத்துடன் செயல்படும் நபரை, அவர் எந்த மதம், சாதி, இனம் என்ற பாகுபாடு இல்லாமல், மக்கள் கொண்டாடுவர், போற்றுவர் என்பதை நிரூபிப்பதாக உள்ளது.
அதேநேரத்தில், கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நாளில், துாக்கிலிடப்பட்ட, பயங்கரவாதி யாகூப் மேமனை, நாடே துாற்றிக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம், சமீப ஆண்டுகளாக, இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளிலும், வேகமாக பரவி வரும், பயங்கரவாதம் என்ற விஷத்தால் ஈர்க்கப்பட்டு, நாட்டுக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டதே.
எந்த மதமும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதில்லை; அப்பாவிகளின் உயிர்களை குண்டு வெடிப்புகள் மூலம் எடுக்க வேண்டும் என, சொல்வதில்லை. இருப்பினும், மதம் என்ற போர்வையில் சிலர், இதுபோன்ற பயங்கரவாத செயல்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆதரவு தந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் எல்லாம் கலாமிற்கு கிடைத்த புகழஞ்சலியை பார்த்தாவது திருந்த வேண்டும்.
'இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு; வேற்றுமையில் ஒற்றுமை நிறைந்தது' என, அரசியல்வாதிகள் மேடைகள் தோறும் முழக்கமிடுவர். அந்த முழக்கங்கள் எல்லாம் உண்மை என்பது, சமீபத்தில், கலாமின் மரண செய்தி கேட்டதும், நாட்டு மக்கள் அனைவரும், எந்த விதமான பாகுபாடும் இன்றி, அவருக்கு அஞ்சலி செலுத்தியதன் மூலம், நிரூபணமாகி
இருக்கிறது. இந்தியர்களிடம் ஒரு பழக்கம் உண்டு. அதாவது, உணர்வுப்பூர்வமான விஷயங்களுக்கு எளிதில் ஆட்பட்டு விடுவர். அப்படி நாட்டைப் பற்றியும், மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் பற்றியுமே, சிந்தித்ததால், அனைவரின் உள்ளங்களிலும், என்றும் நீங்கா இடம் பெற்று விட்டார் அப்துல் கலாம். சிறு குழந்தைகள் கூட, அவரின் பெயரை
உச்சரிக்கும் நிலைமையை ஏற்படுத்தி விட்டார். எனவே, பொதுவாழ்வில் இருப்பவர்கள், மனிதநேயம், அன்பு, கருணை, நேர்மை, தன்னலமற்ற செயல்பாடு, நாட்டுப் பற்று, நாட்டு மக்கள் அனைவரும் நம் சகோதரர்கள், சகோதரிகள் என்ற
உணர்வோடும், தியாக எண்ணத்தோடும் செயல்பட்டால், அவர்களை நாடு ஒரு போதும் புறக்கணிக்காது; மறைந்தாலும், மக்கள் மனதில் நிலைத்து நிற்பர் என்பதில்
சந்தேகமில்லை. நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளும், நாட்டை காட்டிக் கொடுத்து, நாட்டில் குண்டு வெடிப்பு நிகழவும், உயிர்கள் பலியாகவும் காரணமாக இருக்கும் சக்திகள், இனியாவது, அப்துல் கலாம் என்ற மாமனிதரின் செயல்பாடுகளைப் பார்த்தும், அவரிடம் நாடே காட்டிய அன்பை பார்த்தும் திருந்த வேண்டும்.
கடை கோடி மக்களாக இருந்தாலும், தேசப்பற்றுடன் இருக்க வேண்டும்; நம்மால் முடிந்த நல்லதை செய்ய வேண்டும். ஜாதி, மத, இன வெறிச் செயல்களுக்கு காரணமாக இருந்து விடக்கூடாது என்ற எண்ணத்திலும் செயல்பட வேண்டும். அப்படி செயல்படுவோரை, நாடு போற்றா விட்டாலும், நம்மை சுற்றி இருக்கும், நாற்பது பேராவது போற்றுவர் என்பதை உணர வேண்டும்.
'நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்; ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்' என, மறைந்த மாமனிதர் அப்துல் கலாம் கூறிய பொன்மொழிகளை உறுதிமொழியாக ஏற்று, அனைவரும் மாற வேண்டும். உலக அளவில் பிரபலமாகா விட்டாலும், உள்ளூர் அளவிலாவது நல்லவர்களாக வாழ்வது, மத நல்லிணக்கத்தையும், ஒழுக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பேணிக்காப்பது என, இன்றே உறுதி மொழி ஏற்க வேண்டும்.
அதுவே, மக்கள் மனதில் என்று நீங்கா இடம் பெற்று விட்டு, இறைவனை சென்றடைந்துள்ள, அற்புத மனிதர் அப்துல் கலாமிற்கு நாம் செலுத்தும் நன்றியாகும். அவர் விதைத்ததை நாம் விருட்சமாக்க வேண்டும். இ-மெயில்:mannermalaimanigmail.com
- பிச்சுமணி--- -பத்திரிகையாளர்
Advertisement
 

வாசகர் கருத்து (7)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement