Advertisement

இளைஞர்களின் இதய நாயகன் கலாம்

இந்தியாவை 2020ம் ஆண்டிற்குள் வல்லரசாக்க வேண்டும் என்ற லட்சிய தாக்கத்துடன் அனைத்து தரப்பினரிடமும் நம்பிக்கை விதையை விதைத்தவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம்.

வளர்ந்த இந்தியாவை 2020க்குள் எட்ட, பார்லிமென்ட் முதல் சட்டசபை வரை சென்று அனைத்து தரப்பினரிடமும், “அனைவரும் சேர்ந்து ஒரு தொலை நோக்கு பார்வையுடன் உழைத்தால் சாதிக்க முடியும்,' என்ற நம்பிக்கையை விதைத்தவர். பார்லிமென்ட்டில் “வளர்ந்த இந்தியா 2020' என்ற தொலை நோக்கு திட்டத்தை பற்றி விரிவாக விவாதம் நடத்தி எம்.பி.,களுக்கு அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். நதி நீர் இணைப்பு, எரிசக்தி பாதுகாப்பு, தொடக்க கல்வியில் மாற்றங்கள், “புரா' திட்டம் இப்படி பல்வேறு தொலை நோக்கு பார்வையை ஜனாதிபதியாக இருந்த போது இந்தியாவிற்கு தந்தார். ஊழலை ஒழிக்க பல்வேறு சட்டங்கள் இருந்தாலும், மாணவர்கள், இளைஞர்கள் ஊழல் ஒழிப்பை வீட்டிலிருந்து தொடங்கினால் கண்டிப்பாக ஊழல் ஒழியும் என்று அவர்களை ஊக்கப்படுத்தினார்.

உறுதிமொழிகள் பத்து:“லீடு இந்தியா 2020' என்ற இயக்கம் மூலம் 14 லட்சம் மாணவர்களுக்கு ஆந்திராவில் சுதர்சன் ஆச்சார்யா தலைமையில் பத்து உறுதிமொழிகள் ஏற்க செய்தார். சிறப்பு பயிற்சி அளித்து, மாணவர்கள் தாங்கள் உயர்ந்தால், இந்த நாடு உயரும் என்ற தாரக மந்திரத்தை அளித்தார். மாணவர் தன் தனித்திறமையை உணர செய்து, பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் மதிக்க செய்து கல்வியில் மேம்பாடு அடையவும், ஒரு நல்ல குடிமகனாக மாற்றவும் வழிகாட்டினார். அந்த பயிற்சி பெற்ற மாணவர்கள் தங்கள் பெற்றோர்களை மாற்றி நல்வழிக்கு திருப்பினர்.

மாற்றத்தை ஏற்படுத்திய மகான்:ஒரு நாள் திருப்பதியில் ஒரு லட்சம் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்ற உறுதிமொழியை பெற்று, அவர்களிடம் கையெழுத்து வாங்கி டாக்டர் அப்துல் கலாமிடம் சமர்ப்பித்தனர். அந்தளவுக்கு மாற்றத்தை டாக்டர் அப்துல் கலாமின் மாணவர்களுக்கான உறுதிமொழி அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது தெரியும். தமிழகத்திலும் அத்தகைய பயிற்சியை மாணவர்களுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டார். கோவையில் சதீஷ் என்பவர் தலைமையில் இம்முயற்சி நடக்கிறது. நடிகர் தாமு தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 200 பள்ளிகளில் இதற்கான பயிற்சியை இதுவரை அளித்திருக்கிறார்.

வளர்ச்சிக்கான அனுபவ பெட்டகம் :2020ல் இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும் என்பதின் தொடர்ச்சியாக டாக்டர் அப்துல் கலாமுடன் நான் இணைந்து எழுதிய புத்தகம் தான் “ஏ மானிபெஸ்டோ பார் சேஞ்ச்' . இந்த புத்தகம் பஞ்சாயத்து தேர்தல் முதல் சட்டசபை, லோக்சபா வரை எப்படி ஒரு நேர்மையான, ஊழலற்ற, வளர்ச்சிக்கான அரசியல் செய்ய இயலும், எப்படி இளைஞர்கள் வளர்ச்சிக்கான அரசியலில் பங்கெடுக்க இயலும் என்ற லட்சிய விதை விதைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. அரசியலில் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் அது ஒரு அனுபவ பெட்டகமாக கொள்கை விளக்கமாக, கை ஏடாக இருக்கும் என்பது திண்ணம்.

நாட்டின் எதிர்காலம்:குழந்தைகள் தான் இந்த நாட்டின் எதிர் காலம் என்று தீர்க்கமாக நம்பி இளைஞர்களே, “தலைவர்களை வெளியில் தேடாதீர்கள். உங்களுக்குள் அந்த தலைவன் இருக்கிறான். நான் உனக்கு தலைமை தாங்க மாட்டேன். உன் பின்னாலும் வர மாட்டேன். உன்னோடு நான் நடந்து வருகிறேன். என்னோடு சேர்ந்து நட, உனது தலைமை பண்பு இந்த தேசத்தை மாற்றட்டும்,'' என்பார்.

தலைவனுக்கு இலக்கணம் வகுத்தவர்:நீ என்ன செயல் செய்தாலும், அதில் ஒரு நல்ல தலைவனாக மாறு. உனது தலைமை பண்பு இந்த தேசத்தை வழிநடத்தும் என்ற தாரக மந்திரத்தை டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் விதைத்தார். தலைவன் என்றால் என்ன? தலைமை பண்பு என்றால் என்ன? எனக்கு கொடு, கொடு என்ற மனநிலை தான் இன்றைக்கு அனைத்து ஊழலுக்கும், மக்களின் துன்பத்திற்கும் காரணம். கொடு என்று ஒன்று குழந்தை கேட்கும் மற்றொன்று பிச்சைகாரன் தான் கேட்பான். ஊழலுக்கு கண்டிப்பாக குழந்தை தனம் இடம் கொடுக்காது. அப்படி என்றால் ஊழல் மனப்பான்மை பிச்சைக்காரனின் மனப்பான்மைக்கு சமம். எனவே கொடு, கொடு என்ற மனநிலையில் இருந்து மாற்றம் பெற்று, நான் தான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்ற மனநிலைக்கு ஒருவர் மாறி விட்டால், அவன் தான் தலைவன். அப்படிப்பட்ட தலைவர்கள் அனைத்து துறையிலும் வர வேண்டும். அதிகாரிகள் மட்டத்திலும், அரசியலிலும் வர வேண்டும். அந்த மனநிலைக்கு மக்களை மாற்ற வேண்டும் என்றால், இளையசமுதாயத்திற்கு அப்படிப்பட்ட உணர்வு வர வேண்டும். அந்த சமுதாயம் ஒரு வேளை ஊழலில் ஈடுபடும் பெற்றோர்களை மாற்ற வேண்டும் என்பதில் அவர் தீவிரமான நம்பிக்கையுடன் செயல்பட்டார். அப்படிப்பட்ட இளைய சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.

வழிகாட்டியாக திகழ்ந்தார்:இந்தியாவை வளமான நாடாக்கி காட்டுவோம் என்று சபதம் எடுக்க செய்து வழிகாட்டியாக திகழ்ந்தார். கனவு காணுங்கள் எனக்கூறி இளைஞர்களின் கனவு நாயகனாக விளங்கினார். நான் அவருடன் பணிபுரிந்த காலங்களை மறக்க முடியாது. யாரையும் அவர் கடிந்து நான் பார்த்ததில்லை. கோபம் வந்தாலும் கூட வெளிகாட்ட மாட்டார். முடியாது என்ற செயல்களை கூட முடியும் என நம்பிக்கையை ஏற்படுத்த செய்து முடிக்க வைப்பார்.

உயர்ந்த எண்ணங்களை விதைப்பார்:புறங்கூறுவதை ஏற்க மாட்டார். அன்பினாலும், பாசத்தினாலும் சாதிக்க முடியாததை கோபத்தாலும், வெறுப்பாலும் சாதிக்க முடியாது என அடிக்கடி அவர் கூறுவார். உயர்ந்த எண்ணங்களை பற்றி சிந்திக்க வைப்பார். பெரியளவில் எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும் என்பார். எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் என்னை உடன் அழைத்து செல்லும் டாக்டர் கலாம், இம்முறை விண்ணுலகம் செல்வதாலோ என்னவோ என்னை அழைக்காமல் மேகலாயா நிகழ்ச்சிக்கு சென்று விட்டாரோ. அவர் நினைவுகளோடு இந்த உலகம் வாழும். அவரது லட்சியத்தை மனதில் கொண்டு அனைவரும் செயல்படுவோம்!
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாணநன்னயம் செய்து விடல்'' என்ற திருக்குறள் நெறிப்பட வாழ்ந்த அந்த மகாத்மாவின் கனவை நனவாக்குவோம்.
-வெ.பொன்ராஜ்,
அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர்,
(20 ஆண்டுகளாக அவருடன் இணைந்து பணியாற்றியவர்) புதுடில்லி.
vponrajgmail.com
Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement