Advertisement

நான் 'ஸ்ட்ராங் லேடி'; எனக்கு 'பவர்' இருக்கு...!

'படையப்பா' படத்தில், நீலாம்பரியாக, தன் கர்வமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். நீண்ட இடைவெளிக்குப் பின், ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த, 'பாகுபலி' படத்தில், 'சிவகாமி தேவியாக' உணர்ச்சிமிக்க நடிப்பால், மீண்டும் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் இடம் பிடித்த ரம்யா கிருஷ்ணனுடன் ஒரு சந்திப்பு...
* பாகுபலி பட அனுபவம்?
மிக பிரமாண்ட படத்தில் நானும் இருந்தது பெருமை. என், 'ரோல்' பற்றி இயக்குனர் கதை சொல்லும் போதே, அந்த சிவகாமி கேரக்டர் மனசுக்குள் அப்படியே பதிந்து விட்டது என்றே சொல்வேன். பாகுபலி எனக்கு சூப்பர் அனுபவம்.
* பொதுவாக படங்களில் ஹீரோயின்களுக்கோ அல்லது பெண்களுக்கோ ரொம்ப வலுவான கதாபாத்திரம் அமைவதில்லை. ஆனால், பாகுபலியில் உங்க கேரக்டர் ரொம்ப பலமா அமைந்தது பற்றி?
அது உண்மைதான். இந்த மாதிரி வலுவான ரோல் எழுதுவதே ரொம்ப அரிது; அந்த
மாதிரியான ஒரு ரோல் என்னிடம் வந்து, நான் நடித்தது மிகப்பெரிய பாக்யம் என்றே சொல்வேன். படங்களில் பொதுவாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி கதைகள் அமைவது இல்லை. எனக்கு பாகுபலியில் அந்த வாய்ப்பு கிடைத்ததில் மிகப்பெரிய சந்தோஷம்.
* பாகுபலி (பார்ட் -1) முதல் பாகம், சரியாக முடிக்கலைனு கொஞ்சம்
பேச்சு இருக்கே?
எனக்கு தெரிஞ்சு இவ்ளோ பெரிய பட்ஜெட் உள்ள படங்கள், 'பார்ட் - 1, பார்ட் - 2' என்று வந்ததில்லை; அதில் நிறைய சிரமங்கள் இருக்கு. ஆனால், பாகுபலி முதல் பாகத்தில், 'இன்டர்வெல்' உடன் படம் முடிவதால், 'கிளைமாக்ஸ்' பெரிய அளவு இருக்காது. இரண்டாம் பாகத்தில் தான், கிளைமாக்ஸ் முழுமையாக எடுக்கப்பட்டு, கதையின் முடிவு தெரியும்.
* நீலாம்பரியை விட, சிவகாமி தேவி கேரக்டர் மக்கள் கிட்ட, 'ரீச்' ஆகி விட்டதா நினைக்கிறீங்களா?
அதிகமாக, ரீச் ஆனது சிவகாமி தேவி தான். எல்லா தரப்பு ரசிகர்களையும் சென்று அடைந்தது இந்த கேரக்டர். இதோட பவரே வேற.
* தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் நடிக்கிறீங்க, எங்கு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது?
அப்படின்னு சொல்ல முடியாது. இந்த மாதிரி பட வாய்ப்பு, நடிகைகளுக்கு எப்போதோ ஒருமுறை கிடைக்கும். அந்த மாதிரி வாய்ப்பு கிடைத்த, இந்தப் படத்தில் நானும் நடித்து இருக்கேன் என்பது சந்தோஷம்; பெருமை.
* தமிழ் சினிமாவில் நடிக்க முடியாமல், மிஸ் ஆன ஹீரோ?
கிட்டத்தட்ட, 200 படங்களுக்கு மேல நடிச்சிருக்கேன். கமல் சார் வரையும் நடிச்சிட்டேன். ரஜினி சாருடன் நடிக்க முடியலை என்ற வருத்தம் இருந்தது. அதுவும், 'படையப்பா' படத்தில் நடித்ததும் நிறைவேறியது.
* தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி?
எந்த ஒரு வித்தியாசமான கதையையும் நல்லா இருந்தால், துாக்கிவச்சு கொண்டாடி இருக்காங்க. பெரிய வெற்றி பெற வச்சிருக்காங்க. அவங்களை பாராட்டியே ஆக வேண்டும். இதற்கு சமீபத்திய உதாரணம், காக்காமுட்டை. இந்த படத்தை ஆதரித்தால் தான் இன்னும் நிறைய படங்கள் வரும்.
* உங்கள் மகன் பற்றி?
பேர் ரித்விக்; 10 வயது, ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். ரொம்ப துறுதுறு.
* நீங்க நடித்ததில் சிறந்த மூன்று படங்களை வரிசைப்படுத்துங்க...?
தெலுங்கில் நிறைய படங்கள் இருக்கு... தமிழில் சொல்லணும்னா படையப்பா, பஞ்சதந்திரம், பாகுபலி.
* உங்களை பார்க்கும்போது, ரொம்ப தைரியசாலியா தெரியுதே?
நான் ரொம்ப, 'ஸ்ட்ராங்' லேடி. எதை கண்டும் பயந்தது இல்லை. என்னால் ஒரு பிரச்னையை சந்திக்கவும் முடியும்; அந்த பிரச்னையை சரி பண்ணவும் முடியும்; எனக்கு அந்த, 'பவர்' இருக்குன்னு நினைக்கிறேன்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement