Advertisement

ஆஷாவின் ஆசை

அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'பாபநாசம்' திரைப்படத்தில், மிடுக்கான போலீஸ் ஐ.ஜி.,யாக கண்டிப்பு காட்டியும், மகனை இழந்து தவிக்கும் தாயாக உருகியும் நடித்து இருந்தார் அவர். பிரிவின் வலியை வார்த்தைகள் துணையின்றி முகபாவம் காட்டியே உணர்த்தி 'கிளைமாக்சில்'முத்திரை பதித்த அந்த புதுமுகம் யார்? இது தமிழ் ரசிகர்களின் ரசனையான கேள்வி. அதற்கு பதில் ஆஷா சரத்.
கேரளாவை சேர்ந்த இவர் பிரபலமான நாட்டிய கலைஞர். கணவர் சரத், இரண்டு பெண் குழந்தைகளுடன் துபாயில் வசிக்கிறார். 'குங்குமப்பூ' என்ற தொலைகாட்சி தொடர் மூலம் மலையாள மக்களின் மனங்கவர்ந்தவர். மூன்றாண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'பிரைடே' என்ற திரைப்படம் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார். பின்னர் மோகன்லாலுடன் 'கர்மயோதா' என்ற படத்தில் நாயகி. 'பாபநாசம்' படத்தின் ஒரிஜினல் 'திருஷ்யம்' இவரது நான்காவது படம். பதினாறு வயது மலையாள பெண்குட்டி ஹீரோயின்களுக்கு போட்டியாக, இந்த 40 வயது குடும்பத்தலைவியும், லால், மம்முட்டி என எல்லோருடனும் ஹீரோயினாக நடித்து விட்டார் குறுகிய காலத்தில்! கனவுகளோடு தமிழுக்கு வந்திருக்கும் ஆஷா சரத்துடன்...
* எப்படி 'திருஷ்யம்' ஐ.ஜி., ஆனீர்கள்?
மோகன்லாலுடன் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்ததால் அறிமுகம் இருந்தது. அவர் தான் திருஷ்யம் திரைக்கதையை தந்து படிக்க சொன்னார். 'உங்களுக்கு விருப்பம் என்றால் ஐ.ஜி., கதாபாத்திரத்தில் நடியுங்கள்' என்றார். பாதி திரைக்கதையை படித்த போதே பரவசமாகி விட்டேன். அந்த கதை என்னுள் அப்படி ஒரு வலியையும், பிரமிப்பையும் ஏற்படுத்தியது. இதில் என்னால் ஐ.ஜி.,யாக நடிக்க முடியுமா?
எனக்கு கண்ணில் மை எழுதி, பொட்டு வைத்து, நாட்டியமாடி தான் அனுபவம். காக்கிச்சட்டை எல்லாம் நமக்கு 'கரெக்ட்' ஆகுமா என்று சந்தேகம். என்றாலும் ஒரு தைரியத்தில் அந்த கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டேன். இயக்குனர் ஜித்து ஜோசப்பிடம் போனில் பேசியது தான்; நேரில் பார்த்தது இல்லை. படப்பிடிப்பின் போது ஐ.ஜி., மேக்கப் போட்டு
'குட்மார்னிங்' என்று சொன்னது தான் முதல் சந்திப்பு.
* தமிழிலும் உங்களை ஐ.ஜி.,யாக்கியது ஜித்துவா? கமலா?
கன்னட 'ரீமேக்கிலும்' நான் நடித்தேன். தமிழிலும் தயாராகிறது என தகவல் வந்த போது, நடிக்க விரும்பினேன். விருப்பத்தை யாரிடமும் தெரிவிக்கவில்லை. தமிழில் நடிப்பது என் கனவு, ஆசை. ஆனால் கனவுகளுக்கு அப்பாலும் ஒரு உலகம் இருக்கிறதே. இயக்குனர் ஜித்து ஒருநாள் 'வெல்கம் டூ பாபநாசம்' என்று மெசேஜ் அனுப்பினார். படத்திற்கு பாபநாசம் என்று பெயர் வைத்தது கூட எனக்கு அப்போது தெரியாது. நான் எல்லையில்லா ஆனந்தம் அடைந்தேன். தற்போது படம் வெற்றிபெற்று என் கேரக்டர் பேசப்பட்டதில் மகிழ்ச்சி. ஜித்துவிற்கும், தமிழ் ரசிகர்களுக்கும் நன்றி.
* 'திருஷ்யம்' ஜோஸ் குட்டி- 'பாபநாசம்' சுயம்புலிங்கம். நடிப்பில் உங்களை மிரள வைத்தவர் யார்?
இரண்டு பல்கலைக்கழகங்களை ஒப்பிடச் சொல்கிறீர்கள். என்னால் முடியுமா? முடியாது. அவர்களின் நடிப்பை அருகில் இருந்து அற்புதத்துடன் ரசித்த மாணவி நான்!
* இனி தமிழ் திரையுலகில் உங்களை பார்க்கலாமா?
நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன். தற்போது கமலுடன் 'தூங்காவனம்' படத்தில் கவுரவ வேடத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கிறேன். உயிருக்கு உயிராக நான் நேசிக்கும்
பரதநாட்டியம் தமிழகத்தின் கலைவடிவம் தானே. இதுவரை தமிழகத்தில் ஓரிரு நடன நிகழ்ச்சிகள் தான் நடத்தியுள்ளேன். இனி என் நடன நிகழ்ச்சிகளையும் இங்கு நடத்த விரும்புகிறேன்.
* நடனம்-நடிப்பு என எப்படி பயணம் தொடர்கிறது?
துபாயில் 3500 மாணவர்கள் படிக்கும் இசை, கலை, பண்பாட்டு கல்லுாரியை நடத்தி வருகிறேன். லண்டன் டிரினிட்டி கல்லூரியுடன் இணைவிக்கப்பட்ட நிறுவனம் இது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். நடனத்தை தொடர்ந்து நடிப்பு என எதையும் நான் திட்டமிடவில்லை. என்றாலும் தெய்வத்தின் ஆசியோடு எல்லாம் நன்றாகவே நடக்கிறது.
வாழ்த்த ashasharathgroupyahoo.com
Advertisement

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement