Advertisement

உடனடி தேவை - உள்நாட்டு தூதுவர்: பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி -எழுத்தாளர்

சமீப காலமாக ஆபத்தான ஒரு போக்கு மேலோங்கி வருகிறது. எந்தத் தொலைக்காட்சி விவாதம் ஆனாலும், சகட்டு மேனிக்கு அரசை வசை பாடுகின்றனர். தலைப்பு எதுவாக இருந்தாலும், 'பெரு முதலாளிகள், பாசிசம், சுரண்டல், வஞ்சகம்' போன்ற சொற்கள் எல்லாம் இல்லாமல் யாரும் பேசுவதே இல்லை.

சென்ற மாதம், ஒரு தொலைக்காட்சியில், 10ம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் பற்றிய நேரலை விவாதத்தில் ஒரு நண்பர், 'இந்த முடிவுகள் எல்லாமே ஒரு மாயை தான். எல்லாம், 'கார்ப்பரேட்' நிறுவனங்களின் முடிவு படிதான் நடைபெறுகிறது' என்று ஒரே போடாய்ப் போட்டார்.'நீங்க சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? பிள்ளைகள் யாருமே படிக்கவில்லை; இவர்கள் பெற்ற மதிப்பெண்கள் எல்லாமே, 'யாரோ' திட்டமிட்டு வழங்கியது தான் என்கிறீர்களா?' என்ற எதிர்க்கேள்விக்கு ஒரு பதிலும் இல்லை. ஆனால், அவர் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு இருந்தார்.

பொதுத் தேர்வுகள் முதல் பொதுப் போக்குவரத்து வரை அத்தனைக்கும் அரசை தாக்குவது தான், 'சமூக சேவை' என்று சிலர் கிளம்பி இருக்கின்றனர். கேட்டால், மக்கள் பக்கம் நின்று பேசுவதாக, தமக்குத் தாமே தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். உண்மையில், இவர்கள் மக்களின் கருத்துகளைப் பிரதிபலிப்பதும் இல்லை; இவர்களால் மக்களுக்கு எள்ளளவும் நன்மையும் இல்லை. அரசுக்கு எதிரான வெறுப்பையும் விரோதத்தையும் வளர்க்கவே இவர்களின், 'நாடகம்' பயன்படுகிறது. எப்போதுமே அடித்தட்டு மக்களுக்கு ஆதரவாக, அவர்களின் உற்ற நண்பனாக இருப்பது அரசு மட்டுமே. மத்திய, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் திட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகளின் விளைவாகத் தான், அத்தனை பேருக்கும் ஒன்றாய் நல்லது நடந்து வருகிறது.

'பிறப்பு முதல் இறப்பு வரை' அத்தனை நிகழ்வுகளிலும் உடன் நின்று உதவுகிற தோழனாக இருக்கிற ஓர் அமைப்பை, எப்படியாவது சீர் குலைத்துவிட வேண்டும் என்ற மறைமுக செயல் திட்டத்துடன், பலரும் இறக்கி விடப்பட்டு இருக்கின்றனரோ என்ற ஐயம், நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.இங்கே ஓர் உண்மையை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். நம் நாட்டில் ஜனநாயகச் சிந்தனைகள் வலுப்பெறவில்லை. அரசுக்கும் அரசியலுக்கும் இடையே உள்ள வேறுபாடு பலருக்கும் புரிவதே இல்லை. அதனால் தான், அரசை ஆதரித்தால், ஆளும் கட்சியை ஆதரிப்பதாகவும், ஆக்கப்பூர்வமாக விமர்சித்தால், எதிர்க்கட்சிகளுக்குத் துணை போவதாகவும் தவறாகக் கருதப்படுகிறது. மெத்தப் படித்தோர் கூட, இந்த மாயைக்கு அடிமையாகி விடுகின்றனர்.

அரசு என்பது, மக்களாட்சி முறையில், மிக முக்கியமான அடிப்படைக் கட்டமைப்பு. இந்த அமைப்பை விட்டால், மக்களின் நலனுக்காக செயல்படுவதற்கான, வேறு ஓர் அமைப்பு இல்லவே இல்லை. எந்தத் தனிமனிதனும் அல்லது நிறுவனமும் அரசுக்கு ஈடாக வரவே முடியாது.கோடி கோடியாக செலவு செய்து, அத்தனை பேரின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகி, வெயில், மழை, பனி என்று எதற்கும் துவளாது, தொடர்ந்து பணியாற்றிக் கொண்டு இருக்கும், மக்கள் நலன் சார்ந்த, மக்களமைப்புகளைக் குறிவைத்துத் தாக்குவது எந்த விதத்தில் நியாயம்?

பெரியம்மை அழிக்கப்பட்டது; போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது; தொற்று நோய் பரவுகிற போதெல்லாம், போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்பட்டு மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டது ஒருமுறை, இருமுறை அல்ல; பல நூறு முறை! வெள்ளம், வறட்சி, நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் நேரும் போதெல்லாம், 'சகல பரிவாரங்களுடன்' களத்தில் இறங்கி உடனடி மீட்சி மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது என்று இவற்றில் எதற்காவது, எப்போதாவது அரசை மனமாரப் பாராட்டுவோர் எத்தனை பேர்?

பல லட்சம் கி.மீ., நீளத்துக்கு சாலைகள் அமைத்துப் பராமரிப்பு, பல நூறு கோடி ரூபாய் இழப்பு நேரினும், சாமானியர்களுக்காக பொதுப் போக்குவரத்து, இயன்றவரை இலவசமாக சிகிச்சை தர பொது மருத்துவமனைகள், வறியோர்களுக்கு உதவுவதற்காக பொது வினியோக முறை, அனைத்துக்கும் மேலாய், பொது அமைதியை நிலை நாட்டல், சட்டம் - ஒழுங்கைப் பாதுகாத்தல் என, அடுக்கிக் கொண்டே போகலாம்.குறைகள் இருக்கலாம்; தவறுகள் நடைபெறலாம். அதற்காக, நமக்கே நமக்கான, நமக்காகவே இருக்கிற, நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரேயொரு பிரதிநிதித்துவ அமைப்பையும், தகர்த்து எறிகிற செயலில் ஈடுபடுவோரை நாம், ஊக்கப்படுத்த வேண்டுமா?

அரசின் பக்கமும் ஒரு குறை இருக்கிறது. எல்லாப் பக்கங்களிலும் இருந்தும் அரசுக்கு எதிரான கணைகள் வீசப்படும்போது, அவற்றை எதிர்கொண்டு பதில் தருகிற ஒருவர் வேண்டுமே என்ற எண்ணமே இல்லாமல், அரசு, 'வாளா' இருப்பதை என்னவென்று எடுத்துக் கொள்வது.'சமூக ஆர்வலர்'களும், 'கவிஞர்'களும், 'எழுத்தாளர்'களும் மக்களை திசை திருப்புகிற வேலையில் முனைந்து செயல்படும்போது, மறு பக்கம் மவுனமாகவே இருந்தால், இவர்கள் சொல்வது முழுக்கவும் உண்மை தான் போல் இருக்கிறது என்று தானே மக்கள் நினைப்பர். 'சர்வ வல்லமை' பொருந்தியதாகச் சொல்லப்படும் அரசை ஆதரித்துப் பேச, ஒருவருமே இல்லையா! காரணம், அரசு அலுவலர்களுக்கு உள்ள கட்டுப்பாடு.

கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் தேவைதான். ஆனால், யாரேனும் ஓரிருவராவது, அரசின் சார்பில் மக்களுக்கு உண்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டுமா இல்லையா? அரசின் கொள்கை முடிவுகள், திட்டங்கள் சார்ந்த விவாதங்கள், சர்ச்சைகள் எழுகிற போதெல்லாம் - அதாவது, எழுப்பப்படுகிற போதெல்லாம் - அவற்றுக்கு சரியான விளக்கம் அளிக்கிற வகையில் ஒருவர் வேண்டும். இப்பணியைத் திறம்பட செய்வதற்கென்று, அயல்நாடுகளில் பணி அமர்த்தப்படுகிற தூதுவர்கள் போலவே, 'உள்நாட்டுத் தூதுவர்' என்ற பதவி உருவாக்கப்பட வேண்டும்.இப்பொறுப்பு வகிப்பவர், அரசுப் பணியில் இருப்பவராக, சற்றும் அரசியல் சாயம் அற்றவராக இருத்தல் வேண்டும். பொதுமக்கள் ஊடகங்களில் சுதந்திரமாக இயங்குகிற அதிகாரம், இவருக்கு வழங்கப்பட வேண்டும். இவர் வீணான அரசியல் வாக்குவாதங்களில் இருந்து விலகி. அரசின் கொள்கை முடிவுகள், திட்டங்களை எளிய முறையில் விளக்குபவராக மட்டுமே இருக்க வேணடும்.

இதுபோன்ற கட்டுப்பாடுகளுடன் இயங்குகிற, 'உள்நாட்டுத் தூதுவர்'களை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நியமித்தாக வேண்டிய கட்டாயம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அரசுக்கு எதிராக மக்களை மூளைச் சலவை செய்யும் சக்திகளுக்கு எதிராக, ஏதேனும் செய்தாக வேண்டியது மிக அவசரம்.ஜனநாயகத்தின் உயிர் மூச்சாக இருக்கும் ஓர் அமைப்பு, தொடர்ந்து உயிர்ப்புடன், இல்லையில்லை, உயிருடன் இருந்தாக வேண்டும். அது தான் பொதுமக்களுக்கு மட்டுமல்ல, அரசியல் இயக்கங்களுக்குமே கூட நல்லது.இ-மெயில்: baskaranprogmail.com
Advertisement
 

வாசகர் கருத்து (9)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement