Advertisement

கருணைக் கொலை மனித உரிமை மீறலா : ஸ்ரீதர் ராஜகோபாலன்,சமூக ஆர்வலர்

'யுத்தனேசியா' என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிற வார்த்தைக்கு, கருணைக் கொலை என்று, தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

யுத்தனேசியா என்ற வார்த்தை, கிரேக்க மொழியிலிருந்து கிடைக்கப் பெற்ற வார்த்தை, யுத்தனேசியா என்ற வார்த்தைக்கு பொருள், நன்மரணம். கருணைக் கொலை அல்லது நன்மரணம் என்று அழைக்கப்படுகிற இச்செயல், நெடுங்காலமாக நோய்வாய்ப்பட்டு, பெருத்த அவதியுறும் நோயாளிகள் மற்றும் உறுப்புகள் செயலிழந்து அவதியுறும் நோயாளிகள், அவதிகளிலிருந்து விடுதலை பெற உதவும் செயலாக கருதப்படுகிறது.கருணைக் கொலை சம்பந்தமாக, இரு மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. வாழ்க்கை என்பது புனிதமானது. ஆகவே, அதை செயற்கையாக முடிவுக்கு கொணர்வது அடிப்படையிலே தவறு என்று ஒரு சாராரும்; வாழ்க்கை என்பது தனிப்பட்ட நபர் சம்பந்தப்பட்டது. ஆகவே, ஒவ்வொருவரும் எப்படி வாழ வேண்டும், அதுபோன்று அந்த வாழ்க்கையை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற உரிமை, அவரவருக்கு உள்ளது என்று, மற்றொரு சாராரும் விவாதிக்கப்படுகிற பொருளாய், கருணைக் கொலை அமைந்துள்ளது.

கருணைக் கொலைக்கும், தற்கொலைக்கும் உள்ள வேறுபாடு பற்றி, பலருக்கும் குழப்பங்கள் உண்டு. இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை, நரேஷ் மகரோட்ராவ் எதிர் இந்திய யூனியன் என்ற வழக்கில், நீதிபதி லோடா, 'தற்கொலை என்பது மற்றவர்களின் உதவியின்றி, தன் உயிரை போக்கிக் கொள்வது. ஆகவே, கருணைக் கொலை இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு, ௩௦௯ன் படி தற்கொலை என்று கருத முடியாது' என்று, தீர்ப்பு வழங்கியுள்ளார். உலகளவில் அல்பேனியா, லக்சம்பர்க், நெதர்லாந்து, அமெரிக்காவில் உள்ள மாகாணங்களான வாஷிங்டன், ஒரேகான் போன்றவற்றில் கருணைக் கொலை சம்பந்தமாக சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.ஆஸ்திரேலியாவில் தான் கருணைக் கொலை, 1996ல் உலகிலேயே முதன் முதலாக சட்டப்பூர்வமாக்கப் பட்டது. அமெரிக்காவில் ஒரேகான் மற்றும் வாஷிங்டன் மாகாணங்களை தவிர, மற்ற மாகாணங்களில் யுத்தனேசியா என்ற கருணைக் கொலை, சட்டத்தில் அங்கீகரிக்கப்படவில்லை. கனடா நாட்டில், நோயாளிகள் தங்களுக்கு அளிக்கப்படும் உயிர்காக்கும் மருத்துவ உதவிகளை ஏற்றுக் கொள்ள மறுக்கும் உரிமை உள்ளது. பெல்ஜியம் நாட்டில், 2002ம் ஆண்டு கருணைக் கொலை சட்டப்பூர்வமாக்கப் பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ரஷ்யா, ஸ்பெயின் போன்ற நாடுகளில், கருணைக் கொலை சட்டத்திற்கு புறம்பானது.

நம் நாட்டில், கருணைக் கொலை, சட்டத்திற்கு புறம்பானது. மருத்துவர்கள் கருணைக் கொலைக்கு முயற்சித்தால், அவர்கள் குற்றவியல் சட்டம் பிரிவு, 300ன் படி கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவர். கியான் கவுர் எதிர் பஞ்சாப் மாநிலம் என்ற வழக்கில், ஐந்து நீதிபதிகளை கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஷரத்து, 21ன் படி, வாழும் உரிமை என்ற கோட்பாடு இறப்பதற்கு உரிமை என்பதை உள்ளடக்காது என்று விளக்கி, இறப்பதற்கு உரிமை எவருக்கும் இல்லை என்பதை தெளிவுபடுத்தியது.

இத்தகைய சட்டச்சூழலில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு, 37 ஆண்டுகளாக செயலற்ற முறையில் வாழ்ந்து வரும், முன்னாள் செவிலியரான அருணா ஷெண்பக் நன்மரணம் பெற அனுமதிக்க வேண்டும் என்று, பிங்கு விரானி என்ற எழுத்தாளர் தாக்கல் செய்த மனுவில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை நல்கியுள்ளது.நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில், 2011 மார்ச் 7ல் வந்த இந்த வழக்கில், கருணைக் கொலை தேவையில்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தது. மிகவும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே, குணப்படுத்த இயலாத வகையில், நோய் வாய்ப்பட்டிருக்கும் ஒருவரை, மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் வாழ செய்வதை தவிர்த்து, அவரது உயிரை போக்கலாம் என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனால், கருணைக் கொலைகளை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படும் முறையில், முதல் கட்டத்தை இந்தியா எட்டியுள்ளது.

கருணைக் கொலை முறைகள் இரண்டு வகைப்படும். ஒன்று, 'ஆக்டிவ் யுத்தனேசியா!' இதன் படி, ஒருவருக்கு விஷ ஊசி போட்டோ அல்லது வேறு முறைகளிலோ மருத்துவர்கள் முன்னிலையில், உடனடியாக உயிர் போக வைப்பது. மற்றொரு முறை, 'பாசிவ் யுத்தனேசியா!' இதன் படி, உயிர்காக்கும் மருந்து மற்றும் உபகரணங்களை தவிர்த்து, துண்டித்து ஒருவரை சாகவிடுவது.உச்ச நீதிமன்றம், அருணா ஷெண்பக் வழக்கில், சாத்வீக கருணைக் கொலைக்கு அனுமதி அளித்தள்ள போதிலும், இதற்காக மருத்துவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், இது சம்பந்தமான நடவடிக்கைகள் யாவும் உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இந்து மதத்தில் கருணைக்கொலைக்கு ஆதரவான கருத்துக்கள் இல்லை. கடவுள் தான் வாழ்க்கையை நல்கியவர். ஆகவே, அந்த வாழ்க்கையை முடித்துக் கொள்ள எவருக்கும் உரிமையில்லை.நோயினாலும், முதுமையினாலும் பாதிக்கப்பட்ட நபர்களின் உயிரைப் போக்குவதற்கு, அவர்கள் சம்மதித்தாலும் எவருக்கும் உரிமையில்லை என்று, கிறிஸ்தவ மதம் ஆணித்தராமாக கூறுகிறது. கடவுள் படைத்த உடலுக்கு, உரிமைக் கொண்டாட எவருக்கும் உரிமையில்லை. ஆகவே, அந்த உயிரை மாய்த்துக் கொள்ள எவருக்கும் தகுதியில்லை என, புனித குரான் கூறுகிறது. வாட்டி வதைக்கும் நோயிலிருந்து விடைபெற கருணைக் கொலையை நாடுவதற்கு எவருக்கும் உரிமையில்லை என, சீக்கிய மத கோட்பாடுகள் கூறுகின்றன. மத போதனைகள் இவ்வாறிருக்க, யுத்தனேசியா என்ற கருணைக் கொலை அனுமதிக்கப்பட்டால், ஏற்படும் மோசமான சமுதாய விளைவு களை இப்போது பார்க்கலாம். குணப்படுத்த முடியாத நோயினால் பீடிக்கப்பட்டு, அவதியுறும் நோயாளி களை பராமரிப்பது மற்றும் அதன் அடிப்படையில் ஏற்படும் மருத்துவ செலவினங்கள் ஆகியவை நோயாளிகளின், உற்றார் மற்றும் உறவினர்கள் கருணைக் கொலைக்கு, நோயாளியை துாண்டுவதற்கு ஏதுவாய் அமையும்.

மாறிவரும் சமுதாயத்தில் கூட்டுக் குடும்பங்களே முற்றிலும் குலைந்து போயுள்ள இச்சூழ்நிலையில், முதுமை யினாலும், நோய்வாய்ப்பட்டு வருந்துகிற பெற்றோரை உதாசீனப்படுத்தும் இந்த காலகட்டத்தில், கருணைக் கொலைகள் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டால், கொடூரமாய் அரங்கேறும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. மேலும், நோய்வாய்ப்பட்டிருக்கும் நபர் பணம் படைத்தவராய் இருக்கும் பட்சத்தில், கருணைக் கொலைகளை அரங்கேற்ற புதுமையான யுத்திகள் புறப்படும் .கருணைக் கொலைக்கு சட்ட அங்கீகாரம் அளிப்பது, மரணப்
படுக்கையில் இருக்கும் நோயாளிகளை காக்க முற்படும் மருத்துவ முயற்சிகளுக்கு தடைக்கல்லாய் மாறும் என்ற வாதத்திலும் பொருளுண்டு.
'கோமா' என்ற உணர்வற்ற நிலையில் இருக்கும் நோயாளிகளை கருணைக் கொலை செய்வதற்கு, அவர்களது உற்றார் மற்றும் உறவினருக்கு அனுமதி அளித்தால், சட்டத்தை அவர்கள் தவறாக பயன்படுத்துவதற்கு ஏதுவாய் அமையும்.

நம் நாட்டை பொறுத்தவரை, யுத்தனேசியா என்கிற கருணைக் கொலை சட்ட அங்கீகாரம் பெற எந்த வித சட்டமும் தற்போது இல்லை. அருணா வழக்கில் உச்ச நீதிமன்றம், 'டிவிஷன் பெஞ்ச்' அளித்த தீர்ப்பே, கருணைக் கொலை அங்கீகாரம் பெறுவதற்கு, ஓர் சட்டம் இயற்றப்படும் வரை, நடைமுறையில் இருக்கும். நோயாளிகள் மற்றும் முதியோர்கள் வாழும் வகையில் மருத்துவ வசதிகள், குணப்படுத்த முடியாது என, தற்போது கருதப்படக்கூடிய நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆராய்ச்சிக் கூடங்களை உருவாக்குவதில் அரசு முனைப்புடன் செயல் ஆற்ற வேண்டும் என்பதே, பெரும்பான்மையான மக்களின் பெருத்த எதிர்பார்ப்பு.
இமெயில்: sri_raja62yahoo.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement