Advertisement

ஏன் வேண்டும் மேலவை...- தமிழருவி மணியன்,சமூக ஆர்வலர், அரசியல் விமர்சகர்

'அறிவிற் சிறந்த மூத்தோர் இடம் பெறாத அவை, எந்த வகையிலும் அவையாகாது. நேர்மையற்றவர் யாராயினும், மூத்தோர் ஆவதற்கு முடியாது. உண்மையற்ற எதுவும், நேர்மை நிறைந்ததாய் இருக்காது. பொய்மையும், புரட்டும் இருக்குமிடம் நோக்கி நடப்பது, எப்போதும் உண்மையாவதற்கு இயலாது' என்கிறது மகாபாரதம்.வயது முதிர்ந்த, அனுபவம் கனிந்த, அறிவு நிறைந்த, நேர்மை மிகுந்த, உண்மை சார்ந்த, வஞ்சமற்ற மாந்தர் கூடியிருக்கும் அவையே ஆட்சியாளர்களுக்கு அரிய ஆலோசனைகளை வழங்கி, நெறி சார்ந்த பாதையில் வழி நடத்த முடியும் என்று மகாபாரதம் வாக்குமூலம் வழங்குகிறது.

சுதந்திர இந்தியாவில் மத்தியிலும், மாநிலங்களிலும் இரு அவைகள் செயல்படுவதற்கு அரசியலமைப்பு சட்டம் வழிவகுத்தது. தமிழகத்தில், 1986 வரை இரு அவைகளும் இருந்தன. முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., மேலவையை கலைக்கும் போது அதில், 63 உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர். அத்தனை உறுப்பினர்களும் ஒரே வினாடியில் பதவியை பறி கொடுத்தனர்.

மேலவை என்பது பழங்கனவாய் மாறிவிட்டது. மேலவைக்கு சுயமாக சட்டம் இயற்றும் அதிகாரம் இல்லை. சட்டப்பேரவை இயற்றும் சட்டங்களை அங்கீகரிக்கவோ, அவற்றில் உள்ள குறைகளை எடுத்துரைக்கவோ அதற்கு உரிமை உண்டு. மேலவை ஒரு சட்டத்தை எதிர்த்தாலும், சட்டப் பேரவையின் முடிவை அதனால் மாற்ற இயலாது. 'எந்த அதிகாரமும் இல்லாத சட்டசபை மேலவையால் என்ன பயன்?' என்ற கேள்வி எழலாம்.

போட்டியும், பூசலும் நிறைந்த பணத்தின் ஆதிக்கம் விரிந்த, பலாத்கார நடைமுறைகள் மலிந்த தேர்தல் களத்தில் பங்கேற்க விரும்பாமல் ஒதுங்கி நிற்கும் அறிவில் சிறந்த நேர்மையாளர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், உயர் ஒழுக்க நெறியாளர்கள், பல்துறை வித்தகர்கள், அரசுக்கு ஆலோசனை கூற தேவை. ஆட்சியாளர்களை நெறிப்படுத்தவும், நிர்வாகத்தை முறைப்படுத்தவும், ஆட்சியில் பங்கேற்று வளர்ச்சி திட்டங்களுக்கு வழிவகுக்கவும் மேலவை வாய்ப்பளிக்கிறது. இந்த மேலான நோக்கத்தில் தான் நம் சட்ட மேதைகள், மேலவை உருவாவதற்கு வழிவகுத்தனர்.

ராஜாஜி, ஓமந்துார் ராமசாமி ரெட்டியார், ஆர்.கே.சண்முகம் செட்டி யார், எம்.சி.ராசா, ஏ.டி.பன்னீர்செல்வம், பக்தவத்சலம், அண்ணாதுரை, இரட்டைமலை சீனிவாசன், ஆர்.வெங்கட்ராமன், பி.டி.ராஜன், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., போன்றோர் தமிழகத்தின் மேலவையை அலங்கரித்தனர். ராஜாஜியும், அண்ணாதுரையும் மேலவை மூலமே முதல்வர் நாற்காலியில் அமர்ந்தனர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக, 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி, உலகப்புகழ் பெற்ற மாபெரும் கல்வியாளர் டாக்டர் லட்சுமணசாமி முதலியார், தேர்தலில் நின்று வென்றிருக்க முடியுமா? அவருக்குரிய மரியாதையை மேலவையால் தான் தர முடிந்தது. வாக்காளர்களால் புறக்கணிக்கப்பட்ட ம.பொ.சி., மேலவைத் தலைவராக இருந்தார்.

பல்துறை நிபுணர்களின் அறிவாற்ற லால், ஆட்சியாளர்கள் பயன்பெற வேண்டும் என்ற உயர் நோக்கில் உருவாக்கப்பட்ட மேலவையில் தனித்திறமையோ, சமூக சிந்தனையோ, நிர்வாக ஆற்றலோ, அரிய ஆலோசனைகள் வழங்கும் அருகதையோ எள்ளளவும் இல்லாத கட்சிக்காரர்கள், இரு திராவிட கட்சிகளின் ஆட்சிகளில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அதன் விளைவாக, மேலவை தனக்குரிய மாண்பை முற்றாக இழந்தது. மக்களின் அங்கீ காரத்தை பெற முடியாத பதவி விரும்பிகளின் பாழ்பட்ட பாசறையாக உருமாறியது. தமிழகத்தின் சகல துறைகளையும் சீரழித்து சிதைத்த இரு திராவிட கட்சிகளால், மேலவையும் சீரழிவை சந்தித்தது என்பது தான் வரலாற்று உண்மை.

கடந்த, 45 ஆண்டுகளுக்கு மேல் இரு கழகங்களின் ஆட்சியில் தமிழகம் மிகப் பெரிய வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டு வங்கியை விரிவுபடுத்த, இலவசத் திட்டங்களை அள்ளி இறைத்ததன் விளைவாக, இந்த நிதியாண்டில், 50 ஆயிரம் கோடி ரூபாய் விரயமாக்கப்பட இருக்கிறது.மாநில அரசின் கடன் சுமை, இரண்டு லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்து விட்டது; தொழில்துறை முடங்கி விட்டது; விவசாயம் நலிந்து விட்டது; மின் பற்றாக்குறை பெருகி விட்டது. அமைச்சர்கள் பட்டியல் தயாரிக்கப் படும் போது மாவட்ட பிரதிநிதித்துவம், ஜாதிப் பிரதிநிதித்துவம், கட்சியில் முக்கியத்துவம் ஆகியவை மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகிறது. அதிகாரிகளும், வெவ்வேறு துறைகளுக்கு பந்தாடப்படுகின்றனர். ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகல துறைகளிலும் சாதனை படைக்கும் சாத்தியம் உள்ளவரா?

'இதை, இதனால் இவர் முடிப்பார் என்றாய்ந்து,
அதை அவரிடம் ஒப்படைக்கும்' சிந்தனைக்கே இன்றைய ஆட்சியாளர் தம்மை ஒப்புக் கொடுப்பதில்லை.

நாடு விடுதலை பெற்றதும், நேரு அமைத்த அமைச்சரவையில் காங்கிரஸ்காரர்கள் மட்டுமே இடம் பெற வேண்டும் என்று கருதவில்லை. நீதிக்கட்சியில் இருந்து வெள்ளையர் அரசுக்கு வெண்சாமரம் வீசிய, ஆர்.கே.சண்முகத்தை அவர் முதல் நிதியமைச்சராக்கினார். கொச்சி திவானாக இருந்தவரின் நிதித்துறை நிபுணத்துவத்தை நாடு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நேரு நினைத்தார்.அரசியலமைப்பு சட்டத்தின் பிதாமகன் அம்பேத்கர், காலம் முழுவதும் காங்கிரசையும், காந்தியையும் கடுமையாக எதிர்த்தவர். ஆனாலும், அவரது எல்லையற்ற சட்ட
அறிவை நாட்டுக்கு அர்ப்பணிக்க அவரிடம் சட்டத் துறையை சமர்ப்பித்தார்.முதல் ரயில்வே அமைச்சர் ஜான் மத்தாய்; முதல் தொழில்துறை அமைச்சர் ஷியாம் பிரசாத் முகர்ஜி ஆகியோர் காங்கிரஸ்காரர்களாக இல்லை.

இந்த மனப்போக்கு, இன்றைய ஆட்சியாளர்களிடம் எள்ளளவும் இல்லை.மேலவை இருந்தால், அறிவார்ந்த பல்துறை வித்தகர்கள் அதில் இடம் பெற வாய்ப்புண்டு. ஆட்சியாளர்கள் அப்போதும் தங்கள் ஏவல் கூவலாக இருப்பவர்களே மேலவையில் உறுப்பினர்களாக உட்கார வேண்டும் என்று விரும்பினாலோ, வேண்டியவர்கள் என்ற ஒரே தகுதியின் அடிப்படை யில் கவர்னர் நியமனத்திற்கு பரிந்துரை செய்தாலோ மேலவை என்ற அமைப்பு இல்லாமல் இருப்பதே சிறப்பு.

ஆனால், என்றேனும் மாநிலத்தின் முன்னேற்றத்தில் முக்கியமான அறிவுஜீவிகளையும், உயர் ஒழுக்க நெறிகளை போற்றும் பெருமக்களையும் ஆட்சி நிர்வாகத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை எழும் போது, மேலவையின் முக்கியத்துவம் உணரப்படும்.
இ - மெயில்: tmanian1250yahoo.com
Advertisement
 

வாசகர் கருத்து (14)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement