Advertisement

வேர்களை மறக்கலாமா விழுதுகள்

மாதா, பிதா, குரு, தெய்வம்' என்ற வரிசையில் தெய்வத்தை நான்காம் நிலைக்கு கொண்டு சென்ற பெருமை மாதா, பிதாவையே சேரும். ஆனால் அப்பெற்றோரின் இன்றைய நிலை என்ன? தவம் கிடந்து நேர்த்திக்கடன் செலுத்தி மகனையோ, மகளையோ பெற்றெடுத்து பாராட்டி சீராட்டி வளர்த்துவிட்ட நிலையில் அப்பிள்ளைகள் தனக்கெரு துணை வந்தவுடன் பெற்றோரை புறக்கணிக்கும் நிலை தொடர்கிறது. பிள்ளைகளை ஆளாக்கி படிக்க வைத்து பெரிய பதவிகளில் அமர வைக்க அவர்கள் படாதபாடு படுகின்றனர். ஆனால் ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்கும் நிலையில் வயதான பெற்றோரை கவனிக்க மனமின்றி பாராமுகமாக இருக்கும் பிள்ளைகளை இந்த கலியுகத்தில் காணமுடிகிறது. 'பெருசு... காலங்காத்தாலே உன்னோட பெரிய தொல்லையா போச்சு...!' என பெற்றோரிடம் எரிந்துவிழும் நிலை பல வீடுகளில் நடக்கிறது.

வாழ்க்கையின் வழிகாட்டிகள்:வயதான காலத்தில் தாய், தந்தையர் சிறு பிள்ளைகளாகவே மாறிவிடுவர். பத்து பிள்ளைகளை வளர்த்த அவர்களை அந்த பத்து பிள்ளைகளும் பராமரிக்க முடியாமல் 'உன் வீட்டில் ஒரு மாதம்... என் வீட்டில் ஒருமாதம்' என பந்தாடும் சூழல் உள்ளது. கணவன், மனைவி, குழந்தைகள், கல்வி, வேலை, திருமணம், பேரன், பேத்தி என படிப்படியாய் அந்த வீட்டை வலம் வந்த பெற்றோரை திண்ணையிலும், கொல்லைப்புறத்திலும் குடியேற்றிவிட்டு எப்போது உணவு தருவார்கள் என பசியுடன் காத்திருக்க வைக்கும் அவல நிலை உள்ளது. சிமிட்டிய விழிகளை திறந்து பார்த்து சிந்திப்பதற்குள் புதிதாய் வந்த மருமகளும், வயதான மாமியாராய் மாறிவிடும் காலசூழலில் சிக்கிக் கொள்வார். இன்று வயதான பெற்றோரை நமக்கு கிடைத்த வரம் என நாம் கொண்டாடும் போது, நாளை நம்மை கொண்டாட நல்ல மருமகளை இறைவன் அனுப்பி வைப்பான். அவர்களை இடையூறு, இன்னல் என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் நம் வாழ்க்கையின் வழிகாட்டிகளாக பார்க்க வேண்டும். தாயின் கருவறையில் கருவாய் உருவாகி, கைகால் முளைத்த நிலையில் லேசாக எட்டி உதைத்து விட்டால், ஏழேழு பிறவிகளுக்கும் தாய்க்கு நன்றிக்கடன் செலுத்தினாலும் பாவம் தீராது என்பர். ஆனால், தெரிந்தே வயதான பெற்றோரை எட்டி உதைத்தால் எந்த ஜென்மத்தில் நாம் அந்தக்கடனை அடைக்க முடியும். அம்மை, அப்பன் தான் உலகம். உலகம் தான் அம்மை அப்பன் எனக்கூறுகிறது திருவிளையாடல். அனைத்து மதங்களும் மாதா, பிதாவை மதிக்கவே கற்றுக் கொடுத்துள்ளது. அன்னை, தந்தையை தெய்வநிலையில் வைத்துக் கூடப்பார்க்காமல், மனிதம் கொண்ட மனிதர்கள் எனப்பார்த்தால் போதும். வாழும் நாட்களில் அவர்கள் விரும்பிய பொருளை வாங்கித்தர மறுத்துவிட்டு, பின்னர் ஆயிரமாயிரம் அன்னதானம் செய்தும் பயனில்லை. சுட்டுவிரல்காட்டி அவர்களை பேசும்போதே கட்டைவிரல் உனக்கும் இதே கதிதான் என சுட்டிக்காட்டும்.

தாய், தந்தையரை வணங்குவோம்:பெற்றோரை கலங்கவிடாமல், மனம் நோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உறவுகள் என்னும் விழுதுகள் கொண்ட அந்த பெற்றோர் என்னும் ஆலமரத்தின் வேர்களுக்கு வெந்நீர் ஊற்றிவிட்டு, இலைகளுக்கு பட்டாபிஷேகங்கள் செய்து, பெற்றோரை மதிக்காமல் கோயிலுக்குச் சென்று தங்கத்தேர் இழுப்பதில் எந்தப்பயனும் இல்லை. வேலைமுடிந்து வந்தவுடன் அருகில் சென்று பெற்றோரை பார்த்து 'சாப்பிட்டு விட்டீர்களா'எனக் கேட்டுப்பாருங்கள். அவர்கள் மனதில் வானளாவிய மகிழ்வு ஜொலிக்கும். மாறாக பாராமுகமாய் சென்றால் அவர்களின் இதயங்களில் இனம் புரியாத வேதனை பரவி கிடக்கும். தொந்தரவு எனக்கூறி முதியோர் இல்லங்களில் சேர்க்காமல் அவர்கள் செய்த சிறுசிறு தவறுகளை மறந்திட கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் இந்த பூமிக்கு உங்களை கொண்டுவந்த தெய்வங்கள். அவர்களுக்கு நாம் நிச்சயமாக நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்க வேண்டும். தாய், தந்தையரை வணங்குவோம். வாழ்வில் மேன்மை அடைவோம். ஒவ்வொரு மனிதனும் 'முதுமை' என்னும் வீட்டில் கண்டிப்பாக தங்கியே ஆக வேண்டும். பணத்தேடலில் வாழ்க்கையை தொலைத்தவன், முடிவில் இளைப்பாறும் இடம் முதுமையே. அந்த வீடு சொர்க்கமாக அமைய வேண்டும். கிளைகள் பரப்பி விழுதுகள் விட்ட ஆலமரங்களின் வேர்கள், விழுதுகளின் அலட்சியத்தால் விரிசல் கண்டால் விழுதுகள் வாழ முடியாது. 'மனிதனே... நீ உன் வயதான பெற்றோருக்கு உணவிட்ட திருவோட்டினை உன் மகன் உனக்கு பத்திரமாய் வைத்திருப்பான். நாளை நீ அதில் உணவு கொள்ள தயாராக இரு' என்பது நியதி. வயதானவர்கள் வீட்டில் இருப்பது நல்லது. குழந்தைகள் பண்புடன் வளர அவர்கள் அவசியம். வாழும் தெய்வங்களாகிய பெற்றோரை வணங்குவோம். முதியோர் இல்லம் இல்லாத புது சொர்க்கமாய் உலகை மாற்றுவோம்.

- அ.ஸார்ஜான் பேகம், தாசில்தார், சாத்தூர். 99525 97937

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement