Advertisement

மன அழுத்தமும், ஆஸ்துமாவும் :இன்று உலக ஆஸ்துமா தினம்

உலக சுகாதார மைய அறிக்கை படி உலகில் 23.50 கோடிக்கும் அதிகமானோர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் 3 கோடி பேர் உள்ளனர். 2016ல் இது 50 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொழில் மயமாதல், தவறான உணவு பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக ஆஸ்துமா ஏற்படுகிறது. உலகளவில் பாதிக்கப்படுபவர்களில் 10 சதவீதம் பேர் இந்தியர்கள்.
விழிப்புணர்வு குறைவாக இருப்பதே ஆஸ்துமா அதிகரிப்பதற்கு காரணம். நுரையீரலில் ஏற்படும் அலர்ஜியால், சுவாசப்பாதை சுருங்கி மூச்சுவிட சிரமம் ஏற்படுகிறது. இது பொதுவான உடல்நலப் பிரச்னை. நாள்பட்ட சுவாச, நுரையீரல் கோளாறு பரம்பரையாலும் ஏற்படும். தூசி நிறைந்த சுற்றுப்புறத்தில் ஆஸ்துமா வரலாம். தூசி, சிகரெட் புகை, பூஞ்சை, பருவநிலை மாற்றம், செல்லப் பிராணிகளின் ரோமம், வாசனை திரவியம், கொசுவர்த்தி சுருள், பூக்களின் மகரந்தம், சாக்பீஸ் துகள்கள் ஆஸ்துமாவை தூண்டுகின்றன. முறையான மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.காலம் காலமாக இந்த காரணிகள் தான் ஆஸ்துமாவுக்கு காரணமாக இருந்தன. தற்போது பணிச்சுமை, குடும்பச்சூழ்நிலை, பொருளாதார பிரச்னை, குழந்தைகளின் படிப்பு சுமையால் ஏற்படும் மனஅழுத்தம் ஆகியவை முக்கிய காரணியாக உருவெடுத்துள்ளது. உலகமே தற்போது மனஅழுத்தத்தில் இயங்குகிறது. மன
அழுத்தத்தால் ஆஸ்துமாவின் தாக்கம் அதிகமாகிறது.மனஅழுத்தம் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது மன அழுத்தம். இது கண்ணுக்கு தெரியாமல் தொடங்கும். இதனால் ஒற்றைத் தலைவலி முதல் மாரடைப்பு வரையிலான நோய்கள் தாக்குகின்றன. காரணத்தை கண்டறிந்து ஆரம்பத்திலேயே தீர்க்க வேண்டும். தீர்வும் நம்மிடம் தான் உள்ளது. மனிதனுக்கு வரும் 75 முதல் 90 சதவீத நோய்கள், அழுத்தமான சூழல் காரணமாக வருபவை என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.
மனஅழுத்த ஆஸ்துமா ஆஸ்துமாவிற்கும் மனஅழுத்தத்திற்கும் தொடர்பு உள்ளதென ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். பள்ளிக்கூட பாடச்சுமை, மேடை பேச்சு, குடும்ப மோதல், பொது பேரழிவு, வன்முறை, பயந்தநிலை, தனிக்குடித்தனம், கணவன், மனைவி பகிர்வின்மை, கருத்து வேறுபாடு, வேலைக்கு செல்லும் மனைவி, அலுவலக, வணிக இலக்கு நெருக்கடி போன்றவை மனஅழுத்தத்திற்கு முக்கிய காரணம். மனஅழுத்தம் மூளையை பாதிக்கிறது. மனஅழுத்தத்திற்கு தொடர்புடைய ஹார்மோன்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது.
எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்
எதிர்பார்ப்புகள் அதிகமாகி நிறை
வேறாத போதும், எதிர்பாராத சூழலுக்கு தள்ளப்படும் போதும் அதிக மனஅழுத்தத்திற்கு ஆளாகிறோம். எதிர்பார்ப்புகளை குறைக்கும் போது மனஅழுத்தம் பெருமளவில் குறைகிறது. பணமானது மனஅழுத்தத்தை உருவாக்கும் முழுமுதற் காரணியாக உள்ளது. பணிச்சூழல் மற்றுமொரு முக்கிய காரணி. சிலநேரங்களில் உறவுகளும், வாழ்க்கைத் துணையும், குழந்தைகளும் மனஅழுத்தத்தை தோற்றுவிப்பவர்களாக உள்ளனர்.மது, போதை, புகை, சரியான உணவு பழக்கம் மற்றும் முறையான தூக்கம் இல்லாமை ஆகியவை, நாம் விலை கொடுத்து வாங்கும் மனஅழுத்தம்.நல்ல செயல்களில் கூட மனஅழுத்தம் வரும் என்கிறது ஒரு ஆய்வு. திருமணம், பதவி உயர்வு இவையெல்லாம் ஒருவகையில் மனஅழுத்தத்தை அதிகரிக்கும் என்றும், அதை சரியான விதத்தில் கையாள்வதில் நம் கவனத்தை செலுத்த வேண்டும் என்கிறது அந்த ஆய்வறிக்கை.
அறிகுறிகள் இரவு நேரங்களில் கடுமையான இருமல், மூச்சிரைப்பு, மூச்சு விடும் போது விசில் போன்ற சத்தம், நெஞ்சு இறுக்கம், மூச்சுவிடுவதில் சிரமம், அதிகப்படியான வியர்வை, பதற்றநிலை ஆகியவை மனஅழுத்தத்தால் ஏற்படும் ஆஸ்துமாவின் அறிகுறிகள். இதனால் வேலைத்திறன், வாழ்க்கைத்தரம், குழந்தைகளின் கற்கும் திறன் குறைகிறது.
கண்டறியும் முறை 'ஸ்பைரோமெட்ரி, பிக் ப்ளோமீட்டர், எக்ஸ்ரே', ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு ஆகியவற்றை வைத்து ஆஸ்துமாவை கண்டறியலாம். நீங்கள் எவ்வளவு சீராக நுரையீரலில் இருந்து காற்றை வெளியே விடுகிறீர்கள் என்பதை 'பிக் ப்ளோமீட்டர்' அளவெடுக்கும். மனஅழுத்தத்தின் போதும், சுவாசப்பிரச்னை ஏற்படும் போதும் இந்த கருவியை வீட்டிலேயே வைத்து, நுரையீரல் செயல்திறன் அளவை அளவிடலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு அளவு உண்டு. அதிலிருந்து குறையும் போது டாக்டரை அணுகவேண்டும்.
மனசே ரிலாக்ஸ்
மனஅழுத்தத்தை போக்கும் முக்கிய வழிமுறை உடற்பயிற்சி. தினமும் அரைமணிநேரம் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் சுரப்பது குறைகிறது. உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி அடைகிறது. 'என்டார்பின்ஸ்' உட்பட நல்ல ரசாயனங்கள் உடலில் சுரக்கின்றன. தினமும் ரிலாக்ஸ் செய்ய சில மணி நேரம் ஒதுக்க வேண்டும்.
ஆவேசமும், கோபமும் மனஅழுத்தத்தின் வெளிப்பாடுகள். தெளிவான அமைதியான மனம், ஞானம் இவற்றைக் கொண்டு கோபத்தை அடக்க வேண்டும். தியானம், யோகாவில் மனதை செலுத்த வேண்டும். ஆழமாக மூச்சை இழுத்துவிடும் மூச்சுப்பயிற்சியை செய்வதும்
மனஅழுத்தத்தை குறைக்கும் என்கின்றனர் பயிற்சியாளர்கள்.பழங்கள், காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மனஅழுத்தத்திற்கு எதிரான சூழலை மாற்றி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிகோலுகிறது. ஆழ்ந்த உறக்கமும் அவசியம்.-டாக்டர்.எம்.பழனியப்பன்,ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய் நிபுணர், மதுரை
94425 24147.
வாசகர்கள் பார்வைமருந்து தயாரிப்பு
என் பார்வையில் வெளியான 'மறந்து போன மருந்து பெட்டி' கட்டுரை அருமை. நம் வீட்டில் இருக்க வேண்டிய மருந்துப் பொருட்கள் குறித்து தெளிவாக எடுத்துரைத்திருந்தார் கட்டுரையாளர். இத்துடன் ஒவ்வொரு நோய்க்கும் ஏற்ப அவசர கால சிகிச்சைக்கு தேவையான மருந்து
தயாரிப்பு முறை குறித்து கூறியிருந்தீர்கள் நன்றி.- எஸ். கீதா செல்வி, திண்டுக்கல்.

வார்த்தைகள் இல்லை

என் பார்வையில் வராத கட்டுரைகளே இல்லை என்று சொல்லலாம். ஆனால், வாசகர்கள் எதிர்பார்க்காத இன்னும் பல விஷயங்களை கட்டுரைகளாக்கி தர வேண்டும் என்று நினைக்கும் தினமலர் நாளிதழின் சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை.- கோதைநாயகி, தேனி.அறுசுவை விருந்துஎன் பார்வையில் 'உணவு பரிமாற்றத்தின் பரிணாம வளர்ச்சி' என்று நாம் அந்தக் காலத்தில் எப்படி சாப்பிட்டோம். இக்காலத்தில் உணவு சமைக்க சோம்பல்பட்டு ஓட்டல் போவதை சுட்டிக்காட்டியதும், அக்காலங்களில் ஓட்டல் சுவை வீட்டுச் சுவையில் இருந்து மாறுபட்டு இருந்ததால் என்றோ ஓட்டல் சென்று சாப்பிட்டதையும், உடுப்பி என்பது 'கபே' என்றும் பிறகு 'பவன்' என்று மாறியது என்றும் விளக்கி ஒரு அறுசுவை விருந்து உண்ட மனத் திருப்தியை ஏற்படுத்திவிட்டீர்கள்.- மு. உஷா, திருநகர்

கோடை கால அறிவுரை

என் பார்வையில் வெளியான 'வெற்றியை அறுவடை செய்வது எப்படி' கட்டுரை படித்தேன். மாணவர்களின் எதிர்காலம் இனிமையாக அமைய அருமையான அறிவுரைகளை சொல்லியிருந்தார் கட்டுரையாளர். கோடை காலத்தில் இது போன்ற கட்டுரைகள் வெளியாவது பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது.- அ. ராஜா ரஹ்மான், கம்பம்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement