Advertisement

இணையம் யார் வீட்டு சொத்து?

'நெட் நியூட்ராலிட்டி''- இன்று இந்தியாவில், ஏன் உலக மக்களின் வாழ்வின் தன்மையையே பாதுகாக்கும் சக்தியாக உள்ளது. இதனை “வரையறையற்ற நடுநிலையான இணைய சேவை” என அழைக்கலாம். இதற்கு இப்போது சோதனை ஏன் ஏற்பட்டது?

இணையம் நம் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கம். ஏதேனும் ஒரு வகையில் அதனைச் சார்ந்தே நம் வாழ்க்கை இயங்கிக் கொண்டிருக்கிறது. ரயில், பஸ் டிக்ெகட், தேர்வு முடிவு, கல்லுாரி அட்மிஷன், கடிதங்கள் அனுப்ப, போட்டோக்கள் பரிமாற்றம், திரைப்படம், 'டிவி' காட்சிகளைப் பார்த்தல், பாட்டு கேட்டல், இணைய தொலைபேசி, வங்கி பணப் பரிமாற்றம், அரசு வழங்கும் சேவைகள், சான்றிதழ்கள் பெறல் என எத்தனையோ செயல்பாடுகளை எடுத்துக் காட்டலாம். கடந்த 1991 ஆகஸ்டில் முதல் இணைய தளம் தொடங்கப்பட்டது. இன்று இணைய தளங்களின் எண்ணிக்கை 93 கோடி 5 லட்சத்து 10 ஆயிரம்.

எந்தப் பொருள் குறித்து தேடினாலும், அது குறித்த தகவல் பல இணைய தளங்களில் இருக்கும். பெரும்பாலானவற்றிலிருந்து தகவல்களை இலவசமாகவே பெறலாம். இணையத்தைப் பயன்படுத்தும் 292 கோடி பேர் தொடர்ந்து பயன்படுத்த காரணம் இவை இலவசமாகத் தங்களிடம் இருப்பவற்றைத் தருவதுதான்.

இந்த வகையில் அதிகம் பயன்படுத்தப்படும் தளங்கள் கூகுள், பேஸ்புக், யாஹூ, வாட்ஸ் அப், அமேஸான், பிளிப் கார்ட் போன்றவை. இந்தத் தளங்களை இணையத்தில் இயக்க நிலையில் வைத்திருக்க, பயன்பாட்டிற்குத் தர இந்த தளங்களை அமைத்து நிறுவியவர்கள் அதற்கான செலவினை மேற்கொள்கிறார்கள் அல்லது விளம்பரம் போன்ற வழிகளில் அச்செலவினை ஈடுகட்டிக் கொள்கின்றனர்.

இன்றைய பிரச்னை :இப்போது இங்குதான் பிரச்னை. இணைய இணைப்பைத் தரும் நிறுவனங்கள் இந்த தளங்களை அணுகி, 'உன்னுடைய தளத்தை உன் வாடிக்கையாளர்கள் அணுகுகையில், உனக்குப் போட்டியாக இருக்கும் மற்ற தளத்திடம் இருந்து தகவல்களைத் தாமதமாகத் தந்துவிட்டு, உன் தளத் தகவல்களை அவர்கள் கம்ப்யூட்டரில் வேகமாக இறக்குகிறேன். என்னைக் கொஞ்சம் தனியே கவனி' என பணம் கறக்கத் தொடங்கிவிட்டனர். பணியாதவர் தளங்களை தாமதமாகக் காட்டுவது, இடையூறு ஏற்படுத்துவது என ஈடுபட்டுள்ளனர்.சில நிறுவனங்களோ இணைய தள உரிமையாளர்களிடம், 'உங்களிடம் உள்ள தகவல்கள் எங்கள் இணைப்பின் மூலம் தானே செல்கின்றன; உன்னிடம் உள்ள பொருட்கள், நாங்கள் இணைப்பு கொடுத்தால் தானே விற்பனையாகின்றன. எனவே எங்களிடமும் கட்டணம் செலுத்து' என்று கூவத் தொடங்கிவிட்டனர்.

காரணம் கேட்டால், 'அதிகச் செலவில் அரசிடம் உரிமம் பெற்ற மிகப் பெரிய அளவில் சர்வர்களின் கட்டமைப்பை ஏற்படுத்தி இணைய இணைப்பு தரப்படுகிறது. இந்த செலவை ஈடு கட்ட எங்களுக்குக் கட்டணம் செலுத்தித்தான் ஆக வேண்டும்' என்பது இவர்களின் வாதம்.பயனாளர்களிடமும், 'இணைய இணைப்பிற்காக நீங்கள் செலுத்தும் கட்டணம் சில இலவச தளங்களைப் பார்வையிடத்தான். முக்கிய இணைய தளங்கள் வேண்டும் எனில் கூடுதலாக கட்டணம் செலுத்துங்கள்' என அறிவிக்கத் தயாராகி விட்டனர்.

இதை அமல்படுத்தினால் நாம் இணைய இணைப்பிற்கென அதன் வேகம், டேட்டா பரிமாற்ற அளவு மற்றும் கால அளவின் அடிப்படையில் மாதந்தோறும் தொகை செலுத்திவிட்டு, பின் 'கூகுள் குரோம்' பயன்படுத்த ரூ.150, 'யூ டியூப்' பார்க்க ரூ.250, 'பேஸ்புக்' பதியவும் பார்க்கவும் ரூ.90, பிளஸ் 2 ரிசல்ட் பார்க்க ரூ.30 என ஒவ்வொன்றுக்கும் தனித் தனியே கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். இது சரியா... இணையம் யார் வீட்டு சொத்து?

அனைத்தும் சமம்:'இணையத்தில் உள்ள அனைத்தும் சமமாகக் கருதப்பட வேண்டும். இணைப்பு தருபவர்கள் இவற்றைப் பிரித்து வகைப்படுத்தி, இடையே கொள்ளை அடிக்கவிடக் கூடாது' என்ற போர்க்குரல் இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் எழுந்துள்ளது. இதைத்தான் 'நடுநிலையான இணைய சேவை' (நெட் நியூட்ராலிட்டி) என அறிவித்து, 'உலகெங்கும் இந்த சேவை வழங்கப்பட வேண்டும்' என கேட்டுப் போராடி வருகின்றனர்.

இந்த சிக்கலை எளிய வழியில் விளக்குகிறேன். கல்யாண மண்டபத்தில் வாட்ச்மேன் ஒருவர் இருப்பார். நாம் செல்லும்போது காம்பவுண்ட் கதவைத் திறந்து வைத்து வழி அனுப்புவார். அவர், 'நீ உள்ளே போய் நான் வெஜ் சாப்பிட்டால் எனக்கு ரூ. 100 கொடு. வெஜ் சாப்பிட்டால் ரூ. 75 கொடு' என கல்யாணத்திற்கு செல்வோரிடம் கேட்க முடியுமா?

இந்த வாட்ச்மேன் கேட்பதைத்தான், இணைய இணைப்பு நிறுவனங்களும் கேட்கின்றன. இதை அனுமதித்து விட்டால், 'நெட் நியூட்ராலிட்டியை' நாம் இழந்துவிட்டால், இணைப்பு தரும் நிறுவனங்கள் வெற்றி பெற்றுவிட்டால், நாளைக்கு மின்சாரப் பயன்பாட்டிலும் இதே கட்டண முறையைக் கொண்டு வருவர். யூனிட்டுக்கு இவ்வளவு என்று முதலில் செலுத்தச் சொல்லிவிட்டு, கூடுதலாக பிலிப்ஸ் லைட் எரிந்தால் ரூ.35, வேறு நிறுவன விளக்கு என்றால் ரூ. 25, சோனி 'டிவி'க்கு ஒரு கட்டணம், பானாசோனிக் என்றால் தனிக் கட்டணம், வேர்ல்பூல் பிரிட்ஜுக்கு ஒரு கட்டணம், சாம்சங் பிரிட்ஜுக்கு ஒரு கட்டணம் எனக் கேட்பார்கள். இதை அனுமதிக்கலாமா?

உலக நாடுகளில்... அமெரிக்காவில் ஆறு மாதங்களில் 40 லட்சம் மக்கள் இதுகுறித்து தங்கள் கருத்துகளை அமெரிக்க அரசிடம் தெரிவித்தனர்.'இணைய சேவை நிறுவனங்களை' பொது சேவை நிறுவனங்கள் என அரசு அறிவித்தது. 'இணையப் பயன்பாடு என்பது தொலைபேசிக்கு இணையானது. எனவே அது ஒவ்வொருவருக்கும் தடையின்றி, பாகுபாடின்றி கிடைக்க வேண்டும்' என அதற்கான அமைப்பு தீர்ப்பு வழங்கியது.

அதிபர் ஒபாமா, ''அமெரிக்காவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மின்சாரமும் தொலைபேசியும் எவ்வளவு முக்கியமோ, அதே போல சுதந்திரமான இணையமும் தேவை. நுகர்வோர் இந்த வசதிகளைப் பெறும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்” என்றார். 'இணைய சேவையில் பாகுபாடும் இருக்கக் கூடாது' என முதன்முதலாக 2010ல் 'நெட் நியூட்ராலிட்டியை' சட்டமாக்கிய நாடு சிலி. அங்கு விக்கிபீடியா, பேஸ்புக் போன்றவற்றை இணைப்புக் கட்டணம் கூட இல்லாமல் பயன்படுத்தலாம்.

மக்களே உஷார் : இப்போது இணையத்தை பயன்படுத்துவதில் உள்ள தடங்கல்களை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை என்றால் அது இணையம் பயன்படுத்தும் பாங்கினையே மாற்றி, நம்மை பின் நோக்கி தள்ளிவிடும். மக்களே உஷார்! இந்தியாவில் 'நெட் நியூட்ராலிட்டி' இல்லை என்றால் இணைய இணைப்பு தரும் நிறுவனங்கள், இணையப் பயன்பாட்டின் தன்மையையே மாற்றிவிடுவார்கள்.யூ டியூப், வாட்ஸ் அப், ஜிமெயில், ஜி டிரைவ், யாஹூ, அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்கள் ஈட்டும் வருமானத்தில் பங்கு கேட்பார்கள். கிடைக்கவில்லை என்றால், அவற்றையும் பொதுமக்களிடம் கறக்க முற்படுவார்கள். கூடுதல் கட்டணம் செலுத்தவில்லை என்றால் ரூ.600 செலுத்தி, 'இந்தியாவில் உள்ள இணைய தளம் மட்டும் பார்' என்று அனுமதி கொடுப்பார்கள்.
மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ''இணையத்தினை முடக்க நினைக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அறிவித்துள்ளது ஆறுதலான தகவல். ''இதுகுறித்து ஆய்வு செய்யும் குழு மே 9க்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்'' எனவும் கூறியுள்ளார்.

--டாக்டர் பெ.சந்திரபோஸ்
கல்லுாரி முதல்வர் (ஓய்வு),
தகவல் தொழில்நுட்ப இதழியலாளர்
(அமெரிக்காவில் வசிப்பவர்)
drchandrabosegmail.com
Advertisement
 

வாசகர் கருத்து (10)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement