Advertisement

என் பார்வை : உடல் நலம் உங்கள் கையில்!

''நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்வாய்நாடி வாய்ப்பச் செயல்''
என்ற திருக்குறளுக்கேற்ப நம் உடலில் நோய்களைத் தடுக்கவும் ஆரோக்கியமான வாழ்வைப் பெறவும் சில எளிய வழிமுறைகள் இருக்கின்றன. ஆரோக்கியத்தின் அடிப்படையான முக்கிய காரணங்களில் முதலில் நிற்பது நமது பழக்கவழக்கங்களே. எளிமையான சில பழக்கவழக்கங்களின் மூலம் வலிய நோய்கள் பலவற்றைத் தடுக்க முடியும். நம்மையும், நம்மைச் சுற்றியுள்ள பொருட்களையும் தூய்மையாக வைத்துக் கொள்வதே முதல்படி. தலை முதல் பாதம் வரை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இன்றைய அவசர உலகத்தில் நமக்கு சில அடிப்படையான பழக்கங்களுக்கு நேரமில்லாமல் போய்விடுகிறது. தலைமுடி, உடல், நகம், பல், பாதம் மற்றும் பிறப்பு உறுப்புக்கள் இவற்றை நன்றாகப் பராமரித்து சுத்தப்படுத்த வேண்டும். இன்று நாம் கடைபிடிக்கும் சின்னச்சின்ன எளிய பழக்கங்கள், நமக்கு தெரியாமல் நம்மை தாக்கும் பல லட்ச நோய்க் கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாக்கின்றன.
என்ன வேலை செய்தாலும் அடிக்கடி கை கழுவுதல் மூலம் நிறைய தொற்று நோய்களைத் தடுக்கலாம். இப்பொழுது அதிகமாக பரவிக்கிடக்கும் வைரஸ் காய்ச்சல், வாந்தி, வயிற்றுப் போக்கு, எபோலா, இன்புளுயன்ஸா மற்றும் பல வியாதிகளை கை கழுவுவதின் மூலம் தடுக்கலாம். இந்த எளிய சுகாதார முறையைப் பின்பற்றினால் பல கிருமிகள் மற்றும் வைரஸ் தாக்குதல்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.உணவு முறை மாறிவரும் உலகிலே நம் உணவு முறையும் மாறி வருகிறது. நாம் உண்ணும் உணவு முறையும் மாறி வருகிறது. உணவு எவ்வளவு ருசியாக இருக்க வேண்டும் என்று எவ்வளவு ஆசைப்படுகிறோமோ, அதே அளவு எண்ணம் அந்த உணவு ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்ற ஆர்வமும் இருக்க வேண்டும்.
சமச்சீர் உணவு உட்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு உணவுகளில் குறுந்தானியங்கள், பயறு வகைகளில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் நிறைந்திருக்கின்றது. இன்று உலகமெங்கும் செய்யப்படும் பிரோபையடிக் என்ற நல்ல பாக்டீரியா நாம் மறந்து விட்ட நீராகாரத்தில் அதிகமாக உள்ளது. கொய்யா, வாழைப்பழம், தர்பூசணியை அடிக்கடி சாப்பிடலாம். பப்பாளி போன்ற மஞ்சள் நிறமுடைய பழங்கள், அந்தந்த பருவகாலங்களில் வரும் மாம்பழம், நுங்கு முதலியவற்றை சாப்பிடலாம்.
நிலக்கடலை, இயற்கை மக்களுக்கு அளித்துள்ள ஓர் மகத்தான உணவு. வளரும் குழந்தைகளுக்கு வேண்டிய புரதச்சத்து நிலக்கடலையில் அதிகமாக உள்ளது. தூய்மையான எண்ணெயையும், நெய்யையும் நாம் உணவில் சேர்க்கலாம். ஒமேகா 3 பேட்டி ஆசிட் என்ற கொழுப்பு சத்து நம் உடலிற்கு பல வகையான நன்மைகளைச் செய்கிறது. உணவின் தன்மை அறிந்து அவற்றை சரியான விகிதத்தில் சேர்த்து உண்ணுவதே ஆரோக்கிய வாழ்விற்கு வழி வகுக்கும்.
உடற்பயிற்சி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் வளைத்து செய்யும் வேலைகள் மிகக்குறைவு. விஞ்ஞான உதவியால் நமக்கு கிடைத்த சுகமான வாழ்க்கை முறையினால், அதிக உடல் உழைப்பு இல்லாமல் எல்லா வேலைகளையும் இயந்திரங்களின் மூலம் ஒரு விரல் அசைவில் சுவிட்ச் ஐ போட்டு முடித்து விடுகிறோம். இதனால் நாளடைவில் உடல் அதன் வலிமையை இழக்கக்கூடும். இதனைத் தடுக்கவும் ஒவ்வொரு நாளையும் புத்துணர்ச்சியுடன் மேற்கொள்ள இன்றியமையாத ஒன்று உடற்பயிற்சி.உடற்பயிற்சி என்றதும் எடை தூக்குவதோ, கடினமான உடலை வளைத்து செய்யும் பயிற்சியோ என்று பயப்பட வேண்டாம். அனைவரும் எளிதாக செய்யக்கூடிய நடைபயிற்சியே நம்மில் பலருக்கும் உகந்த உடற்பயிற்சி. ஒரு நாளைக்கு சராசரியாக 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஒரு வாரத்திற்கு ஐந்து நாட்கள் நடந்தாலே போதும். இதுவே நம் உடலில் ரத்த ஓட்டம் சீராகவும், நீரிழிவு நோய் மற்றும் ரத்த கொதிப்பு வராமல் தடுக்கவும் உதவும். தசைகளும், நரம்புகளும் வலுப்பெறவும் நடைபயிற்சி உதவுகிறது. இந்தப் பழக்கத்தை சிறுவயதிலேயே பழகிவிட்டால் அது வாழ்க்கை முறையோடு கலந்த ஒன்றாகிவிடும்.உடலுழைப்பு வேண்டும் உடற்பயிற்சியின் மூலம் வியர்வை முதலிய கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. இதனால் உள் உறுப்புகளும் தூய்மை அடைகின்றன. முன்பு நகர்புற மக்களிடம் பரவலாக காணப்பட்ட நீரிழிவு, ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவை இப்பொழுது கிராம மக்களிடம் அதிகமாக காணப்படுகிறது. உடல் உழைப்பு இல்லாமல் போனது தான் இதற்கு காரணம். நமது உணவுப் பழக்கங்களில் தற்சமயம் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றம் குறந்தானியங்கள் பற்றிய விழிப்புணர்வே. நம் முன்னோர்கள் உண்ட கம்பு, சோளம், கேப்பை, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, வெல்லம், கருப்பட்டி போன்றவை நம் அடுத்த தலைமுறையினருக்கும் சொல்லப்படுகிறது. இவற்றை எல்லாம் நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் என்பதற்கு நம் உடம்பில் இடமில்லை என்பது உண்மை. நாம் வாழ்வதற்காக உண்ண வேண்டுமே தவிர உண்பதற்காக வாழக்கூடாது.
'தட்டில் மிச்சம் வைக்காதே; வயிற்றில் மிச்சம் வை' என்ற ஒரு கூற்றும் உள்ளது. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. உங்கள் இளைமையும், முதுமையும் உங்கள் கையிலே தான் இருக்கிறது. நீரும், காற்றும், ஒளியும் மனிதனை வளர்க்கும் அற்புத சக்திகளாகும். தினமும் 10 நிமிடங்களாவது சூரிய ஒளி நம்மேல் பட வேண்டும். விட்டமின் டி நமக்கு சூரிய ஒளி மூலமாகவே கிடைத்து நம் எலும்புகளை வலுப்படுத்துகிறது.எளிய பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சிகள், உணவுப் பழக்கங்கள் இம்மூன்றும் உடல் நலத்திற்கு வலிமையையும், வாழ்விற்கு வளமும் தரும்.
-டாக்டர்.ஏ.நடராஜரத்தினம்,அறுவை சிகிச்சை மருத்துவர்,திருமங்கலம்,04549- 280 503


வாசகர்கள் பார்வை


தகவல்கள் பலவிதம்

என் பார்வையில் வெளியாகும் அறிவு சார்ந்த கட்டுரைகள் அனைத்தும் பலவித தகவல்களை தருகின்றன. தலைவர்கள், அறிஞர்கள், தத்துவ மேதைகளின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள உதவுகிறது என் பார்வை பகுதி.- என். நந்திதா, திண்டுக்கல்.

கவிநய கட்டுரை

என் பார்வையில் வெளியான 'இக்கால உணர்வு இலக்கியம் ஹைக்கூ' இந்த ஹைக்கூ கவிதையை அறிமுகப்படுத்தியது பாரதியார் என்பதை விளக்கிய கட்டுரையாளர் இரா.மோகனுக்கு பாராட்டுக்கள். கவிதை நயமிக்க அழகான கட்டுரையை வழங்கிய தினமலர் நாளிதழுக்குநன்றி.
-ரா.ரங்கசாமி, வடுகப்பட்டி.குழந்தைகளின் பண்புஎன் பார்வையில் வெளியான 'கை கால் முளைத்த கவிதைகள்' கட்டுரை படித்தேன். பிஞ்சு குழந்தைகள் குறித்து கொஞ்சு தமிழில் எழுதி அசத்திவிட்டீர்கள். குழந்தைகளின் பண்புகளை அறிய தந்த அற்புதமான என் பார்வை பகுதிக்கு நன்றி.- வி.எஸ்.மோகன், மதுரை.

ஆரோக்கிய பார்வை

என் பார்வையில் வந்த 'சுத்தம் நூறு போடும்' கட்டுரை சுகாதார விழிப்புணர்வை தந்தது. உடலுக்கு ஆரோக்கியமான உணவுகள், உணவுகளால் ஏற்படும் நோய்கள் குறித்த தெளிவான பார்வையாக கட்டுரையை எழுதியிருந்தார் கட்டுரையாளர் டாக்டர் ஜெயவெங்கடேஷ்.
- ஆர். கீதாபிரியா, தேனி.அறிவு சேவைஎன் பார்வை பகுதியில் வரும் கட்டுரைகள் படிக்கும் போது வாசகர்களாகிய நாங்கள் சிந்திக்கும் கருத்துக்களை தாங்கி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. திரும்ப திரும்ப படித்து அறிவை வளர்க்கும் சேவையை செய்து வருகிறது என் பார்வை.- என். காசிவிஸ்வநாதன், திண்டுக்கல்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement