Advertisement

நம்மைச் சுற்றி நான்காயிரம் சொர்க்கபுரிகள்!

"பயணிகளின் கனிவான கவனத்திற்கு” என்ற இனிமையான குரல் நம்மைப் பயண நினைவுகளுக்குள் அழைத்துச் செல்கிறதே! கடந்து செல் கிறோம் பலஊர்களின் பழைய நினைவுகளோடு. ஒவ்வொரு பயணமும் தியானத்தைப் போல் மனநிறைவினைத் தருகிறதே. ஊரோடு கலந்து, ஊனோடு கலந்து, நம்மோடு கலந்துபோன பயணங்களுக்கு முடிவேது? ரயில், பஸ் பயணங்கள், படகுப் பயணங்கள், விமானப் பயணங்கள், இருசக்கர வாகனப் பயணங்கள், சைக்கிள் பயணங்கள், மாட்டுவண்டி, குதிரை வண்டிப் பயணங்கள், நடைபயணங்கள் என எத்த னையோ பயணங்கள் தினமும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. உயிரில் கலந்து உணர்வில் கரையும் பயணங்கள் இனிமையானவை.
திண்ணைகள் தின்ற தெருக்கள், அளிக்கம்பிகள் இல்லாக் கதவுகள், தன்னைத்தானே பூட்டிக்கொண்டு சொந்தச் சிறையில்இருக்கும் விந்தைமனிதர்கள், நீர்மோர்தராத சாவடிகள், சிமென்ட் கடைகளாகிவிட்ட சத்திரங்கள், இவற்றுக்கு மத்தியில் கொப்புளங்களோடு பயணப்படுகின்றன நம் பாதங்கள். தேசாந்திரியாக அலையத்தொடங்கிவிட்டவனுக்கு எல்லைகள்கூடத் தொல்லைகள்தான். பயணப்படும்போது நாம் பக்குவமடைகிறோம். வரலாறு படிக்கிறோம், பண்பாடுஅறிகிறோம், மக்கள் மனதை வாசிக்கிறோம். கம்புபற்றி மேல் எழும் வெற்றிலைக்கொடியாய் பயணப்பொழுதுகளில்அன்பு பற்றி வளர்கிறது மனிதமும் புனிதமாய்.

ஆன்மாவின் சயனங்கள்:



ஒரு சுவாரசியமான முடிவை நோக்கி நகர்த்திச் செல்லும் இனிய பயணமே வாழ்க்கை. ரணப்படும் இதயமும் குணப்படும், பயணப்படும் அழகான கணங்களில். கக்கத்தில் துக்கத்தை வைத்துக்கொண்டு துயரத்தின் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கும் நமக்குப் பயணங்கள் ஆறுதலையும் தேறுதலையும் தருகின்றன. பயணங்கள் ஆன்மாவின்ஆனந்தசயனங்கள். இடம் மாறும்போது தடுமாறும் மனமும் தடம் மாறும். பயண நேரங்களில் பலப்படுகிறது நம் இதயமும் இதமாக. கொடைக்கானல் மலையின் மூலிகை சுவாசம், மூணாறு மலையின் தேயிலை வாசம், குற்றாலச்சாரல், தேடிவரும் தேனித் தென்றல், கடலலை கால்வருடும் திருச்செந்தூர் கடற்பரப்பு, மணப்பாடு மணல்குன்று, வான் முட்டும்தூண் தட்டும் திருமலை நாயக்கர் மகால்,கடல் அலைகள் நடுவே தவமிருக்கும் விவேகானந்தர் பாறை, ஓங்கி உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் உயிர்ச்சிற்பம், இயற்கையை ஊட்டி வளர்க்கும் ஊட்டி குளிர்மலை, கடல் மீது பாலத்தில் பயணிக்கும் ராமேஸ்வரத்தீவு, பொதிகைமலையிலிருந்து பொங்கிப் பாயும் பாணதீர்த்தப் பேரருவி என்று நம்மைச் சுற்றிநாலாயிரம் சொர்க்கபுரிகள்..ரசிக்க மனமின்றி இயற்கையைப் புசிக்க தினமின்றி கட்டடச்சிறைகளுக்குள் நாம் கைதியாய் கழிக்கிறோம். சுடப்பட்ட ரொட்டியாய் நாம் தனிமைத்தீயில் தகிக்கிறோம். யார்தவறு?

விந்தை விநாடிகள் வீண்:



அழுகியபூக்களின் அழகியலை அர்த்தமில்லாமல் எழுதிக் கொண்டிருக்கும் கவிஞன் போல் பலநேரங்களில்நாம் வீணடிக்கிறோம் நம் விந்தைவிநாடிகளை. நதி பார்க்கா நாள் வீண், ஆறு பார்க்கா ஆயுள் வீண், மலை பார்க்கா மானுடம் வீண். வனம் பார்க்கா தினம் வீண். இப்படி நமக்கருகேஇருந்தும் நம்மால் கண்டுகொள்ளப்படாத இடங்கள் ஒன்றா இரண்டா! நினைத்துப் பார்க்கிறயாவுமே உயிரின் வேரை நனைத்துப் பார்க்கும். செலவு என்ற தமிழ்ச்சொல் செல்லுதலைக்குறித்தது. தமிழில் ஆற்றுப்படை இலக்கிய வகைமை, பயணப்படுதலை முன்நிறுத்தியே அமைந்தது. சீனப்பயணி யுவான் சுவாங் இந்திய மண்ணில் கால்பதித்து ஒவ்வொரு இடமாகத் தரிசித்து எழுதிய குறிப்புகள் சாதாரணமானவையா? காஷ்மீரத்திலும்,நாளந்தாவிலும், காஞ்சியிலும் அவர் காலாற நடந்து எழுதிய குறிப்புக்களைவாசிக்கும்போது நம் மனம் மகிழ்வலைகளில் தவழ்கிறதே! ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குக்கடல்வழிப் பாதையைக் கண்டறிந்த வாஸ்கோடகாமாவின் பயணம் உலகின் பார்வையைத் திரும்பவைத்த பயணமாயிற்றே! தூங்கிக்கொண்டிருக்கிற இரவு நேரப்பயணப் பொழுதிலும் சாலையில் நின்று கண்ணாடிக்கு வெளியே நின்று தட்டிஎழுப்பி கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்கும் அந்த மனிதரை, ஓடுகிற பஸ்சில் சாத்தூர் வெள்ளரிப் பிஞ்சு விற்கும் அந்த மனிதரை வீட்டிற்குள்ளிருந்தால் எப்படிச்சந்திப்பது? கொடைரோட்டில் குவிந்து கிடக்கிற கனிகளின் இன்சுவையை எப்படிப் பெறுவது? நாம் நாடுகடந்தும் கண்டம் கடந்தும் பயணப்பட வேண்டியதில்லை, நம்மைச்சுற்றி இருக்கும் சொர்க்கபுரிகளை நோக்கி நாம் என்றாவது ஆர்வத்தோடு பயணித்திருக்கிறோமா! சமணப் படுகைகள் நிறைந்த சமணமலை மதுரைக்கு அருகில் இருப்பதை நாம் அறிந்துள்ளோமா! சன்னலோர இருக்கைக்குச் சண்டையிடுகிற பள்ளிப்பிள்ளைகள் மாதிரிஇன்னலோர இருக்கையில் இடம்போடப் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறோம். சிட்டுக்குருவிகள் விடுதலையாகிப் பறக்கின்றனவே; அந்தச் செப்படி வித்தையை அவை எப்படிக் கற்றன? சிந்திக்கத் தெரியா சிட்டுக் குருவிகள்? அலைவதில் அவைகளுக்கு அலாதிப் பிரியம்.

வெற்றுலா அல்ல:



சுற்றுலா வெற்றுலா அல்ல. அது செலவின் பக்கங்களில் வரவு வைக்கப்பட வேண்டிய நெருக்கடியான நிகழ்வுமன்று. அருவி பார்க்கும்போது நிறையவே நிரம்பி வழியுங்கள். கடல் மணலில் கவலைகளைக் கொட்டிவிட்டு உற்சாகமாய் நடைபயிலுங்கள். வனம் பார்க்கும்போது செடியாகுங்கள். பயணப்படுங்கள் பலப்படும் வாழ்வு. பயணப்படுங்கள் பக்குவமடைவீர்கள், பயணப்படுங்கள் விசாலப்படும் மனது. புதிது புதிதாய் நண்பர்களைப் பெறுவீர்கள்; அப்போது ரயில் நெரிசலும் பஸ் கூட்டமும் மகிழ்ச்சியே. பின்னால் ஓடுகிற மின்கம்பங்கள்,அவ்வப்போது இடைப்படும் பழவியாபாரிகள், யாவற்றையும் உன்னிப்பாய்கவனியுங்கள்..பயணத்தின் சூட்சுமம் புரியும். அந்தந்த வினாடிகளில் வசிக்கப் பழகுங்கள்,எதற்கெடுத்தாலும் எரிச்சலடைய நாமொன்றும் எரிமலைமேல் வசிக்கவில்லை. சீவச்சீவக் கூர்மையாகிற பென்சில்மாதிரி பயணம் போகப்போகக் கூர்மையாகிறோம். ஆகவே கனிவான மனிதர்களாக, இனிப் பயணப்படுவோம் பக்கத்து ஊர்களுக்காவது!

- முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி. 9952140275

Advertisement
 

வாசகர் கருத்து (6)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement