Advertisement

வைகையில் கை வைக்காதீர்

நதிக்கரை நாகரிகங்கள் உலக புகழ் பெற்றது. நாகரிங்கள் தோன்றியதே நதிக்கரையில் தான்,'ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்” என்கிறது பழமொழி. நீரின்றி அமையாது உலகு என்கிறார் வள்ளுவர். அதனால் தான் திருக்குறளில் கடவுள் வாழ்த்துக்கு அடுத்த படியாக 'வான் சிறப்பை' வள்ளுவர் வைத்திருக்கிறார்.
அத்தனை சிறப்பு வாய்ந்த நீரை பல இடங்களுக்கு எடுத்து செல்வது ஆறு. அந்த ஆறுகள் உலகில் எண்ணற்ற இருந்தாலும், அவற்றில் சிறப்பு வாய்ந்தது வைகையே. "புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி வையை என்னும் பொய்யா குலக்கொடி” என்று இளங்கோவடிகள் வைகையை புகழ்கின்றார். மதுரையை வளப்படுத்தியதே இந்த வைகை தான். 'வானவரும் காண விரும்பும் வளம் மிகுந்த மதுரை' என மாங்குடி மருதனார் தன்னுடைய மதுரை காஞ்சி எனும் நூலில் கூறுகின்றார். அவர் கூறிய மதுரையையும் வைகையின் அழகையும் இன்றைய நிலையோடு ஒப்பிடவே முடியாது. அன்று இருபுறமும் ஓங்கி உயர்ந்த மரங்கள் வளர்ந்து, எதிர்க்கரையில் உள்ள மரங்களோடு பின்னி பிணைந்து நிழலிலே சென்றாள் வைகை. மரங்களிலிருந்து விழுந்த மலர்கள், நீர் முழுவதும் நிறைந்து மலர்களாக மணம் வீசி சென்றாள் வைகை. 'அன்று' பூக்கடையை சுமந்து சென்ற வைகை, 'இன்று' சாக்கடையை சுமந்து செல்கிறாள், என மனம் நொந்து பாடத்தோன்றுகிறது. இதற்கு காரணம், மனிதனிடம் இருக்கின்ற பேராசையே.

வைகையின் பிறப்பு:தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிறது வைகை. வெள்ளிமலை, மேகமலையில் இருந்து மூல வைகை உற்பத்தியாகி வருஷநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு வழியாக ஒரு பிரிவும், கூடலூர், கம்பம்,பாளையம், சின்னமனூர் வழியாக முல்லை பெரியாறு என்று மற்றொரு பிரிவும் வந்து ,தேனி நகர் அருகே வைகை என்ற பெயரில் இணைந்து வைகை அணைக்கு செல்கிறது. இந்த ஆறால் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் பயனடைகின்றன. வைகை இறுதியில் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் முடிவடைகிறது. இன்றும் மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்வதற்கு வைகை கரையிலேயே பயணித்து செல்லலாம்.

மூல வைகை:மூல வைகை உற்பத்தியாகி வரும் இடங்களெல்லாம் குறிஞ்சி நிலமான மலை பகுதிகள். மேலும் இங்குள்ள எந்த ஊரை எடுத்து கொண்டாலும், நீர் தொடர்பு கொண்டதாகவோ, விலங்குகள் தொடர்பு கொண்டதாகவோ இருக்கும். கடமான் அதிகமாக இருந்த பகுதி என்பதால் கடமலைக்குண்டு, மயில் ஆடிய பாறை மயிலாடும்பாறை, பால் போல் நீர் ஊறிய இடம் பாலூத்து, மலையில் மேகங்கள் இருந்த இடம் மேகமலை. வெள்ளிபோல் இருந்த மலை வெள்ளிமலை, இது போல் அனைத்து ஊர்களும் இயற்கையோடு இணைந்து காரணப்பெயர்களாகவே இருக்கும். புராண காலங்களில் புகழ்பெற்றது வைகை. ஞான சம்பந்தரால் பாடப்பட்டது வைகை. மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்தது வைகை. குடிநீர் கொடுத்தது வைகை.

இன்றைய வைகை:இவ்வளவு புகழ் பெற்ற வைகையை இன்று பார்த்தால் கண்களில் நீர் தான் வடிகிறது. அகன்று விரிந்த வைகை இன்று ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி கூனி குறுகி நடக்கிறாள். கட்டட கழிவுகள், விவசாய கழிவுகளை, மனசாட்சியின்றி மனிதக் கழிவுகளையும் கொட்டி செல்கின்றனர். அளவுக்கு மீறி மணலை அள்ளியதால், நீர் சேமிக்கும் இடமாக இருந்த வைகையாறு, இன்று காய்ந்து போய்விட்டது. நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்திற்கு போய் விட்டது. விவசாயமும் நீரின்றி பட்டுப் போய் விட்டது. குடிநீருக்கே பஞ்சம் வந்து விட்டது. இருபுறமும் ஓங்கி உயர்ந்த மருத மரங்கள் இருந்தன. ஒரு கரையில் மரம் விழுந்தால், மறு கரையை தொடும். அதன் வழியே நடக்கலாம். இம் மருத மரங்கள் நீரை ஊறிஞ்சி வறட்சியில் நீரை வெளியேற்றும். அதனால் அந்த இடமே குளிர்ச்சியாக இருக்கும். தற்போது அந்த மரங்களும் இல்லை. குளிர்ச்சியும் இல்லை. ஊரின் அடையாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இன்றைய இளைஞர்களுக்கு ஊரின் பெயரே ஏன் வந்தது என்று தெரியாமல் போய் விட்டது. இயற்கையை நம் பாழாக்கி விட்டு இயற்கை நம்மை பாழாக்கி விட்டதே என்று எண்ணி இப்பகுதி மக்கள் நகரை நோக்கி புலம் பெயர்கின்றனர்.

என்ன செய்யலாம்:ஆறுகளை பாதுகாக்க, குப்பையை கொட்டக்கூடாது. அளவுக்கு மீறி மணல் அள்ளக்கூடாது. ஆறுகள் வறண்டால் நம் வாழ்வு வறண்டு விடும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஊர்களை எல்லை வகுத்து கண்காணித்தது போல் ஆற்றையும் கிராம ஊராட்சிகள் கண்காணிக்க வேண்டும். குப்பை கொட்டும் இடமாக பார்க்காமல் நாம் கும்பிடும் இடமாக ஆறுகள் மாற வேண்டும். இளைய தலைமுறைக்கு ஆறுகள் அணைகள் இவற்றின் பெருமைகளை சொல்லித்தர வேண்டும். வைகையில் கண் வையுங்கள், அதன் அழகை காண! வைகையில் கால் வையுங்கள், அதன் வனப்பை நடந்து அறிய! வைகையில் கை மட்டும் வைக்காதீர்கள். கங்கை போல் வைகையும், புண்ணிய நதியே! கங்கைக்கு செலவழிப்பது போல் கால்பங்கையாவது வைகைக்கும் செலவழியுங்கள். நாங்கள் வைகையை வணங்குவோம். வைகையை வளப்படுத்திய உங்களையும் வணங்குவோம்.

- கடமலை சீனிவாசன், தலைவர், திருவள்ளுவர் வாசகர் வட்டம், கடமலைக்குண்டு, 94424 34413 tamilseenivasan78gmail.com

Advertisement
 

வாசகர் கருத்து (4)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement