Advertisement

நான் முழு டெக்னீஷியன் இல்லை : மனம் திறக்கும் எடிட்டர் லெனின்

நடிகர்களின் பெயர்களை உச்சரித்த காலத்தில், இயக்குனர்களின் பெயர்களையும் உச்சரிக்க செய்தவர் பீம்சிங். 'பா' வரிசை படங்கள் மூலம், நடிகர் திலகம் சிவாஜிக்கு தனித்த அடையாளத்தை தந்தவர். தாய் எட்டடி என்றால், குட்டி 16 அடி பாயும் என்ற பழமொழியை மெய்ப்பித்தவர் அவரது மகன் பி.லெனின்.
திரைப்பட இயக்குனர், எடிட்டர், எழுத்தாளர் என பன்முக திறமை இவருக்கு உண்டு. 1979ல் 'உதிரிப்பூக்கள்' படத்தில் எடிட்டராக சினிமா உலகில் காலடி வைத்தார். அன்று தொடங்கிய பயணம் தமிழ், மலையாளம், இந்தி என இன்று வரை நீடிக்கிறது. 100 படங்களுக்கு மேல் எடிட்டிங் செய்துள்ளார். சமீபத்தில் இவரது எடிட்டிங்கில் வெளி வந்த படம் 'ராமானுஜம்'. 1992ல் இவர் இயக்கிய 'நாக்- அவுட்' என்ற குறும்படம் தேசிய விருது பெற்றது. 2001-ல் இயக்கிய 'ஊருக்கு நுாறு பேர்' திரைப்படம் சிறந்த டைரக்டருக்கான தேசிய விருதையும், சிறந்த திரைப்படத்துக்கான விருதையும் பெற்றது.
காரைக்குடியில் திரைப்பட பயிற்சி அளிக்க வந்த அவர் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்தார்.
* சினிமா துறையில் சாதித்த நீங்கள் இத்துறை தொடர்பான ஆசிரியராக மாறியது ஏன்?
பெரிதாக நான் படிக்கவில்லை. அப்போதைய எஸ்.எஸ்.எல்.சி.தான். படிப்பு இல்லாததால் திரைப்படத்துறை சம்பந்தமான, பெரிய இன்ஸ்டிடியூட் பக்கம் செல்ல பயம். என்னோடு அந்த பயம் விலகட்டும். வரும் தலைமுறையினர், பயமின்றி திரைப்பட படிப்பை படிக்க வேண்டும். பயத்தை போக்க வேண்டும், என்பதால் ஆசிரியராக மாறி, சினிமாவில் இருந்து கொண்டே கிராமப்புற மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகிறேன்.
* எடிட்டிங் துறை விரும்பி ஏற்றுக்கொண்டதா?
அப்பாவின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்வையாளனாக நுழைந்தேன். ஷூட்டிங் தாண்டி லேப், எடிட்டிங் உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன். எடிட்டிங்கில் நான் பணியாற்றினாலும், முழு டெக்னீஷியன் ஆகவில்லை. முழு மனிதனாக உள்ளேன்.
* இயக்குனராக சந்தித்த கஷ்டங்கள்?
கஷ்டம் என்று சொல்ல முடியாது. விரும்பி ஏற்று கொண்டது தானே.
* குறும்படம், -திரைப்படம் வித்தியாசம் என்ன?
திரைப்படத்தில் நம்மால் சொல்ல முடியாத விஷயத்தை குறும்படத்தில் சொல்ல முடியும். கற்பனை திறனை பிரதிபலிப்பது குறும்படம். அதை சினிமாவாக எடுக்கும்போது அதன் ரசனை, கட்டமைப்பு மாறுகிறது. தற்போது, குறும்படத்தை எடுத்து அதை அப்படியே திரைப்படமாக எடுக்கின்றனர். அது வெற்றி பெறாது. அந்த வழியும் சரியானது அல்ல. திரைக்கதை தொகுப்பு, குறும்பட தொகுப்பு நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
* லெனின் பறை இசைக் கலைஞரா?
நடனத்துடன் உடல் அசைவுகளை வெளிப்படுத்துவது பறை இசைக்கருவி மட்டுமே. தோல் இசைக்கருவிக்குரிய தனித்துவ அடையாளம் இதில் உள்ளது. இதன் இசைக்கு ஆடாதவர்கள் கிடையாது. உலகம் முழுவதும் தோல் இசைக்கருவிகள் உள்ளன. அதில், தமிழர்களின் அடையாளம் இந்த பறை இசைக் கருவி. அதனால், அந்த இசையை கற்று கொண்டேன்.
* எப்போதும் சிரித்த முகம். எப்படி உங்களுக்கு சாத்தியம்?
சிரிப்பு எந்த நாட்டில் கிடைக்கும் என்று தேடுகின்றனர் பலர். ஆனால், அது நம்முள் உள்ளது. சிரிப்பதற்காக காசு கொடுத்து, உடற்பயிற்சி செய்கின்றனர். கைத்தட்டும், சிரிப்பும் நம் உடலை உற்சாகப்படுத்தும். சோம்பலை விரட்டி, முகத்தை பொலிவாக்கும். அதனால் சிரித்து கொண்டிருக்கிறேன்.
* மக்களின் ரசனை எவ்வாறு உள்ளது?
கலாசார படங்களை மக்கள் இன்றும் விரும்புகின்றனர். படங்கள் வெற்றி பெறவில்லை என்றால், மக்களை குறை கூறுகின்றனர். நாம் சரியாக கொடுக்கவில்லை, என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். .
* படத்தின் வெற்றி, தோல்விக்கு எடிட்டிங் காரணமா?
அப்படி சொல்ல முடியாது. எடிட்டிங் சிறப்பாக செய்த பல படங்கள் தோல்வியை தழுவியிருக்கின்றன. கதைக்களமே ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிக்கும்.
தொடர்புக்கு filmmakerleninyahoo.com
Advertisement
 

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement